வெள்ளி, 26 ஜூன், 2020

நிகழ்தகவுகள் [ சிறுகதை ] - ரமணி முருகேஷ்


நிகழ்தகவுகள் [ சிறுகதை ]

கதை - ரமணி முருகேஷ்            ஓவியம் - சண்முகம்



ரயில் வாராங்கல்  நிலையத்திற்குள் நுழைந்த போது இரவு மணி எட்டு. வண்டி நிற்கும் முன்னரே டீ காபி இட்லி வடை பூரி பானிபானி என்ற வியாபாரிகளின் குரல்கள் பெட்டிக்குள்ளேயே ஒலிக்கத் தொடங்கியிருந்தன.
முன்னல்லாம் டூ டயர் ஏசி கோச்சுக்குள்ள வந்து இப்படியெல்லாம் வித்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இப்ப எல்லாந் தலகீழ என்று முகத்தைச் சுளித்து காதுகளை கைகளால் பொத்தியபடி அங்கலாய்த்தார் எதிர் இருக்கை பெரியவர் தன் மனைவியிடம்.
ஜன்னல் ஓரத்தில் என் மனைவி வேணியின் மடியில் அமர்ந்து விற்றுக் கொண்டு போகிறவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஒன்றரை வயது மகள் அம்மு.  தெலுங்கு செய்தித்தாளால் சுற்றப்பட்ட பொதியை என்னைத்  தாண்டி அம்முவிடம் நீட்டியவனைத் திரும்பிப் பார்த்தேன். அழுக்குச்சட்டை அழுக்கு வேட்டி எண்ணெய் காணாத தலை நாலு நாள் தாடி வியர்வை நாற்றம் என படு பரிதாபமாக இருந்தான்.  நாற்பது வயது இருக்கலாம்.
வேண்டாம் அம்மு என்பதற்குள்அவனிடம் இருந்த அந்த பொதியை வாங்கியிருந்தாள். வெறும் 25 ரூபாய்தான் ஜி ஒரு பார்சல். அஞ்சு இட்லி இருக்கும். ரெண்டு பார்சல் வாங்கிக்கோங்க …..
இல்லப்பா பசி இல்ல.
உங்களுக்கு பசியில்ல ஆனா எனக்கு பசிக்குதுல்ல என்று அதட்டலாகச் சொன்னவனைப் பொருட்படுத்தாமல் அம்முவிடம் இருந்து வலுக்கட்டாயமாக பொதியை வாங்கி இந்தா இந்த ரூபாயை வச்சுக்க ஆனால் எனக்கு இட்லி வேண்டாம் என பொதியோடு சேர்த்து ஐம்பது ரூபாயை அவன் கையில் கொடுத்தேன்.
இட்லிய வாங்கினாதான் டப்பு வாங்குவேன். உங்களுக்கு வேண்டாம்னா யாராவது பசிக்கிறவன் வருவான் கொடுங்க ரெண்டு பேர் பசியைத் தீர்த்த புண்ணியம் கிடைக்கும் என்றவன் இருக்கையில் பொதிகளை வைத்தான்.
இத எடுத்துட்டுப் போன்னு சொல்றேன்ல.. சும்மா தொணதொணன்னுகிட்டு..
ஹலோ .. அவர்தான் சொல்றாருல்ல எடுத்துட்டு. போடா என்று பெரியவர் அவர் பங்குக்கு எரிந்து விழுந்தார். அவருக்கு அவன் நிற்பதே பிடிக்கவில்லை என்பது அவர் உடல்மொழியிலேயே தெரிந்தது .
பிச்சைக்காரனை ழைச்சு சாப்புடச் சொல்றது.. உழைக்க நினைக்கிறவனுக்கு பிச்சை போடுறது.. ஆண்டவா!  தின்னா தின்னு இல்லாட்டித் தூக்கிப் போடு என்று ஒருமையில் பேசிவிட்டுச் செல்பவனின் முதுகிலேயே இட்லியை எறிந்து விடத் தோன்றியது.
விக்கிறவன் கொஞ்சம் சுத்தமா வரக்கூடாதா என்றாள் வேணி.ஆமா ஒரே நாத்தம் என்ன மாவோ..எப்ப பண்ணானோ.. யாரும்  பிச்சைக்காரங்க வந்தா போட்டுரலாம் என்றபடி முதுகுக்குப் பின்னால் புத்தகங்கள் வைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த வலைப் பையில் சொருகினேன்.
வேண்டா வேண்டாம்னாலும் கேட்கிறானா பாருங்க.. வெளியே தூக்கி போட்டுருங்க யாராவது பிச்சைக்காரனுக்கு கொடுத்து அவனுக்கு ஏதாவது நோய்வந்துடப் போகுது என்றார் எதிர் இருக்கைக்காரர் மனைவி.
பொதியைப் பிடுங்கியதால் அழத் தொடங்கிய அம்முவை அதைத் தின்னா பூச்சி வரும்மா. இந்த பாரு அத்தை கொடுத்த சப்பாத்தி சூப்பரா இருக்கும். இதைச் சாப்பிடுவோம் என்று ஊட்டத் தொடங்கியிருந்தாள் வேணி.
இன்னுமா சப்பாத்தி இருக்கு ! அக்கா எப்போதும் அப்படித்தான் அவள் ஒரு வேளைக்கு வைக்கும் உணவை இரண்டு நேரம் அல்லது மூன்று நேரம் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் நாங்கள் கிளம்பிய நேற்று இரவுக்கும் இன்று காலைக்கும் மட்டும் தயார் செய்து கொடு போதும் என்று கறாராகச் சொல்லியிருந்தேன். அரை மனதாக ஒப்புக் கொண்டு வைத்த இட்லி மற்றும் சப்பாத்திகளைத்தான் நேற்றிரவு இன்று காலை மதியம் இரவு என உண்டு கொண்டிருக்கிறோம்.
விமானப்படையில் வேலை எனக்கு. நேற்று அதிகாலை அமிர்தசரஸில் இருந்து கிளம்பி மதியம் டில்லி அடைந்து அக்காவையும் பிள்ளைகளையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு இரவு ரயில் ஏறினோம்.
அக்காவுக்கு நான் டில்லியில் அவள் வீட்டுல இரண்டு நாட்களாவது தங்கி விட்டு போகாதது வருத்தம். வாரதயாவது சொன்னானா பாரு என்றவளிடம் அம்மு, லக்கேஜ்லாம் வச்சுக்கிட்டு நடக்குறது கஷ்டம். நான் வர்றேன்னு சொன்னா நீ வேற அம்மாக்கு அப்பாக்கு அம்முவுக்குன்னு ஒரு பெட்டியே தயார் பண்ணீருவ. அதான் சொல்லலன்னு சமாதானப்படுத்தினேன்.
எதிர் இருக்கை தம்பதியருக்கு ரயிலிலேயே ஏற்பாடு செய்திருந்த உணவுகள் வந்திருந்தன. முன்னர் ரயிலில் உணவு எப்படி இருக்கும் இப்போது எப்படி இருக்கிறது என ஒப்பிட்டுச் சொல்லியபடியே சாப்பிட்டனர். நாங்களும் ஒருவழியாய் சப்பாத்திகளைத் தீர்த்திருந்தோம்.
காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை வந்து விடும். இரவு எட்டரைக்கு மேல்தான் பொதிகை எக்ஸ்பிரஸ் தென்காசிக்கு. பகல் நேரத்தில் வள்ளி மாமா வீட்டுக்குப் போகணும். இல்லனா என்னடே மாப்ள.. பெரிய மனுஷன் ஆயிட்டியோடே.. மெட்ராஸத் தாண்டி போற.. தாய்மாமாவ  பாக்கணும்னு தோண மாட்டங்க எனத் தொலைபேசியில் சிடுசிடுப்பார். அத்தை அடையோ பூரியோ சுட்டுத் தருவார்கள். உங்க அம்மை மாதிரில்லாம் எனக்கு செய்ய தெரியாதுப்பா என்று சொன்னாலும் அருமையாக இருக்கும்.. வேணி அருமையான பொறுமையான புள்ளடா என்று அத்தை ஒரு வாஞ்சையுடன் அவளைப் பார்ப்பது என் நெஞ்சை நிறைக்கும்.
நானும் எதிர் இருக்கைப் பெரியவரும் மேல் படுக்கைகளிலும் என் மனைவியும் பெரியவரின் மனைவியும் கீழ் படுக்கைகளிலும் படுத்திருக்க ரயில் சீரான சத்தத்துடன் போய்க் கொண்டிருந்தது. என் மனைவி அருகில் படுத்து இருந்த மகள் மட்டும் அவள் மொழியில் தூங்கிக் கொண்டிருந்த தன் அம்மாவிடம் புரியாத பாஷையில் வாயைக் குவித்துக் குவித்து ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள்.குழலினிது யாழினிது குறள் வந்து போனது . அந்த இசையிலேயே உறங்கிப் போனேன்.
அதீதமாய் கேட்ட மனிதக் குரல்களில் விழித்துக் கொண்டேன் நான். என் படுக்கையில் இருந்து தலையை சற்று வெளியே நீட்டிக் குனிந்து பார்த்தபோது வேணியும் அம்முவும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கைபேசியை ஒளிரச் செய்து நோக்கிய போது மணி ஆறென்றது. இன்னும் ஒண்ணு ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்னை போய்விடுவோம் என்ற நினைப்பைக் கெடுத்தது இன்ஜின்ல எதோ பெரிய பிரச்சனையாம் இன்னும் மூணு நாலு மணி நேரத்துக்கு வண்டி நகருமான்னே தெரியல என்று யாரோ யாரிடமோ சொலலும் குரல்.
அடுத்த அரை மணி நேரத்திற்குள் பெட்டி முழுவதும் சலசலக்க ஆரம்பித்திருந்தது. இந்திய ரயில்வே துறையின் அலட்சியத்தைப் பற்றியும் தங்களுக்கு இதற்கு முன் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருந்தனர்..
எழுந்து அமர்ந்திருந்த பெரியவருக்கும் மனைவிக்கும்பொத்தாம் பொதுவாய் குட் மார்னிங் என்றபடி மேலிருந்து இறங்கினேன். என்னத்த குட்மார்னிங் இன்னும் நாலஞ்சு மணி நேரத்துக்கு இன்ஜின் சரியாகாதாமே என வெறுப்பானார்..
இருக்கைக்கு அடியில் இருந்த காலணிகளை காலாலேயே துழாவி வெளியே எடுத்து அணிந்து கொண்டு பல் தேய்க்கச் சென்றேன். ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. பின்பு குடிக்க வைத்திருந்த நீரை எடுத்து பல் தேய்த்து முடித்துவிட்டு வேணியின் காலடியில் வந்து அமர்ந்து கொண்டேன்.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். இரண்டு-மூன்று பெயர் தெரியா மரங்கள் அடங்கிய ஒரு பொட்டல் காடு மஞ்சள் வெயிலில் தகதகத்தது. பயணிகள் பலர் இறங்கி பேசிக் கொண்டும் புகைத்துக் கொண்டும் . ஒன்றிரண்டு இளஞ்ஜோடிகள் எந்த கவலையும் இல்லாமல் உரசி பேசி சிரித்தபடி உலவிக் கொண்டிருந்தனர்.
ரயில் இப்ப கிளம்பாதா என்றபடி எழுந்து கொண்ட வேணி அம்முவுக்கு பால் வாங்கி வச்சிருங்க..தீந்துடாம என்றாள்.ஐயா உங்களுக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்டதற்கு எதுவானாலும் வாங்கி வாருங்கள் ஆனால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் பெரியவர் .. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று சிரித்துவிட்டு  ரயிலின் சமையலறைப் பெட்டி தேடி நடந்தேன்.
அங்கே பெரும் கூட்டம் எதையோ அடிபிடி போட்டு வாங்கிக் கொண்டிருந்தது. உற்றுப் பார்த்ததில் உப்புமா என்று தெரிந்தது.ஒரு கரண்டி உப்புமாவை நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் முண்டியடித்து வாங்கும் திறமையெல்லாம் இல்லாததால் அமைதியாக இருக்கைக்குத் திரும்பினேன்.
பெரியவர்க்கு நான் வெறுங்கையோடு திரும்பியது அதிருப்தியைத் தந்திருக்க வேண்டும். அவ்வளவு கூட்டமா இருக்கு என்று சலித்துக் கொண்டார். 
மணி எட்டரை.  அம்முவும் எழுந்து விட்டிருந்தாள். அவசரத்திற்கு என்று வைத்திருந்த மாரி பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து பெரியவருக்கும் அவர் துணைவியாருக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் உண்ணலானோம்.
கைபேசியில் அம்மா முறுக்கு சுற்றிக் கொண்டிருப்பதை அப்பா படம் பிடித்து அனுப்பியிருந்தார். ஏட்டி ஆச்சியப் பாரு உனக்கு முறுக்குச் சுடுதாங்க என்று அம்முவிடம்  கைபேசியை நீட்டியபோது அதைத் தட்டி விட்டவள் சிணுங்கத் தொடங்கினாள். வேணி, சத்தம் வராமல், பாலுக்கு அழுகிறாள் என்றதாக உதடசைத்தாள்.
மீண்டும் உணவகப் பெட்டிக்கு சென்ற போது கூட்டம் இல்லையே என மகிழ்வதற்குள் பால் கூட இல்லை என்று கையை விரித்தார்கள். இரண்டு தண்ணீர் பாட்டில்களும் பிளாஸ்கில் வெந்நீரும் மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். அம்மு ஸ்நிக்கர்ஸ் சாப்பிட்டபடி கண்ணாடி ஜன்னல் வழி வெளியே  பயணிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெயில் ஏற ஆரம்பித்திருந்தது பொட்டல் காட்டில் உலவியவர்கள் பலர் மீண்டும் பெட்டிக்குள் ஏறி விட்டிருந்தனர்.
விஜயவாடாவில் இருந்து சரி பண்ணுவதற்கு மிஷின் எல்லாம் வந்து விட்டதாம் என்று சொன்னபடி யாரோ கடந்தார்கள். சிலர் சீட்டு விளையாடத் தொடங்கியிருந்தனர். சில அப்பாக்கள் அழும் குழந்தைகளை தூக்கியபடி பெட்டிக்குள்ளே நடந்து கொண்டிருந்தனர். இவ்வளவு தாமதமானால் இன்றிரவு பொதிகை ரயிலைப்  பிடித்து விட முடியுமா இல்லையெனில்என்ன செய்யலாம் என்ற கவலை தொற்றியிருந்தது.
