” திருட்டு “
தெரு முழுக்க காவல்துறை வாகனங்கள் . குத்து மதிப்பாக பார்த்தால்கூட முப்பதுக்கு மேலே தேறும் . மாவட்ட அளவிலான உயர் அதிகாரி தொடங்கி அந்தப் பகுதி காவல் நிலைய கான்ஸ்டபிள் வரை அந்த வீட்டின் முன் குழுமியிருந்தனர் . ஒன்றுக்கு இரண்டாக மோப்பம் பிடிக்கும் நாய்கள் , கைரேகை நிபுணர்கள் , புகைப்படக்காரர்கள் , தடய அறிவியல் குழுவினர் . ஒரு பெரும் பட்டாளமே குழுமியிருந்தது .
வீட்டிற்கு வெளியே முந்தியடித்துக் கொண்டு நின்ற பொது மக்களை அங்கிருந்து விரட்டி அடிப்பதற்காகவே நாலு காவலர்கள் கையில் லத்தியோடு .
இருக்காதா பின்னே , திருட்டுப் போனது நகரின் அதி முக்கிய அரசியல் பிரமுகர் வீடாயிற்றே . மாநில அளவிலும் முக்கியப் பிரமுகர் . சட்டசபை , லோக்சபை , கீழ்சபை , மேல்சபை என அவர் பார்க்காத சபைகளே கிடையாது . உள்ளாட்சியிலும் பல பதவிகளை வகித்திருப்பவர் . சில ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்துள்ளார் . முதல் அமைச்சர் , மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் கூட மயிரிழையில்தான் நழுவிப் போனதாக பேச்சு உண்டு . ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டனாக அரசியல் வாழ்வை ஆரம்பித்து , பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து இன்று அரசியல் வாழ்வில் உச்சத்தில் இருப்பவர் . பல தடவை கட்சி மாறினாலும் ஆளப் போவது எந்தக் கட்சி என்று முன்னதாகவே ஊகித்து இடம் பெயர்வதில் வல்லுநர் .
இப்போதைய அரசிலும் மந்திரி ஆக வேண்டியவர்தான் . கட்சி மாறி சில மாதங்களே ஆனதால் தள்ளிப் போகிறது . எப்படியும் இன்னும் சில மாதங்களில் நிச்சயம் என்று கட்சி மேலிடம் எழுதிக் கொடுக்காத குறைதான் . உள்கட்சியில் எதுவும் எதிர்ப்பு வந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் அதற்கு காரணம் . இல்லையெனில் இந்நேரம் முக்கியத் துறையின் அமைச்சராக ஆகியிருப்பார் . அவருக்காகவே இடைத் தேர்தல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும் அளவிற்கு சாமர்த்தியசாலி . அரசியலில் பழம் தின்று கொட்டை மட்டுமல்ல பழங்களையே நேரடியாக போட வைக்கும் அளவிற்கு அளவில்லா திறமை படைத்தவர் .
சம்பவம் நடந்ததிற்கு முந்திய தினம் நடைபெற்ற , மனைவியின் ஒன்று விட்ட தம்பி வீட்டு திருமணத்திற்காக வங்கிப் பெட்டகங்களில் இருந்து எடுத்து வைத்திருந்த நகைகள் , வீட்டில் இருந்த ரொக்கம் உட்பட மொத்தமாக தட்டிக் கொண்டு போய் விட்டார்கள் . காவல்காரரைக் கட்டிப் போட்டு விட்டு கொள்ளையடித்து விட்டார்கள் . திருமணத்திற்கு வந்திருந்த வெளியூர் உறவினர்களைக் கூட்டிக் கொண்டு தலைவர் தன் குடும்பத்தோடு சுற்றிலும் உள்ள கோவில்களுக்கு போய் விட்டு திரும்புவதற்குள் பகல் நேரத்திலேயே நடந்து முடிந்து விட்டது எல்லாம் .
காவல்துறை உயர் அதிகாரி அந்தத் துறைக்கே உரிய குணத்தோடு ஓர் ஓரமாக இன்னும் பதற்றம் தணியாமல் நின்று கொண்டிருந்த காவல்காரர் மீது ஒரு சந்தேகப் பார்வையை படர விட்டார் .