ரயிலை விட்டால் தனியார் பேருந்தில் போய்விடலாம்தான் . ஆனால் பொதிகை ரயிலில் தென்காசிக்கு போவது ஒரு சுகானுபவம் .
ரயில் மதுரையைத் தாண்டி விட்டாலே ஒரு சொல்லொணா  மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். அநேகமாக ரயில் பெட்டி காலியாகி விட்டிருக்கும். வயல்களுக்கும் தோப்புகளுக்கும்  வாழைத் தோட்டங்களுக்கும் நடுவிலூடே ரயில் பாய்ந்து செல்கையில் தோன்றும் உணர்வு அம்மாவின் மடியில் தலை வைத்துக் கொள்வதைப் போன்றது. அதற்காகவே குளிர்சாதன வசதிப் பெட்டியிலிருந்து மாறி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறி அமர்ந்து கொள்வோம்.
எய்யா.. ச்சீனிக் கொய்யாய்யா.. வாங்கிக்க ராசான்னு நார்ப் பெட்டியத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரும் கிழவி, கோயில்பட்டி கட்லே  மிட்டாய் மரபா இஞ்சி மரபாவென ராகத்தோடு தோள் பையிலும் கையிலுமாக கொண்டு வரும் வாலிபன் என ஊர் வாடை அடிக்கத் துவங்கிவிடும்
கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் காற்றை வைத்தே கண்டுபிடித்து விடலாம் கடையநல்லூர் வந்துவிட்டது என்று. தென்காசி காற்று குளிர்ந்துதானிருக்கும். ஆனால் போர்வையைத் தேட வேண்டாம். ஒரு காதலியைப் போல உடம்போடு தழுவி சிலிர்க்க வைக்கும்.
போதும்.. சின்னப் புள்ளை மாதிரி குதி குதின்னு குதிக்காதீங்க ஒரு இடத்தில உட்காருங்க என்பாள் வேணி என் மனநிலையை உள்ளூர ரசித்துக் கொண்டே . . ஆனாலும் குதூகலம் கட்டுக்குள் அடங்காது.
காலை 8:15க்கு தென்காசி சென்றடையும் ரயிலுக்கு அப்பா ஆறு மணிக்கே  வந்து காத்திருப்பார். நடைமேடையில் மிகத் துல்லியமாக நாங்கள் இருக்கும் பெட்டிக்கு நேரே நின்று கொண்டிருப்பார். பயணம் எல்லாம் சௌகரியம்தானே என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மருமகளுக்கு ஒரு புன்னகையைத் தந்துவிட்டு  பேத்தியை வாங்குவதிலேயே குறியாக இருப்பார்.
பேத்தியை வாங்கியதும் அவளை தலைக்கு மேலே தூக்கி அம்மை வந்தியா அம்மை வந்தியா என்று அண்ணாந்து பார்த்துக் கொஞ்சுவார். அம்முவையோ அக்காவின் மகள்களையோ பார்த்தால் மட்டுமே வாயெல்லாம் பல்லாக மனமாரச் சிரிப்பார் அப்பா . கூட வந்த ஆட்டோக்கார முருகன் எட்டு மணிக்கு மேலதானய்யா ரயில் வரும்னு சொன்னா ஐயா எங்க காது கொடுத்துக் கேக்காஹ ஆறு மணிக்கே வந்து குத்த வச்சாச்சு என்றபடி  பெட்டிகளை எல்லாம் சுமந்து செல்வான்.
நண்பகல். எதிரிருக்கைப் பெரியவருக்கு ஏ.சி. குளிரிலும் வியர்த்தது. படபடன்னு வருது என்றவருக்கு பாட்டில் தண்ணீரைக் கொடுத்தேன். காலையிலிருந்து வெறும் ரெண்டு பிஸ்கட் மட்டும்தான் சாப்பிட்டாரா அனேகமாக பசியா இருக்கும்னு நினைக்கிறேன். பசி தாங்க மாட்டார் என்று கலங்கினார் அவர் மனைவி.
பெரியவரை பார்த்ததாலா அல்லது  கடும் பசியா என்று தெரியவில்லை அம்மு ஓவென்று அழ ஆரம்பித்தாள். எத்தனை சமாதானப்படுத்தினாலும் அழுகை நின்றபாடில்லை. அம்முவின் அழுகை சத்தத்திலும் எதிர் இருக்கை பெரியவர் அரைக்கண் செருகி சாய்ந்து அமர்ந்திருந்தார்.
நான் அவர் அருகே போய் சார் சார் என்ற போதுதான் கண்ணில் பட்டன எதிரே அந்த வலைப் பையில் திணித்து வைத்திருந்த இட்லி பொட்டலங்கள்.படக்கென்று எழுந்து அந்தப் பொதிகளை வெளியே எடுத்துப் பிரித்து முகர்ந்து பார்த்தேன். கெட்டுப் போயிருக்கவில்லை. உடனே அந்த இட்லிகளை இரண்டு தட்டுகளில் தட்டி சட்னியைப் பிரித்துக் கொட்டி வேணியிடமும் எதிர் இருக்கை அம்மாவிடமும் நீட்டினேன்.
வேணி அம்முவுக்கும் அம்மா ஐயாவிற்கும் ஊட்ட அம்மு அழுகையை நிறுத்தியிருந்தாள் அவரும் மெல்ல கண்களைத் திறந்தவர் ஒரு மிடறு நீரருந்திவிட்டு தானே தட்டை வாங்கி உண்ணத் துவங்கினார்.
எந்த அருவருப்பும் வியர்வை நாற்றமும் மனதில் தோன்றவில்லை . இப்போதும் அவன் யாரிடமாவது வலுக்கட்டாயமாக இட்லி விற்றுக் கொண்டிருக்கக் கூடும் .அந்த அடாவடி அழுக்குச் சட்டைக்காரனை நினைத்துக் கரம் குவித்தேன்.
ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது.


---------------------------------------------------------------------------------------------------------------
 காணிநிலம் இதழ் எண் 9 & 10 [ ஜனவரி – ஜூன் 2020 ] ல் வெளியானது .

திங்கள், 1 ஜூன், 2020

உருமாற்றம்


உருமாற்றம் .                 [ சிறுகதை ] 

       

“ சுப்ரா “

இந்தக் கதையைச் சொல்லும் அல்லது எழுதும் நான் , உண்மையில் நானல்ல . குழம்ப வேண்டாம் . சொல்கிறேன் . சரியான நேரத்தில் நீங்களாகவே உணர்ந்து கொள்வீர்கள் .
முதலில் அந்தக் கடிதமும் , கூடவே சற்றுக் கனமான அந்தப் புத்தகமும்தான் வந்தன . கடிதத்தில் முகவரி மட்டுமே ஆங்கிலத்தில் . மற்றப்படி கடிதத்திலும் , வளவளப்பான தாளில் உயர்தரமாக அச்சிடப்பட்டிருந்த அந்த புத்தகத்திலும் இருந்த ஒவ்வொரு எழுத்தும் வேறு மொழியில்தான் இருந்தன . பக்கங்களின் அமைப்பில் இருந்து அது முழுவதும் கவிதைகள் அடங்கிய ஓர்  இதழாக இருக்க வேண்டும் என ஊகிக்க முடிந்தது .
உண்மையில் கடிதத்தைப் பிரித்துப் பார்த்த கணத்தில் அது என்ன மொழி என்று எனக்குத் தெரியவில்லை . பின்னர் கணினி முன் அமர்ந்து இணையத்தில் நுழைந்து தேடிய போதுதான் அது எசுப்பானியா மொழி என்பது தெரிந்தது .
கணினி முன் தொடர்ந்து மணிக் கணக்கில் உட்கார்ந்து தேடியதின் விளைவாக அந்தக் கடிதத்தின் சாராம்சத்தை  என்னால் ஓரளவிற்கு மொழி பெயர்க்க முடிந்தது .
மதிப்பிற்குரிய கவிஞர் அவர்களே ...என்று ஆரம்பித்திருந்த அந்தக் கடிதம் கீழே உள்ளவாறு தொடர்ந்தது .
போட்டிக்காக தாங்கள் அனுப்பியிருந்த கவிதை மிகவும் அருமையாக இருந்தது . இயற்கை குறித்து இவ்வளவு வித்தியாசமான கற்பனை இதுவரை உருவாக்கப் பட வில்லை என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஏக மனதான கருத்து . எசுப்பானியா மொழியில் மட்டுமல்ல , எந்த மொழியிலுமே இத்தகைய கற்பனை இதுவரை உருவாக்கப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் தங்கள் கவிதைக்கு முதல் பரிசு வழங்க முடிவு செய்தோம் . இத்துடன் தங்கள் கவிதை வெளியாகியுள்ள இம்மாத இதழையும் அனுப்பியுள்ளோம் . [ பக்கம் 10 ]
இவ்வளவு அருமையான படைப்பிற்கு ஏற்கனவே அறிவித்திருந்த பணப்பரிசு மட்டும் வழங்கினால் போதாது என்பதால் ஒரு சிறப்புப் பரிசும் வழங்க முடிவு செய்துள்ளோம் . பரிசுத் தொகைக்கான பணப்பரிமாற்ற விபரங்களும் , கூடுதலாக உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்புப் பரிசும் இன்னும் சில தினங்களில் உங்களை வந்தடையும் . சிறப்புப் பரிசு மிகவும் அபூர்வத் தன்மை உள்ளது என்பதால் அது குறித்த விஷயங்கள் பரிசுடன் தங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது . அது ஓர் இனிமையான ஆச்சரியமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும் .
பரிசு பெற்றதற்காக வாழ்த்துக்கள் . தங்களிடம் இருந்து இதே போன்ற உயர்ந்த படைப்புகளை எங்களது கவிதைக்கான மாத இதழ் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது .
நன்றி . 
கடிதத்தை கீழே வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து பக்கம் 10ஐ புரட்டினேன் .
பல வர்ணங்களில் அச்சிடப்பட்டிருந்த அழகான இயற்கைக் காட்சி பின்னணியில் இருபது வரிகள் . மீண்டும் கணினி முன் உட்கார்ந்து அந்த கவிதை வரிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்த போது இருட்டி விட்டிருந்தது . என் கவிதைதான் . மொழிதான் வேறு . இலேசாக பசித்த போதுதான் மதியம் சாப்பிடாமலே இருந்தது ஞாபகத்திற்கு வந்தது .
வடிவேலு கடையில் நான்கு சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்ததும் வயிறு நிரம்பி விட்டது . மனம் முழுவதும் பதில் தெரியாத கேள்விகள் நிரம்பியிருந்தன . வழியில் நாசர் கடையில் சிகரட் வாங்கிப் பற்ற வைத்தேன் . தேவைப் படும் என்று தோன்றியதால் இரண்டு பாக்கட்டுகள் வாங்கிய போது நாசர் வியப்பாக பார்த்தான் . வழக்கமாக ஒன்றுதானே . என்ன சார் இரண்டு ? நாசருக்கு சொன்னால் புரியாது . புன்னகைத்து விட்டு நகர்ந்தேன் .
வீட்டிற்குள் வந்ததும் புத்தகத்தை விரித்து பக்கம் பத்தில் பார்வையைப் பதித்தேன் . எவ்வளவு யோசித்தும் குழப்பம் தீரவில்லை . தீராது என்று தோன்றியது .
கவிதை எழுதினாய் , போட்டிக்கு அனுப்பினாய் , பரிசு கிடைத்தது . இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது என்று மணிவண்ணனோ அல்லது ரவீந்திரனோ கேட்பது காதில் விழுகிறது . முதலில் இருந்து சொன்னால்தான் உங்களுக்குப் புரியும் . சொல்கிறேன் .
நிறையப் படித்ததின் விளைவாக நாமும் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றி எழுத ஆரம்பித்த பலரில் நானும் ஒருவன் . நிச்சயமாக எனது எழுத்துகளை நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் படித்திருப்பீர்கள் . தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதி வந்தவனை ஆங்கிலத்திலும் எழுதலாமே என்று தூண்டிவிட்டவன் மகீ என்ற மகேஸ்வரன் . நெருங்கிய நண்பனாக இருந்து பின்னர் எனது தீவீர வாசகனாக மாறியவன்  .  மகீ ஒரு சுவாரசியமான மனிதன் . அவனும் எழுதுவான் . கோடு போட்ட ஒரு தடிமனான நோட்டில் குண்டு குண்டான எழுத்துகளில் நிறைய கவிதைகள் எழுதி வைத்துள்ளான் . அனேகமாக எல்லாமே காதல் குறித்தவை .
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன் . நான் காதல் குறித்து எழுதுவது கிடையாது . எனது எழுத்துகளை படித்திருக்கும் நீங்களும் அதை கவனித்திருப்பீர்கள் . மகீ அடிக்கடி கேட்பான் . நீ ஏன் காதல் கதையோ கவிதையோ எழுதக் கூடாது ? காதல் இல்லையெனில் காவியங்கள் இல்லை என்பான் . எனக்கு காவியங்கள் எழுத ஆர்வமில்லை என்று கூறிப் பேச்சை திசை திருப்பி விடுவேன் .
நீயும் பத்திரிகைகளில் எழுதலாமே மகீ என்ற போது நோட்டின் முதல் பக்கத்தைக் காண்பித்தான் ஒரு தடவை .
என் கவிதைகள்
எனக்கு மட்டும்தான் .
பிறர் படித்தால்
வெறுக்கக் கூடும்
என் கவிதைகளோடு
என்னையும் .

அதன் பின் அவனிடம் அந்தக் கேள்வியை கேட்டதில்லை .

விஷயத்திற்கு வருகிறேன் . ஒரு மாலை நேரத்தில் ஒரு மதுபானக் கூடத்தில் பியர் உறிஞ்சியவாறே கவிதை குறித்துப் பேசிக் கொண்டிருந்த போதுதான் மகீ கேட்டான் . நீ ஏன் ஆங்கிலத்திலும் எழுதக் கூடாது ? அந்த அளவுக்கு எனக்கு அந்த மொழியில் புலமை கிடையாது என்றேன்  முயற்சி செய் முடியும் என்றான் . உனது கற்பனை திறனுக்கு புலிட்ஸர் , புக்கர் , ஏன் நோபல் பரிசு கூடத் தேடி வரலாம் என்று அவன் போட்ட தூண்டிலில் மாட்டிக் கொண்டேன் . மறுநாளே ஹிக்கின்ஸ்பாதமில் தேடிப் பிடித்து கீட்ஸ் , வோர்ட்ஸ்வர்த் , மில்டன் என்று வாங்கிக் குவித்து ஆங்கிலத்தை என் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி விட்டேன் . எழுதவும் ஆரம்பித்து விட்டேன் .
எழுதி அனுப்பியவை அத்தனையும் திரும்பிவர , சோர்ந்து போன போது மகீதான் மீண்டும் கிரியா ஊக்கியாக செயல் பட்டான் . நம் நாட்டில் உள்ள அத்தனை ஆங்கிலப் பத்திரிகைகளும் ரசனை இல்லாத ஜன்மங்கள் யாரிடமாவது மாட்டிக் கொண்டுள்ளன என்று திட்டிவிட்டு சில வெளிநாட்டு பத்திரிகைகளின் முகவரிகளைத் தேடிக் கொண்டு வந்தான் .
அவன் கொடுத்த முகவரிகளில் ஒன்றுக்கு ஒரு கவிதையை அனுப்பிவிட்டு காத்திருந்தேன் . எட்டாவது நாள் நியூயார்க் நகரில் இருந்த அந்த பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் வந்த கடிதம் உயர்தரமான ஆங்கிலத்தில் இருந்தது .
அய்யா , தங்களது கவிதை ஓர் அற்புதமான கற்பனை . ஆனால் நீங்கள் பயன் படுத்தியுள்ள மொழி நடைதான் காலத்தால் மிகப் பழையதாக உள்ளது . கீட்ஸ் , வோர்ட்ஸ்வர்த் எல்லோருமே நல்ல கவிஞர்கள்தான் . ஆனால் இன்றைய கவிதையின் உருவம் வேறு . எங்களது இதழ்களில் சிலவற்றை இத்துடன் அனுப்பியுள்ளோம் . படித்துப் பாருங்கள் . தங்கள் நடையை மாற்றிக் கொள்ளுங்கள் . உங்களது கவிதையின் பொருள் எங்களை மிகவும் ஆகர்சித்துவிட்டது . எனவே நடையை மாற்றி தங்களது படைப்புகளை அனுப்பி வையுங்கள் . காத்திருக்கிறோம் .
பி.கு.: கீழ்கண்ட கவிஞர்களின் படைப்புகளையும் படித்துப் பார்க்கவும்.  அவை உங்கள் எழுத்துகளை நவீனப் படுத்தும் .
என்று முடித்து தொடர்ந்து நிறைய கவிஞர்களின் பெயர்கள் வரிசையாக .  
உடன் வந்திருந்த புத்தகங்களை வாசித்தேன் . கடிதத்தின் உண்மை புரிந்தது . எல்லாக் கவிதைகளுமே புரியாதது போல தோன்றிப் பின்னர்  புரிவதாக இருந்தன . மறு வாசிப்புகளில் வேறு விதமாக புரிவது போல இருந்தன . மீண்டும் மீண்டும் அந்தக் கவிதைகளை வாசித்ததில் அவர்கள் எதிர்பார்த்த நவீன கவிதையின் வடிவம் வசப்பட்டுவிட எழுதிக் குவிக்கத் தொடங்கினேன் . மகீயும் வாசித்துப் பார்த்துவிட்டு சில மாறுதல்கள் சொல்லுவான் . திருத்தி எழுதியவற்றை மின்னஞ்சல் செய்து விட்டுக் காத்திருக்கத் தொடங்கினேன் .
அடுத்த வாரமே முதல் கவிதை அதே இதழில் வெளிவந்ததோடு வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணமும் வந்தது . மகீயும் நானும் பீரோடு கொண்டாடினோம் .
அதன்பின் ஒரே ஏறுமுகம்தான் . உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வெளிவரும் அத்தனை ஆங்கிலக் கவிதை இதழ்களும் எனது கவிதைகள் இல்லாது வராது என்ற நிலை . இன்னும் கொஞ்சம் சேரட்டும் தொகுப்பு கொண்டு வந்து விடலாம் என்று உசுப்பேற்றி விட்டான் . அவன் தேர்வு செய்து வைத்திருந்த பல வெளிநாட்டுப் பதிப்பகங்களின் பெயர்கள் என் வாயில் நுழைந்து வெளிவரவே சிரமப்பட்டது வேறு கதை .
இதுதான் நான் சர்வதேசக் கவிஞன் ஆன கதையின் சுருக்கம் . ஏற்கனவே விட்ட கதைக்கு வருவோம் இப்போது . கவிதைகள் வெளியான இதழ்கள் ஒன்றில்தான் அந்தக் கவிதைப் போட்டிக்கான அறிவிப்பு கண்ணில் பட்டது . பிரமாண்டமான பரிசுத் தொகைகள் என்ற வாசகங்கள் மனத்தில் ஆசைகளை எக்கச்சக்கமாக உருவாக்க , இரவும் பகலும் யோசித்து , யோசித்து , எழுதி , அடித்து , எழுதி , அடித்து ….ஒரு வகையாக எழுதி முடித்த கவிதையை ஒரு சுபநாள் பார்த்து மின்னஞ்சல் செய்து விட்டேன் . வேலை விஷயமாக வெளியூர் போயிருந்த மகீயிடம் விஷயத்தைக் கூறி கவிதையையும் காட்டினேன் . சூப்பர்டா , உனது படைப்பின் உச்சம் இதுதான் என்று துள்ளிக் குதித்தான் . அவன் நிதான நிலைக்கு வந்த பின் போட்டி அறிவிப்பு வந்த இதழைக் காட்டினேன் . நிதானமாகப் படித்துப் பார்த்து விட்டுதான் அந்த குண்டைப் போட்டான் .
ஏம்பா , இந்த பின்குறிப்பைப் பார்க்கலியா என்றான் . இதழை வாங்கி அறிவிப்பின் கீழ்பகுதியில் பொடியே பொடியான எழுத்துகளில் ….. கவிதைகள் எசுப்பானியா மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் . அடச்சீஎப்படி இதைக் கவனிக்காமல் விட்டேன் என்ற என் புலம்பலை மகீதான் பீர் பாட்டில்கள் வாங்கி வந்து ஆற்றுப் படுத்தினான் .
அதோடு அந்தப் போட்டிக்கு கவிதை அனுப்பியதையே மறந்துவிட்டு வழக்கம்போல் மற்ற இதழ்களுக்கு வேறு கவிதைகளை அனுப்பி அவை பிரசுரமான மகிழ்ச்சியை நானும் மகீயும் கொண்டாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் , சுமாராக மூன்று மாதங்கள் கழித்து [ அன்றும் மகீ வெளியூர் பயணம் ] அந்தக் கடிதமும் , கூடவே சற்றுக் கனமான அந்த எசுப்பானியா மொழிப் புத்தகமும் வந்து சேர்ந்தன .
மூன்று நாட்கள் அந்த பத்தாவது பக்கத்தை மீண்டும் , மீண்டும் பார்த்தவாறும் , அந்தக் கடிதத்தை மீண்டும் , மீண்டும் வாசித்தவாறும் கழிந்தன . [ என்ன சார் பாக்கெட் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது என்ற நாசருக்கு அசட்டுச் சிரிப்பை மட்டும்தான் பதிலாகக் கொடுத்தேன் ] மகீக்கு தொலைபேசி செய்தி சொன்ன போது அவனும் குழம்பித்தான் போனான் . நாளைக்கு வந்திருவேன் . அப்புறம் பேசிக்கலாம் , யோசிக்கலாம் என்றான் .
நான்காவது நாள் காலை 11 மணி . வெளியில் வந்து நின்று கொண்டேன் . தபால்காரர் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு சிறு பெட்டியையும் , ஒரு தபால் உறையையும் எடுத்து வழக்கமான புன்சிரிப்போடு நீட்டினார் . [ உங்களுக்கு வெளிநாட்டு தபால் வரலைன்னா அன்னைக்கு எங்களுக்கு லீவுன்னு அர்த்தம் சார் . ] கூடவே ஒரு காகிதத்தையும் நீட்டினார் . பதிவுத் தபால் சார் , ஒரு கையெழுத்து போடுங்க . காட்டிய இடத்தில் கையெழுத்திட்டேன் . அவர் நகர்ந்ததும் சட்டென்று உள்நுழைந்து கதவைச் சாத்தினேன் .
முதலில் உறையைப் பிரிப்பதா , பெட்டியைத் திறப்பதா என்ற மில்லியன் டாலர் கேள்வியோடு ஒரு முடிவுக்கு வந்து உறையைப் பிரித்தேன் . எசுப்பானியா மொழியில் கடிதம் . அதில் ஒரு கணிசமான தொகை என் வங்கிக் கணக்கில் ஏறியிருந்த தகவல் . கடிதத்தைப் படிக்க கணினியைத் திறக்க வேண்டும் . அதற்கு பெட்டியையே திறந்து விடலாம் என முடிவெடுத்து , மிக மிகக் கவனமாக பெட்டியைக் கையில் எடுத்தேன் . இத்தனூண்டு பெட்டிக்குள் என்ன சிறப்பு பரிசு இருக்கும் ? பிளாட்டின நாணயம் ஏதாவது …. பெட்டி ஒரு கைக்குள் அடங்கியிருந்தது . நான்கு புறமும் பழைய ஓட்டைக் காலணாவில் உள்ள ஓட்டையின் அளவில் ஓட்டைகள் . வெளிச்சத்தில் பார்த்தபோது அந்த ஓட்டை வழியே உள்ளே இன்னொரு பெட்டி இருப்பது புலப்பட்டது .
 நிதானமாக வெளிப் பெட்டியைத் திறந்தேன் . உள்ளே இருந்த பெட்டியின் எல்லாப் பக்கங்களிலும் ஊசிமுனைத் துவாரங்கள் . கனமே இல்லாத அந்தப் பெட்டியை மெதுவாக மேசையில் வைத்தேன் . உள்ளே ஏதாவது திறந்தவுடன் வெடிக்கக்கூடிய சக்தி வாய்ந்த குண்டு இருந்து தொலைத்தால் .... சற்று நிதானித்தேன் . ஒரு சிகரட் பற்ற வைத்துக் கொண்டு அந்தப் பெட்டியையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன் . குண்டு அனுப்பும் அளவிற்கு நமக்கு ஏது எதிரி என்று உள்மனம் சொன்னாலும் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது .
பெட்டியைத் திறக்க ஏன் இவ்வளவு யோசிக்கிறாய் ? சீக்கிரம் திற . உன்னைப் பார்க்க வெகு ஆவலோடு உள்ளேன் .
எங்கிருந்து வந்தது அந்த மெல்லிய குரல் என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன் . ம்ஹீம் ...
உன்னை மட்டுமல்ல , இங்கிருக்கும் எனது சகோதரனையும் உடனே பார்க்க வேண்டும் ..... மீண்டும் அதே குரல் . வந்தது பெட்டிக்குள்ளிருந்து என்பது புலப்பட என் கைகள் இலேசாக நடுங்கின . பாதி சிகரெட் கை நழுவி கீழே விழுந்தது . மகீ , பாவி இப்போ பார்த்து நீ இல்லாமப் போயிட்டியே ....
பயப்படாமல் பெட்டியைத் திற ... பதறாதே .... மீண்டும் பெட்டிக்குள் இருந்து அதே குரல் . கீழே விழுந்த சிகரெட்டை எடுத்து ஃபில்டர் வரை இழுத்து விட்டு அனைத்தேன் .
கைகளின் நடுக்கத்தை மீறி பக்குவமாகப் பெட்டியைத் திறந்தேன் . மேல் புறம் திறந்த மறுகணம் உள்ளிருந்து வெளியே வந்தது ஒரு பட்டாம்பூச்சி . கிட்டத்தட்ட புத்தரின் காதுகளில் பாதி அளவு இறக்கைகளுடனும் , வித விதமான வண்ணங்களுடனும் இருந்த அந்த பட்டாம்பூச்சி பெட்டியில் இருந்து சற்றுத் தள்ளி மேசையின் மீது உட்கார்ந்து கொண்டது .
சிறப்புப் பரிசு ? ஒரு பட்டாம்பூச்சிக்குதான் அத்தனை அட்டகாசமா ? அது பேசும் பட்டாம்பூச்சி என்று மனதில் பதிய சில கணங்கள் ஆனது . சிறப்புப் பரிசென்று பத்திரிகை சொன்னதின் பொருள் புரிந்ததும் அதை ஒரு வித பக்திப் பரவசத்துடன் பார்க்க ஆரம்பித்தேன் .
பட்டாம்பூச்சி சிரிக்கவும் செய்யுமா ? அது சிரித்தது – மிக மெல்லியதாக ஒரு புன்னகையைவிட ஒரு மில்லி டெஸிபல் அதிக சப்தம்தான் கேட்டது .   
பட்டாம்பூச்சி பேசுகிறதே என்று ஆச்சரியப்படுகிறாயா ?
நான் என்னையறியாமல் இலேசாகத் தலையை அசைத்தேன் .
சொல்கிறேன் . முழுக் கதையும் சொல்கிறேன் . சற்றே பொறுமையாகக் கேள் . அந்த பட்டாம்பூச்சி சற்று இடம் மாறி அமர்ந்தது .
நாங்கள் ஐந்து சகோதரர்கள் ….என்ன உங்கள் நாட்டு புராணம் நினைவில் வருகிறதா ? ஆனால் நாங்கள் மனித உருவத்தில் இல்லை . ஒரு சாபத்தின் காரணமாக நாங்கள் ஐந்து சகோதரர்கள் நிக்காரகுவாவில் ஐந்து குன்றுகளாக பல நூற்றாண்டுகளாக இருந்தோம் . ஒரே மலைத் தொடரின் அடுத்தடுத்த குன்றுகளாக . நடுவில் பள்ளத் தாக்குகள் எங்களைப் பிரித்தன . நிக்காரகுவா கேள்விப் பட்டிருக்கிறாயா ?
பொதுவாக தலையை அசைத்தேன் .
நல்லது . குன்றுகள் என்றாலும் எங்களுக்கு மனித இனத்தின் அனைத்து திறன்களும் உண்டு . பேசுவது , கேட்பது , சிரிப்பது …. என்று எல்லாமே இயலும் . ஆனால் நாங்கள் பேசிக் கொள்வது எங்கள் ஐவருக்கு மட்டுமே கேட்க இயலும் . எங்களது தாய்மொழியான எசுப்பானிய மொழியில்தான் பேசிக் கொள்வோம் . ஆனால் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அவற்றின் இலக்கணம் உட்பட அறிவோம் . வழக்கொழிந்துபோன மொழிகள் கூட எங்களுக்குத் தெரியும் . உலகின் எந்த மூலையில் பேசப் பட்டாலும் அவை எங்கள் காதுகளை வந்தடையும் வகையில் எங்களது சாபம் எங்களுக்கு ஒரு திறனை அளித்திருந்தது . எங்களது அடிவாரத்தில் இருந்த பகுதிகளுக்கு கவிஞர்கள் அதிகமாக வருவதுண்டு . தனிமையின் சாரம் கண்டு அதைக் கவிதையாக்க ஏற்ற இடம் என்பதனால் . அதனாலேயே எங்கள் ஐவருக்கும் கவிதைகள் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டு நாங்களாகவே பல மொழிகளில் கவிதைகளை உருவாக்கி எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம் .
பட்டாம்பூச்சி சற்றே நிறுத்தி என்னைப் பார்த்தது . என்ன நம்பிக்கை இல்லையா ? முழுவதும் சொல்லி முடித்து விடுகிறேன் . சொல்லி முடித்ததும் உன்னை அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகத்திற்கும் விடை கிடைக்கும் . ஆங்கிலத்தில் எழுதிய கவிதை எப்படி எசுப்பானிய மொழிக்கு மாறி பரிசு பெற்றது என்ற உன் குழப்பத்திற்கான விடை .
நான் என்னுள் ஒரு வித அதிர்வை உணர்ந்தேன் . சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு காதுகளை பட்டாம்பூச்சியின் குரலுக்கு இரவல் கொடுத்தேன் .
குன்றுகளாக இருப்பதை இரசித்தாலும் , ஒரே இடத்தில் இருப்பது சற்றே அலுப்பு தந்தது . எங்களது சாபத்தின் ஒரு பகுதியாக ஒரு சலுகையும் இருந்தது . இரு முறை நாங்கள் உருமாறலாம் என்பதே அது . உருமாறினாலும் எங்களது திறமைகள் மாறாது . பேசலாம் , கேட்கலாம்
வெகு தீவிரமான யோசிப்புகளின் முடிவில் பட்டாம்பூச்சியாக மாறுவது என்று தீர்மானித்தோம் . ஒரு இரவு நேரத்தில் குன்றுகளில் இருந்து வெளிப்பட்டு எங்கள் அருகில் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளின் உடலுக்குள் நுழைந்து கொண்டோம் . ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டேனே . நான்தான் ஐவரில் கடைக்குட்டி .
பட்டாம்பூச்சி பெட்டியின் உள் இருந்த இலைகளில் ஒன்றை கடித்து மெல்ல ஆரம்பித்தது . எனக்கும் பசிக்க ஒரு ரொட்டித் துண்டை எடுத்து கடிக்க ஆரம்பித்தேன் .
இலையை முழுவதுமாக தின்று முடித்ததும் ப பூச்சி பேச ஆரம்பித்தது .
பட்டாம்பூச்சியாக மாறினாலும் சும்மா சுற்றித் திரிவதில் ஆர்வம் இல்லை . கவிதைகள் பால் உள்ள ஈர்ப்பால் கவிதைகள் நிறைந்த சூழ்நிலையில் வாழத் தீர்மானித்து எங்கள் நாட்டில் உள்ள கவிதைக்காகவே இயங்கி வரும் அந்த பத்திரிகை அலுவலகம் சென்று அதன் ஆசிரியரின் மேசையில் அமர்ந்தோம் . ஆம் …. உன் கவிதைக்கு பரிசு வழங்கிய அந்த பத்திரிகைதான் அது . உன்னைப் போலவேதான் அதன் ஆசிரியரும் முதலில் எங்களை வெறும் பட்டாம்பூச்சிகளாக நினைத்து கைகளை வீசி விரட்ட முயற்சித்தார் .
எங்களது மூத்த சகோதரன்தான் முதலில் பேசி அவருக்கு எங்களைப் பற்றி கூறினான் . அவர் முதலில் நம்பவில்லை . எனது இரண்டாவது சகோதரன் அவன் இயற்றிய எசுப்பானிய மொழிக் கவிதை ஒன்றை ஏற்ற இறக்கங்களோடு கூறி முடித்ததும் அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் உரக்கத் தட்டினார் . எங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் பொறுமையாகக் கேட்டார் .
எங்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டது . எங்களுக்கென்று ஒரு தனி அறை . பத்திரிகைக்கு வரும் எல்லாக் கவிதைகளும் எங்கள் பார்வைக்கு வந்து அவற்றில் நாங்கள் தேர்வு செய்தவற்றை நாங்கள் செய்யும் சில மாறுதல்களுக்குப் பிறகே அவை பிரசுரத்துக்குப் போகும் . நாங்கள் அங்கு சென்று ஒரே வருடத்தில் பத்திரிகையின் புகழ் பரவலாகி அதன் விற்பனை பல மடங்கு உயர்ந்து விட , ஆசிரியர் எங்களுக்கு மேலும் மேலும் பல சலுகைகளையும் , சுவையான உணவுகளையும் வழங்கத் தொடங்கினார் .
இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பு வந்தது . வந்து குவிந்த அத்தனைக் கவிதைகளையும் எங்கள் அறையில் கொண்டு வந்து குமித்து விட்டார் ஆசிரியர் . ஓய்வே இல்லாமல் வாசிக்க ஆரம்பித்தோம் . அப்போதுதான் என் கண்ணில் பட்டது உன் கவிதை . அதன் உருவம் , படிமங்கள் , உருவகங்கள் , ஓசை நயம் எல்லாமே என்னிடம் ஒரு கிளர்ச்சியை உருவாக்கி விட்டது . ஆனால் கவிதையோ விதிமுறையை மீறி ஆங்கிலத்தில் இருந்தது . ஏற்கனவே சொல்லியுள்ளேன் எங்களுக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று . கவிதையை என் சகோதரர்களிடம் காண்பித்தேன் . வாசித்துவிட்டு ஏக மனதாகத் தீர்மானித்து விட்டோம் உன் கவிதைக்குதான் முதல் பரிசு என்று . வேறு மொழியில் எழுதப்பட்டு விதி மீறியிருந்தாலும் ஒரு நல்ல கவிதை அதற்குரிய அங்கீகாரத்தை இழக்கக் கூடாது என தீர்மானித்தோம் . எனது மூத்த சகோதரன் மிக சிரத்தை எடுத்து உன் கவிதையின் மூல அழகு மாறாமல் அதை எசுப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்தான் . பின்னர் தேர்வு குறித்த முடிவுகளை ஆசிரியரிடம் சொல்ல …. அப்புறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே . இப்போது உன் கவிதைக்கு பரிசு கிடைத்த குழப்பம் தீர்ந்திருக்குமென நம்புகிறேன் .
பட்டாம்பூச்சி சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது .
அப்புறம் ஒரு முடிவெடுத்தோம் . நானும் எனது சகோதரர்களில் ஒருவரும் உன்னோடு இணைந்து அற்புதமான கவிதைகளை உன் மூலமாக உலகிற்கு அளிப்பது என்று . ஆசிரியரிடம் சொன்னபோது அவர் சிறிது தயங்கினார் எங்களில் இருவரைப் பிரிவதற்கு . எனினும் மூவர் அவருடனேயே இருப்பதால் சம்மதம் தெரிவித்து விட்டார் . அதன் விளைவாகவே சிறப்புப் பரிசாக என்னை உன்னிடம் அனுப்பி வைப்பது என்ற முடிவு . இதோ , நானும் உன்னை வந்தடைந்து விட்டேன் .
நடப்பதை நம்புவதா , வேண்டாமா என்ற குழப்பத்தில் நானிருப்பதை உணர்ந்து தொடர்ந்து பேசத் தொடங்கியது பட்டாம்பூச்சி .
என்ன வியப்பாக உள்ளதா ? பொறு மீதியையும் கேட்டு விடு . அதற்கு முன் ஒரு கேள்விக்குப் பதில் சொல் . உன்னிடம் ஒரு பேனா இருந்ததே . அது இப்போது எங்கே ?
சுயநிலை மறந்து மிதந்து கொண்டிருந்த நான் தரையில் கால் வைத்தேன் . ஒரு பொம்மையைப் போல் இயங்கி அருகில் இருந்த அலமாரியை அடைந்து அதனுள் இருந்த பேனாவை எடுத்து வந்து மேசையில் வைத்தேன் . அது மகீ எனக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த வெளிநாட்டுப் பேனா . அதை வைத்துதான் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன் . கணினியில் நேரடியாக தட்டச்சு செய்யும் அளவிற்கு மொழி மீது ஆளுமை வந்த பிறகு அதன் தேவை இல்லாதததால் அலமாரிக்குள் வைத்து விட்டேன் பயன் படுத்தாமலே . ஆனால் பட்டாம்பூச்சி எதற்காக அந்தப் பேனாவைக் கேட்கிறது .
மேசையில் வைத்த பேனாவைக் கண்டதுமே பட்டாம்பூச்சி வேகமாக அதன் மேல் வந்து அமர்ந்து கொண்டது . பின் விலகி அதன் அருகில் அமர்ந்தது . அதனிடம் இருந்து புரியாத மொழியில் வார்த்தைகள் வெளிப்பட்டன . தொடர்ந்து அதே மொழியில் இன்னொரு குரல் . அது வெளிப்பட்டது பேனாவிடம் இருந்து என்பது புரிபட எனக்கு சிறிது நேரம் பிடித்தது .
நான் ஒருவன் இருப்பதையே மறந்து பேனாவுடன் பேசிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி சற்று நேரம் கழித்து என் பக்கம் திரும்பியது .
சொல்ல மறந்து விட்டேனே . இது என்னுடைய கடைசி சகோதரன் . இருவர் உன்னோடு இருப்பது என்று முடிவெடுத்தவுடனேயே ஆசிரியரிடம் சொல்லி விட்டு இவன் மறுநாளே கிளம்பி வந்து விட்டான் . இரு தடவை உருமாறலாம் என்ற சலுகையைப் பயன்படுத்தி பேனாவாக மாறி விட்டான் . ஆனால் ஏனோ தெரியவில்லை , சில நாட்களிலேயே நீ அவனைப் பயன்படுத்தாமல் சிறைப் படுத்தி விட்டாய் . உன்னோடு இணைந்து கவிதைகள் பல படைக்கும் ஆர்வத்தில் இருந்த அவன் மனம் உடைந்து அங்கிருந்த எங்களிடம் தினசரி வருத்தத்தோடு பேசிக் கொள்வான் . நான் வரும்வரை பொறுமையாக இருக்கும்படி நாங்கள் ஆறுதல் கூறித் தேற்றுவோம் அவனை .
பட்டாம்பூச்சி பேசிக் கொண்டிருக்கும்போதே எனக்குள் பழைய ஞாபகம் ஒன்று மங்கலாக நிழலாடியது . போட்டிக் கவிதையை அனுப்பி வைத்த சில நாட்கள் கழித்து நானும் மகீயும் மது அருந்திய ஒரு நாளில் , அவன் சென்ற பிறகு ஒரு கவிதை எழுதும் முயற்சியில் பேனாவை எடுத்தவன் போதையின் கிறக்கத்தில் உடல் ஒத்துழைக்காமல் பேனாவை மூடி மேசையில் வைத்துவிட்டு படுத்து விட்டேன் . கண்களைப் பாதி மூடிய நிலையில் படுத்திருக்கும்போது மங்கலாக காட்சி ஒன்று தென் பட்டது . மேசையின் ஒரு மூலையில் விநோதமான ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருந்த காட்சி . பிரமை என்று எண்ணியவாறே போதையில் தூங்கி விட்டேன் .
காலையில் எழுந்த போது மேசையில் பட்டாம்பூச்சி இல்லை . இரவு கண்டது பிரமையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினக்கும் போதே இன்னொரு மாறுதல் மனதில் பட்டது . இரவு நான் வைத்த இடத்தில் இருந்து பேனா சற்றே விலகி இருப்பது போலத் தோன்றியது . சட்டென்று அந்த எண்ணத்தை உதறினேன் . இரவு போதை சற்று அதிகமாகி இருக்க வேண்டும் என்று தோன்றியது . இரவு எழுத நினைத்து எழுதாமல் விட்ட கவிதை வரிகள் நினைவில் வர மேசை முன் அமர்ந்து எழுதத் தொடங்கினேன் . எப்போதும் இல்லாத கூடிய அழகோடு வார்த்தைகள் காகிதத்தில் வந்து விழுந்தன .
பட்டாம்பூச்சி சொன்ன கதை மங்கலான அந்த நினைவுகளைத் தெளிவாக்கியது போலிருந்தது . அப்படி என்றால் அன்று இரவு அந்த இன்னொரு பட்டாம்பூச்சி பேனாவாக உருமாறியிருந்தது என்பதை உணர முடிந்தது . அதன்பின் அந்த பேனாவால் எழுதிய எல்லாக் கவிதைகளுமே வழக்கத்தைவிட அதிக பொலிவோடு இருந்தது என்ற எண்ணமும் மனதில் தவிர்க்க முடியாமல் வந்து போனது .
இப்போது ஓரளவிற்கு எல்லாமே புரிந்திருக்குமே . நல்லது இன்று முதல் நீயும் , நானும் , எனது சகோதரனும் சேர்ந்து உலகத்தின் ஆகச் சிறந்த கவிதைகளைப் படைக்கப் போகிறோம் .
பட்டாம்பூச்சியின் குரலில் அதன் சகோதரனைச் சந்தித்த மகிழ்ச்சி நிறைந்து இருந்தது .
அதற்கான திட்டத்தின் கடைசி நிகழ்வாக இப்போது நான் , எனது இரு தடவை உருமாறும் சலுகையை பயன்படுத்தி நீயாக மாறப் போகிறேன் . நீ என் வடிவத்தில் எங்களோடு எப்போதும் இருப்பாய் . உனது கற்பனைகளை பட்டாம்பூச்சி உருவத்தில் இருந்து நீ கூறக் கூற நான் உன் வடிவில் இருந்து என் சகோதரன் துணையோடு இனிய கவிதைகளாக மாற்றி இந்த உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் நமது ஆகச் சிறந்த கவிதைகளை நிரப்புவோம்
எனக்குள் ஏதோ நிகழ்வதுபோல உணரத் தொடங்கி , கொஞ்சம் கொஞ்சமாக எனது உடல் இலேசாக மாறிப் பறப்பது போல் தோன்றிய கணத்தில் கதவு தட்டப்பட்டது . மகீயாகத்தான் இருக்க வேண்டும் .
------------------------------------------------------------------------------------------------------ 
[ புதுப்புனல் இதழில் வெளியான எனது சிறுகதை ]