அந்தப் பார்வையின் பொருளை புரிந்து கொண்டவராக தலைவர் அவரை அருகில் அழைத்தார் . “
அவன் மேலே சந்தேகப் படாதீங்க . சின்னப்பையனாக இருக்கும்போதிலிருந்து என் கூடவேதான் இருக்கான் . எனக்காக உயிரைக் கூட கொடுப்பான் . தூரத்துச் சொந்தம்தான் . நாய் மாதிரி நன்றியுள்ளவன் . அவனை விசாரித்து நேரத்தை வீணாக்காமல் நீங்க வேற கோணத்தில யோசிச்சு சீக்கிரமாக கொள்ளை அடிச்சவங்களைக் கண்டு பிடிங்க . “
என்று மெல்லிய குரலில் கூறினார் தலைவர் . புரிந்து கொண்டவராக தலையை ஆட்டினார் அதிகாரி . தலைவர்களைப் புரிந்து கொள்ளல்தானே முக்கிய தகுதி .
“ திருட்டுப் போன பொருள்களோட பட்டியல் போட்டுத் தர முடியுமா ? ஒரு பொருள் சிக்கினால் கூடப் போதும் . அதை வைச்சுகிட்டு மொத்த கூட்டத்தையும் மொத்தப் பொருள்களோடு அமுக்கிடலாம் . ஒரு தனிப்படையே போட்ரலாம் . ஒன்னும் கவலைப் படாதீங்க . நாங்க எதுக்கு இருக்கோம் ? “
அதிகாரி மிகப் பணிவோடு குனிந்து சொன்னார் .
திருடு போன பொருட்களின் பட்டியலை சொல்லச் சொல்ல அவரது உதவியாளர் கார்பன் வைத்து எழுதி அவரிடம் காட்டினார் . மிக கவனமாக வாசித்துவிட்டு முதல் பிரதியில் கையெழுத்து போட்டு மாவட்ட காவல் அதிகாரி கையில் கொடுத்தார் . மறக்காமல் கார்பன் நகலை தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார் .
” சார் , வேற எதுவும் விட்டுப் போயிடலியே ? “ அதிகாரி பொறுப்போடு விசாரித்தார் .
” முப்பது பவுன் சங்கிலியில இருந்து பேரனோடஅரைப்பவுன் மோதிரம் வரைக்கும் எழுதியிருக்கேன் . எப்படியாவது கண்டு பிடிச்சுடுங்க . ரொக்கம் உட்பட மொத்த மதிப்பு நாலு கோடிக்கு மேல தேறும் . “
என்னதான் அவரே விவரமாகச் சொல்லி விட்டாலும் விசுவாசம்
காட்ட வேண்டியது அதிகாரியின் முக்கிய கடமை ஆயிற்றே . அதிகாரி முகத்தில் தெரிந்த தயக்கத்தின் பொருள் உணர்ந்தவராக அவரே பதிலும் சொன்னார் .
” கவலைப் படாதீங்க . அத்தனையும் சமீபத்து தேர்தலில் காட்டிய சொத்துக் கணக்கில் கூட இருக்கு . கொடுத்திருக்க பட்டியலில் உள்ள எல்லாமே கணக்கில் வரக் கூடியதுதான் . வருமானத்துறை பிரச்சினைல்லாம் வராது . கவலையே படாமல் காரியத்தில் இறங்குங்க . நாலு கோடி பெரிய விஷயமில்லை . நாலு கோடி என்னா , நாற்பது கோடி கூட சம்பாதிச்சிடலாம் . என்கிட்டயே வேலையைக் காட்டிட்டானுகளேங்கிற ஆத்திரம்தாம் மனசைக் குடையுது . அதோட திருட்டு போனதில நிறைய சென்டிமெண்டான பொருட்கள் இருக்கு. அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு . “
அதிகாரி திருப்தி அடைந்தவராக ” கவலைப் படாதீங்க சார் , எப்படியும் கண்டு பிடிச்சுடுவோம் . முதல்வரே நேரில போனில் பேசியிருக்காரு . தேவைப்பட்டால் தனிப்படையே அமைச்சுடுவோம். கிடைச்ச அத்தனை ரேகைகள் , தடயங்கள் எல்லாம் சேகரிச்சாச்சு . மோப்ப நாய்களும் நல்ல பயிற்சி உள்ளவைதான் . கூடிய சீக்கிரமே கண்டு பிடிச்சிடலாம் . வழக்கமான பார்ட்டிங்களாத்தான் இருக்கும் . ஒருத்தன் விடாம பிடிச்சுட்டு வந்து தட்டுற மாதிரி தட்டினா தானாக ஒத்துக்குவானுங்க . “ கூடுதலாக முகத்தில் பணிவைக் காட்டிச் சொன்னார் அதிகாரி . தலைவர் முகத்தில் இலேசான திருப்தி தெரிவதைப்
பார்த்ததும் மனதிற்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளியே காட்டாமலேயே வணக்கம் சொல்லிவிட்டு தன் படைகளோடு கிளம்பினார் அதிகாரி .
“ ஒரு நிமிஷம் … “
கிளம்பிய அதிகாரி நின்றார் . மீண்டும் பணிவோடு அருகில் வந்து பவ்வியமாக
நின்றார் .
” விஷயம் அதிகமாக வெளியே பரவ வேண்டாம் . பிரமுகர் வீட்டில் கொள்ளைன்னு மட்டும்
நியூஸ் போட்டால் போதும் . பத்திரிகைக்காரங்களை நான் பார்த்துக்கிறேன் . உங்க டிபார்ட்மெண்ட்ல இருந்து சத்தம்
அதிகம் வராமல் பார்த்துக்கிடுங்க . அப்புறம் இன்னொரு விஷயம் . பார்ட்டி மாட்டுச்சுன்னா வெளியே நியூஸ்
போறதுக்கு முன்னாடி எனக்கு தகவல் கொடுத்திடுங்க . எங்கிட்டெயே ஆட்டத்தைக் காட்டின பயலுக
மூஞ்சிகளை பார்க்கணும் . கொடுக்கிற அடியில பயலுக இந்தப் பக்கமே இனிமே தலை வைக்காம நம்ம
ஆளுங்க பார்த்ததுக்கு அப்புறம் நீங்க மற்ற ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பார்த்துக்குங்க . ”
“ நிச்சயமா சார் . அப்ப நாங்க கிளம்புறோம் . அநேகமாக நாளைக்கு ராத்திரிக்குள்ள பார்ட்டியை
வளைச்சுடுவோம் . கையோட இங்க கூட்டிட்டு வந்திடறோம் . “
“ நல்லது . உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு . முக்கியமா லட்சுமி டாலர் போட்ட இருபது
பவுன் சங்கிலி . அதைப் போட்டுட்டுதான் புது வருஷத்துக்கு கோவிலுக்கு போவா என் மனைவி . சொல்லப் போனால் அந்த சங்கிலி செஞ்சப்புறம்தான்
என் அரசியல் வாழ்க்கையே மேலே மேலே போக ஆரம்பிச்சுது . கல்யாணத்துக்கு கூடப் போட்டுகிட்டுதான்
வந்தாள் . கெட்ட நேரம் கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் கழட்டி வச்சுட்டா . ரொம்ப ராசியான பொருள் . மற்ற எல்லாம் போனால் கூடப் போகுது . அதனால மாட்டினாங்கன்னா நேரா பொருட்களோடு
இங்கே கூட்டிட்டு வந்திடுங்க . பொருள் உங்களுக்கு அடையாளம் தெரியாமல் மிஸ் ஆயிடக் கூடாது பாருங்க . அது கிடைக்கலேன்னா அவளை சமாதானப் படுத்தவே
முடியாது . அவளை விடுங்க . எனக்கே மனசு தாங்காது . சீக்கிரமே அமைச்சர் ஆகிற வாய்ப்பு இருக்கு . அந்த சங்கிலி போச்சுன்னா வாய்ப்பு நழுவிப்
போயிடக் கூடாது . கெட்ட சகுனம் மாதிரி அது திருட்டு போனது
மனசில உறுத்துது . “ அமைச்சர் என்ற வார்த்தையை அழுத்தம் கொடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டார் அதிகாரி .
“ கவலையை விடுங்க . ஒரு திருகாணி கூட மிஸ் ஆயிடாம திரும்பி
வந்துடும் . மனசை போட்டு குழப்பிக்கிடாதீங்க . “ அதிகாரி மீண்டும் வணங்கிவிட்டு நகர்ந்தார் . மொத்தப் படையும் அவரைத் தொடர்ந்து வெளியேறியது .
அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்து சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தார் . அரசியலில் நுழைந்ததில் இருந்தே எதற்குமே அசராத அவர் முகத்தில் எப்போதும் இல்லாத தளர்ச்சி . தயங்கித் தயங்கி வந்து எதிரில் உட்கார்ந்த மனைவியிடம் ” கவலைப்படாதே எல்லாம் சீக்கிரம் கிடைச்சிடும் . முதல்வர்கிட்ட இருந்தே அழுத்தம் வந்திருக்கு . அதான் மொத்தப் படையும் வந்து குவிஞ்சுட்டுது . ஆனாலும் நம்மகிட்டயே கைவரிசையைக் காண்பிச்சுட்டானுங்களே . அதான் மனசு தாங்கல . “
” அதில்லீங்க … “ மனைவி இழுத்தார் .
“ அப்புறம் வேறென்ன கவலை ? “
“ இல்லீங்க பேரன் மோதிரம் வரை பட்டியல் போட்டுக் கொடுத்திட்டீங்க . சரிதான் . ஆனால் போன வாரம் ஒரு சிலையைக் காண்பித்து இன்னைக்கு மதிப்பு நாற்பது கோடி ரூபா தேறும்னு சொன்னீங்களே . சீக்கிரமே சிலையை வித்து பணம் கைக்கு வந்திடும்னு வேற சொன்னீங்க . அந்தச் சிலையையும்தான் அடிச்சுட்டுப் போயிட்டானுங்களே . அவ்வளவு மதிப்புள்ள அதைப் பட்டியலில் சேர்க்கலியே … “ எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த மனைவியின் முகத்தில் குழப்பமும் கவலையும் .
இருவருக்கும் இடையில் இருந்த டீப்பாயில் அன்றைய தினசரி பிரிக்காமல் அப்படியே கிடந்தது . மனைவிக்கு பேப்பர் படிக்கும் வழக்கமெல்லாம் கிடையாது . தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே அவளது ஒரே பொழுது போக்கு . அதனால் அந்த செய்தியை மனைவி பார்த்திருக்க வாய்ப்பு இல்லை . அதை அவள் பார்த்து விட்டால் தேவை இல்லாத குழப்பம் குடும்பத்தில் உருவாகி விடக் கூடும் என்ற பயம் அவருக்குள் உருவானது . அவர் பார்வை தினசரியின் தலைப்பில் பதிந்தது . முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தியாக போட்டுத் தொலைத்திருந்தான் பத்திரிகைக்காரன் . எல்லா செய்தித் தாள்களிலும் வந்திருந்த செய்திதான் . ஆனால் அவர் மற்ற பத்திரிகைகளை வாங்குவதில்லை . நல்லதாகப் போயிற்று என்று நினைத்துக் கொண்டார் .
தனிப்படை அமைப்பு
சில மாதங்களுக்கு முன் காரியாகோவில் பழைய சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலையை இதுவரை கண்டு பிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது .
பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட அந்த உலோகச் சிலையின் இன்றைய மதிப்பு பல கோடிகள் . எனவே அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று பல முனைகளில் இருந்தும் அழுத்தம் வருவதால் அதைக் கண்டு பிடிக்க டி எஸ் பி சோமநாதன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து அரசு உத்தரவு வெளியாகியுள்ளது .
சோமநாதன் திருடு போன சிலைகளை கண்டு பிடிப்பதில் பல ஆண்டு கால அனுபவம் உள்ளவர் என்பது தெரிந்ததே .
அவர் இன்று அளித்த பேட்டியில் …
தலைவர் சட்டென்று தினசரியை எடுத்து தலைப்பு பக்கம் தெரியாத வகையில் மாற்றி மடித்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார் .
பக்கத்து மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் திறமையான தொழில் பழகிய ஆட்களை வைத்து கொள்ளையடித்து அவர் பதுக்கி வைத்திருந்த அந்தச் சிலையை தேடுவதற்கு மாநில காவல் துறை தனிப்படை அமைத்து தேடிக் கொண்டிருக்கும் விஷயத்தை மனைவியிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் முழித்தார் தலைவர் .
“ அது கிடைச்சுடும் விடு . அதுக்கு வேற வழி இருக்கு . “
அப்போதைக்கு அந்தப் பதிலை மட்டும்தான் அவரால் மனைவிக்கு சொல்ல முடிந்தது .
“ சரி , தலை வலிக்கு . ஸ்ட்ராங்கா ஒரு காப்பி அனுப்பிட்டு நீ போய் விருந்தாளிகளைக் கவனி . “
-------------------------------------------------------------------------------------
[ புதுப்புனல் ஜூலை 2021 ல் வெளிவந்தது ]


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக