உருமாற்றம் . [ சிறுகதை
]
“ சுப்ரா “
இந்தக் கதையைச் சொல்லும் அல்லது எழுதும் நான் , உண்மையில் நானல்ல . குழம்ப வேண்டாம் . சொல்கிறேன் . சரியான நேரத்தில் நீங்களாகவே உணர்ந்து
கொள்வீர்கள் .
முதலில் அந்தக்
கடிதமும் , கூடவே சற்றுக் கனமான அந்தப்
புத்தகமும்தான் வந்தன . கடிதத்தில் முகவரி மட்டுமே
ஆங்கிலத்தில் . மற்றப்படி கடிதத்திலும் , வளவளப்பான தாளில் உயர்தரமாக அச்சிடப்பட்டிருந்த அந்த புத்தகத்திலும்
இருந்த ஒவ்வொரு எழுத்தும் வேறு மொழியில்தான் இருந்தன . பக்கங்களின் அமைப்பில் இருந்து அது முழுவதும் கவிதைகள் அடங்கிய ஓர் இதழாக இருக்க வேண்டும் என ஊகிக்க
முடிந்தது .
உண்மையில்
கடிதத்தைப் பிரித்துப் பார்த்த கணத்தில் அது என்ன மொழி என்று எனக்குத் தெரியவில்லை
. பின்னர் கணினி முன் அமர்ந்து இணையத்தில் நுழைந்து தேடிய போதுதான் அது எசுப்பானியா
மொழி என்பது தெரிந்தது .
கணினி முன் தொடர்ந்து மணிக் கணக்கில் உட்கார்ந்து தேடியதின் விளைவாக
அந்தக் கடிதத்தின்
சாராம்சத்தை என்னால் ஓரளவிற்கு மொழி பெயர்க்க முடிந்தது .
மதிப்பிற்குரிய
கவிஞர் அவர்களே ...என்று ஆரம்பித்திருந்த அந்தக் கடிதம் கீழே உள்ளவாறு தொடர்ந்தது .
போட்டிக்காக
தாங்கள் அனுப்பியிருந்த கவிதை மிகவும் அருமையாக இருந்தது . இயற்கை குறித்து இவ்வளவு வித்தியாசமான கற்பனை இதுவரை உருவாக்கப் பட
வில்லை என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஏக மனதான கருத்து . எசுப்பானியா மொழியில் மட்டுமல்ல , எந்த மொழியிலுமே இத்தகைய கற்பனை இதுவரை உருவாக்கப் பட்டிருக்க
வாய்ப்பில்லை என்பதால் தங்கள் கவிதைக்கு முதல் பரிசு வழங்க முடிவு செய்தோம் . இத்துடன் தங்கள் கவிதை வெளியாகியுள்ள இம்மாத இதழையும்
அனுப்பியுள்ளோம் . [ பக்கம் 10 ]
இவ்வளவு
அருமையான படைப்பிற்கு ஏற்கனவே அறிவித்திருந்த பணப்பரிசு மட்டும் வழங்கினால் போதாது என்பதால் ஒரு சிறப்புப் பரிசும்
வழங்க முடிவு செய்துள்ளோம் . பரிசுத் தொகைக்கான பணப்பரிமாற்ற விபரங்களும் , கூடுதலாக உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள சிறப்புப் பரிசும் இன்னும் சில
தினங்களில் உங்களை வந்தடையும் . சிறப்புப் பரிசு மிகவும் அபூர்வத்
தன்மை உள்ளது என்பதால் அது குறித்த விஷயங்கள் பரிசுடன் தங்களுக்கு அனுப்பப்
பட்டுள்ளது . அது ஓர் இனிமையான ஆச்சரியமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல
முடியும் .
பரிசு
பெற்றதற்காக வாழ்த்துக்கள் . தங்களிடம் இருந்து இதே போன்ற உயர்ந்த படைப்புகளை எங்களது கவிதைக்கான மாத இதழ் எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது .
நன்றி .
கடிதத்தை கீழே
வைத்துவிட்டு புத்தகத்தை எடுத்து பக்கம் 10ஐ புரட்டினேன் .
பல வர்ணங்களில்
அச்சிடப்பட்டிருந்த அழகான இயற்கைக் காட்சி பின்னணியில் இருபது வரிகள் . மீண்டும் கணினி முன் உட்கார்ந்து அந்த கவிதை வரிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்து முடித்த போது இருட்டி விட்டிருந்தது . என் கவிதைதான் . மொழிதான் வேறு . இலேசாக பசித்த போதுதான் மதியம் சாப்பிடாமலே இருந்தது ஞாபகத்திற்கு
வந்தது .
வடிவேலு கடையில்
நான்கு சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு காப்பி குடித்ததும் வயிறு நிரம்பி விட்டது . மனம் முழுவதும் பதில் தெரியாத கேள்விகள் நிரம்பியிருந்தன . வழியில் நாசர் கடையில் சிகரட் வாங்கிப் பற்ற வைத்தேன் . தேவைப் படும் என்று தோன்றியதால் இரண்டு பாக்கட்டுகள் வாங்கிய போது
நாசர் வியப்பாக பார்த்தான் . வழக்கமாக
ஒன்றுதானே . என்ன சார் இரண்டு ? நாசருக்கு சொன்னால் புரியாது . புன்னகைத்து
விட்டு நகர்ந்தேன் .
வீட்டிற்குள்
வந்ததும் புத்தகத்தை விரித்து பக்கம் பத்தில் பார்வையைப் பதித்தேன் . எவ்வளவு யோசித்தும் குழப்பம் தீரவில்லை . தீராது என்று தோன்றியது .
கவிதை எழுதினாய்
, போட்டிக்கு அனுப்பினாய் , பரிசு கிடைத்தது . இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது
என்று மணிவண்ணனோ அல்லது ரவீந்திரனோ கேட்பது காதில் விழுகிறது . முதலில் இருந்து சொன்னால்தான் உங்களுக்குப் புரியும் . சொல்கிறேன் .
நிறையப்
படித்ததின் விளைவாக நாமும் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றி எழுத ஆரம்பித்த பலரில்
நானும் ஒருவன் . நிச்சயமாக எனது எழுத்துகளை நீங்கள்
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் படித்திருப்பீர்கள் . தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதி வந்தவனை ஆங்கிலத்திலும் எழுதலாமே
என்று தூண்டிவிட்டவன் மகீ என்ற மகேஸ்வரன் . நெருங்கிய
நண்பனாக இருந்து பின்னர் எனது தீவீர வாசகனாக மாறியவன் . மகீ ஒரு சுவாரசியமான மனிதன் . அவனும் எழுதுவான் . கோடு போட்ட ஒரு தடிமனான நோட்டில்
குண்டு குண்டான எழுத்துகளில் நிறைய கவிதைகள் எழுதி வைத்துள்ளான் . அனேகமாக எல்லாமே காதல் குறித்தவை .
இந்த இடத்தில்
ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன் . நான் காதல் குறித்து எழுதுவது கிடையாது
. எனது எழுத்துகளை படித்திருக்கும்
நீங்களும் அதை கவனித்திருப்பீர்கள் . மகீ அடிக்கடி கேட்பான் . நீ ஏன் காதல் கதையோ கவிதையோ எழுதக் கூடாது ? காதல் இல்லையெனில் காவியங்கள் இல்லை என்பான் . எனக்கு காவியங்கள் எழுத ஆர்வமில்லை
என்று கூறிப் பேச்சை திசை திருப்பி விடுவேன் .
நீயும்
பத்திரிகைகளில் எழுதலாமே மகீ என்ற போது நோட்டின் முதல் பக்கத்தைக் காண்பித்தான்
ஒரு தடவை .
என் கவிதைகள்
எனக்கு மட்டும்தான் .
பிறர் படித்தால்
வெறுக்கக் கூடும்
என் கவிதைகளோடு
என்னையும் .
அதன் பின் அவனிடம் அந்தக் கேள்வியை கேட்டதில்லை
.
விஷயத்திற்கு
வருகிறேன் . ஒரு மாலை நேரத்தில் ஒரு மதுபானக்
கூடத்தில் பியர் உறிஞ்சியவாறே கவிதை குறித்துப் பேசிக் கொண்டிருந்த போதுதான் மகீ
கேட்டான் . நீ ஏன் ஆங்கிலத்திலும் எழுதக் கூடாது ? அந்த அளவுக்கு எனக்கு அந்த மொழியில் புலமை கிடையாது என்றேன் முயற்சி செய் முடியும் என்றான் . உனது கற்பனை திறனுக்கு புலிட்ஸர் , புக்கர் , ஏன் நோபல் பரிசு கூடத் தேடி வரலாம்
என்று அவன் போட்ட தூண்டிலில் மாட்டிக் கொண்டேன் . மறுநாளே ஹிக்கின்ஸ்பாதமில் தேடிப் பிடித்து கீட்ஸ் , வோர்ட்ஸ்வர்த் , மில்டன் என்று வாங்கிக் குவித்து
ஆங்கிலத்தை என் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி விட்டேன் . எழுதவும் ஆரம்பித்து விட்டேன் .
எழுதி
அனுப்பியவை அத்தனையும் திரும்பிவர , சோர்ந்து போன போது மகீதான் மீண்டும்
கிரியா ஊக்கியாக செயல் பட்டான் . நம் நாட்டில் உள்ள அத்தனை ஆங்கிலப்
பத்திரிகைகளும் ரசனை இல்லாத ஜன்மங்கள்
யாரிடமாவது மாட்டிக் கொண்டுள்ளன என்று
திட்டிவிட்டு சில வெளிநாட்டு பத்திரிகைகளின் முகவரிகளைத் தேடிக் கொண்டு வந்தான் .
அவன் கொடுத்த
முகவரிகளில் ஒன்றுக்கு ஒரு கவிதையை அனுப்பிவிட்டு காத்திருந்தேன் . எட்டாவது நாள் நியூயார்க் நகரில் இருந்த அந்த பத்திரிகை அலுவலகத்தில்
இருந்து மின்னஞ்சல்
மூலம் வந்த கடிதம் உயர்தரமான ஆங்கிலத்தில் இருந்தது .
அய்யா , தங்களது கவிதை ஓர் அற்புதமான கற்பனை . ஆனால் நீங்கள் பயன் படுத்தியுள்ள மொழி
நடைதான் காலத்தால் மிகப் பழையதாக உள்ளது . கீட்ஸ் , வோர்ட்ஸ்வர்த் எல்லோருமே நல்ல கவிஞர்கள்தான் . ஆனால் இன்றைய கவிதையின் உருவம் வேறு . எங்களது இதழ்களில் சிலவற்றை இத்துடன் அனுப்பியுள்ளோம் . படித்துப் பாருங்கள் . தங்கள் நடையை மாற்றிக் கொள்ளுங்கள் . உங்களது கவிதையின் பொருள் எங்களை மிகவும் ஆகர்சித்துவிட்டது . எனவே நடையை மாற்றி தங்களது படைப்புகளை அனுப்பி வையுங்கள் . காத்திருக்கிறோம் .
பி.கு.: கீழ்கண்ட கவிஞர்களின் படைப்புகளையும்
படித்துப் பார்க்கவும். அவை உங்கள் எழுத்துகளை நவீனப் படுத்தும் .
என்று முடித்து தொடர்ந்து நிறைய கவிஞர்களின் பெயர்கள்
வரிசையாக .
உடன் வந்திருந்த
புத்தகங்களை வாசித்தேன் . கடிதத்தின் உண்மை புரிந்தது . எல்லாக் கவிதைகளுமே புரியாதது போல தோன்றிப் பின்னர் புரிவதாக இருந்தன . மறு வாசிப்புகளில் வேறு விதமாக புரிவது போல இருந்தன . மீண்டும்
மீண்டும் அந்தக் கவிதைகளை வாசித்ததில் அவர்கள் எதிர்பார்த்த நவீன கவிதையின் வடிவம்
வசப்பட்டுவிட எழுதிக் குவிக்கத் தொடங்கினேன் . மகீயும் வாசித்துப் பார்த்துவிட்டு சில மாறுதல்கள்
சொல்லுவான் . திருத்தி எழுதியவற்றை மின்னஞ்சல்
செய்து விட்டுக் காத்திருக்கத் தொடங்கினேன் .
அடுத்த வாரமே முதல் கவிதை அதே இதழில் வெளிவந்ததோடு வங்கிக் கணக்கில்
கொஞ்சம் பணமும் வந்தது
. மகீயும் நானும் பீரோடு
கொண்டாடினோம் .
அதன்பின் ஒரே ஏறுமுகம்தான் . உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வெளிவரும்
அத்தனை ஆங்கிலக் கவிதை இதழ்களும் எனது கவிதைகள் இல்லாது வராது என்ற நிலை . இன்னும் கொஞ்சம் சேரட்டும் தொகுப்பு கொண்டு
வந்து விடலாம் என்று உசுப்பேற்றி விட்டான் . அவன் தேர்வு செய்து வைத்திருந்த பல வெளிநாட்டுப்
பதிப்பகங்களின் பெயர்கள் என் வாயில் நுழைந்து வெளிவரவே சிரமப்பட்டது வேறு கதை .
இதுதான் நான் சர்வதேசக் கவிஞன் ஆன கதையின் சுருக்கம் . ஏற்கனவே விட்ட கதைக்கு வருவோம் இப்போது . கவிதைகள் வெளியான இதழ்கள் ஒன்றில்தான் அந்தக்
கவிதைப் போட்டிக்கான அறிவிப்பு கண்ணில் பட்டது . பிரமாண்டமான பரிசுத் தொகைகள் என்ற வாசகங்கள்
மனத்தில் ஆசைகளை எக்கச்சக்கமாக உருவாக்க , இரவும்
பகலும் யோசித்து
, யோசித்து , எழுதி , அடித்து , எழுதி , அடித்து ….ஒரு வகையாக எழுதி முடித்த கவிதையை ஒரு சுபநாள்
பார்த்து மின்னஞ்சல் செய்து விட்டேன் . வேலை
விஷயமாக வெளியூர் போயிருந்த மகீயிடம் விஷயத்தைக் கூறி கவிதையையும் காட்டினேன் . சூப்பர்டா , உனது படைப்பின் உச்சம் இதுதான் என்று துள்ளிக்
குதித்தான் . அவன் நிதான நிலைக்கு வந்த பின் போட்டி
அறிவிப்பு வந்த இதழைக் காட்டினேன் . நிதானமாகப்
படித்துப் பார்த்து விட்டுதான் அந்த குண்டைப் போட்டான் .
ஏம்பா
, இந்த பின்குறிப்பைப்
பார்க்கலியா என்றான்
. இதழை வாங்கி அறிவிப்பின்
கீழ்பகுதியில் பொடியே பொடியான எழுத்துகளில் ….. கவிதைகள் எசுப்பானியா மொழியில் மட்டுமே இருக்க
வேண்டும் . அடச்சீ … எப்படி இதைக் கவனிக்காமல் விட்டேன் என்ற
என் புலம்பலை மகீதான் பீர் பாட்டில்கள் வாங்கி வந்து ஆற்றுப் படுத்தினான் .
அதோடு அந்தப் போட்டிக்கு கவிதை அனுப்பியதையே மறந்துவிட்டு வழக்கம்போல்
மற்ற இதழ்களுக்கு வேறு கவிதைகளை அனுப்பி அவை பிரசுரமான மகிழ்ச்சியை நானும் மகீயும்
கொண்டாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் , சுமாராக மூன்று மாதங்கள் கழித்து [ அன்றும் மகீ வெளியூர் பயணம் ] அந்தக் கடிதமும் , கூடவே சற்றுக் கனமான அந்த எசுப்பானியா
மொழிப் புத்தகமும் வந்து
சேர்ந்தன .
மூன்று நாட்கள் அந்த பத்தாவது பக்கத்தை மீண்டும் , மீண்டும்
பார்த்தவாறும் , அந்தக் கடிதத்தை மீண்டும் , மீண்டும் வாசித்தவாறும் கழிந்தன . [
என்ன சார் பாக்கெட் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது என்ற நாசருக்கு அசட்டுச்
சிரிப்பை மட்டும்தான் பதிலாகக் கொடுத்தேன் ] மகீக்கு தொலைபேசி செய்தி சொன்ன போது
அவனும் குழம்பித்தான் போனான் . நாளைக்கு வந்திருவேன் . அப்புறம் பேசிக்கலாம் ,
யோசிக்கலாம் என்றான் .
நான்காவது நாள் காலை 11 மணி . வெளியில் வந்து நின்று கொண்டேன் . தபால்காரர் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு
சிறு பெட்டியையும்
, ஒரு தபால் உறையையும்
எடுத்து வழக்கமான புன்சிரிப்போடு நீட்டினார் . [ உங்களுக்கு வெளிநாட்டு தபால் வரலைன்னா அன்னைக்கு
எங்களுக்கு லீவுன்னு அர்த்தம் சார் . ] கூடவே
ஒரு காகிதத்தையும் நீட்டினார்
. பதிவுத் தபால் சார் , ஒரு கையெழுத்து போடுங்க . காட்டிய இடத்தில் கையெழுத்திட்டேன் . அவர் நகர்ந்ததும் சட்டென்று உள்நுழைந்து
கதவைச் சாத்தினேன்
.
முதலில் உறையைப் பிரிப்பதா , பெட்டியைத் திறப்பதா என்ற மில்லியன் டாலர்
கேள்வியோடு ஒரு முடிவுக்கு வந்து உறையைப் பிரித்தேன் . எசுப்பானியா மொழியில் கடிதம் . அதில் ஒரு கணிசமான தொகை என் வங்கிக் கணக்கில்
ஏறியிருந்த தகவல்
. கடிதத்தைப் படிக்க
கணினியைத் திறக்க வேண்டும்
. அதற்கு பெட்டியையே
திறந்து விடலாம் என முடிவெடுத்து
, மிக மிகக் கவனமாக
பெட்டியைக் கையில் எடுத்தேன்
. இத்தனூண்டு பெட்டிக்குள்
என்ன சிறப்பு பரிசு இருக்கும்
? பிளாட்டின நாணயம்
ஏதாவது …. பெட்டி ஒரு கைக்குள் அடங்கியிருந்தது . நான்கு புறமும் பழைய ஓட்டைக் காலணாவில் உள்ள
ஓட்டையின் அளவில் ஓட்டைகள்
. வெளிச்சத்தில் பார்த்தபோது
அந்த ஓட்டை வழியே உள்ளே இன்னொரு பெட்டி இருப்பது புலப்பட்டது .
நிதானமாக
வெளிப் பெட்டியைத் திறந்தேன் . உள்ளே இருந்த பெட்டியின் எல்லாப் பக்கங்களிலும்
ஊசிமுனைத் துவாரங்கள் . கனமே இல்லாத அந்தப் பெட்டியை மெதுவாக மேசையில் வைத்தேன் .
உள்ளே ஏதாவது திறந்தவுடன் வெடிக்கக்கூடிய சக்தி வாய்ந்த குண்டு இருந்து தொலைத்தால்
.... சற்று நிதானித்தேன் . ஒரு சிகரட் பற்ற வைத்துக் கொண்டு அந்தப் பெட்டியையையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன் . குண்டு அனுப்பும் அளவிற்கு நமக்கு ஏது எதிரி
என்று உள்மனம் சொன்னாலும் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது .
பெட்டியைத் திறக்க ஏன் இவ்வளவு யோசிக்கிறாய் ? சீக்கிரம்
திற . உன்னைப் பார்க்க வெகு ஆவலோடு உள்ளேன் .
எங்கிருந்து வந்தது அந்த மெல்லிய குரல் என்று தலையைச்
சிலுப்பிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன் . ம்ஹீம் ...
உன்னை மட்டுமல்ல , இங்கிருக்கும் எனது சகோதரனையும் உடனே பார்க்க
வேண்டும் ..... மீண்டும் அதே குரல் . வந்தது பெட்டிக்குள்ளிருந்து என்பது புலப்பட
என் கைகள் இலேசாக நடுங்கின . பாதி சிகரெட் கை நழுவி கீழே விழுந்தது . மகீ , பாவி
இப்போ பார்த்து நீ இல்லாமப் போயிட்டியே ....
பயப்படாமல் பெட்டியைத் திற ... பதறாதே .... மீண்டும்
பெட்டிக்குள் இருந்து அதே குரல் . கீழே விழுந்த சிகரெட்டை எடுத்து ஃபில்டர் வரை
இழுத்து விட்டு அனைத்தேன் .
கைகளின் நடுக்கத்தை மீறி பக்குவமாகப் பெட்டியைத் திறந்தேன்
. மேல் புறம் திறந்த மறுகணம் உள்ளிருந்து வெளியே வந்தது ஒரு பட்டாம்பூச்சி .
கிட்டத்தட்ட புத்தரின் காதுகளில் பாதி அளவு இறக்கைகளுடனும் , வித விதமான
வண்ணங்களுடனும் இருந்த அந்த பட்டாம்பூச்சி பெட்டியில் இருந்து சற்றுத் தள்ளி
மேசையின் மீது உட்கார்ந்து கொண்டது .
சிறப்புப் பரிசு ? ஒரு பட்டாம்பூச்சிக்குதான் அத்தனை
அட்டகாசமா ? அது பேசும் பட்டாம்பூச்சி என்று மனதில் பதிய சில கணங்கள் ஆனது . சிறப்புப்
பரிசென்று பத்திரிகை சொன்னதின் பொருள் புரிந்ததும் அதை ஒரு வித பக்திப்
பரவசத்துடன் பார்க்க ஆரம்பித்தேன் .
பட்டாம்பூச்சி சிரிக்கவும் செய்யுமா ? அது சிரித்தது – மிக
மெல்லியதாக ஒரு புன்னகையைவிட ஒரு மில்லி டெஸிபல் அதிக சப்தம்தான் கேட்டது .
பட்டாம்பூச்சி பேசுகிறதே என்று ஆச்சரியப்படுகிறாயா ?
நான் என்னையறியாமல் இலேசாகத் தலையை அசைத்தேன் .
சொல்கிறேன் . முழுக்
கதையும் சொல்கிறேன்
. சற்றே பொறுமையாகக்
கேள் . அந்த பட்டாம்பூச்சி சற்று இடம் மாறி
அமர்ந்தது .
நாங்கள் ஐந்து சகோதரர்கள் ….என்ன உங்கள் நாட்டு புராணம் நினைவில் வருகிறதா ? ஆனால் நாங்கள் மனித உருவத்தில் இல்லை . ஒரு சாபத்தின் காரணமாக நாங்கள் ஐந்து சகோதரர்கள்
நிக்காரகுவாவில் ஐந்து குன்றுகளாக பல நூற்றாண்டுகளாக இருந்தோம் . ஒரே மலைத் தொடரின் அடுத்தடுத்த குன்றுகளாக . நடுவில் பள்ளத் தாக்குகள் எங்களைப் பிரித்தன . நிக்காரகுவா கேள்விப் பட்டிருக்கிறாயா ?
பொதுவாக தலையை அசைத்தேன் .
நல்லது
. குன்றுகள் என்றாலும்
எங்களுக்கு மனித இனத்தின் அனைத்து திறன்களும் உண்டு . பேசுவது , கேட்பது , சிரிப்பது …. என்று எல்லாமே இயலும் . ஆனால் நாங்கள் பேசிக் கொள்வது எங்கள் ஐவருக்கு
மட்டுமே கேட்க இயலும்
. எங்களது தாய்மொழியான
எசுப்பானிய மொழியில்தான் பேசிக் கொள்வோம் . ஆனால் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அவற்றின்
இலக்கணம் உட்பட அறிவோம்
. வழக்கொழிந்துபோன
மொழிகள் கூட எங்களுக்குத் தெரியும் . உலகின்
எந்த மூலையில் பேசப் பட்டாலும் அவை எங்கள் காதுகளை வந்தடையும் வகையில் எங்களது சாபம்
எங்களுக்கு ஒரு திறனை அளித்திருந்தது . எங்களது
அடிவாரத்தில் இருந்த பகுதிகளுக்கு கவிஞர்கள் அதிகமாக வருவதுண்டு . தனிமையின் சாரம் கண்டு அதைக் கவிதையாக்க
ஏற்ற இடம் என்பதனால்
. அதனாலேயே எங்கள்
ஐவருக்கும் கவிதைகள் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டு நாங்களாகவே பல மொழிகளில் கவிதைகளை உருவாக்கி
எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்
.
பட்டாம்பூச்சி சற்றே நிறுத்தி என்னைப் பார்த்தது . என்ன நம்பிக்கை இல்லையா ? முழுவதும் சொல்லி முடித்து விடுகிறேன் . சொல்லி முடித்ததும் உன்னை அரித்துக் கொண்டிருக்கும்
சந்தேகத்திற்கும் விடை கிடைக்கும் . ஆங்கிலத்தில்
எழுதிய கவிதை எப்படி எசுப்பானிய மொழிக்கு மாறி பரிசு பெற்றது என்ற உன் குழப்பத்திற்கான
விடை .
நான் என்னுள் ஒரு வித அதிர்வை உணர்ந்தேன் . சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு காதுகளை
பட்டாம்பூச்சியின் குரலுக்கு இரவல் கொடுத்தேன் .
குன்றுகளாக இருப்பதை இரசித்தாலும் , ஒரே இடத்தில் இருப்பது சற்றே அலுப்பு தந்தது . எங்களது சாபத்தின் ஒரு பகுதியாக ஒரு சலுகையும்
இருந்தது . இரு முறை நாங்கள் உருமாறலாம் என்பதே
அது . உருமாறினாலும் எங்களது திறமைகள்
மாறாது . பேசலாம் , கேட்கலாம் …
வெகு தீவிரமான யோசிப்புகளின் முடிவில் பட்டாம்பூச்சியாக மாறுவது
என்று தீர்மானித்தோம்
. ஒரு இரவு நேரத்தில்
குன்றுகளில் இருந்து வெளிப்பட்டு எங்கள் அருகில் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளின்
உடலுக்குள் நுழைந்து கொண்டோம்
. ஒரு முக்கியமான விஷயத்தைச்
சொல்ல மறந்து விட்டேனே
. நான்தான் ஐவரில்
கடைக்குட்டி .
பட்டாம்பூச்சி பெட்டியின் உள் இருந்த இலைகளில் ஒன்றை கடித்து
மெல்ல ஆரம்பித்தது
. எனக்கும் பசிக்க
ஒரு ரொட்டித் துண்டை எடுத்து கடிக்க ஆரம்பித்தேன் .
இலையை முழுவதுமாக தின்று முடித்ததும் ப பூச்சி பேச ஆரம்பித்தது .
பட்டாம்பூச்சியாக மாறினாலும் சும்மா சுற்றித் திரிவதில் ஆர்வம்
இல்லை . கவிதைகள் பால் உள்ள ஈர்ப்பால் கவிதைகள்
நிறைந்த சூழ்நிலையில் வாழத் தீர்மானித்து எங்கள் நாட்டில் உள்ள கவிதைக்காகவே இயங்கி
வரும் அந்த பத்திரிகை அலுவலகம் சென்று அதன் ஆசிரியரின் மேசையில் அமர்ந்தோம் . ஆம் …. உன் கவிதைக்கு பரிசு வழங்கிய அந்த பத்திரிகைதான்
அது . உன்னைப் போலவேதான் அதன் ஆசிரியரும்
முதலில் எங்களை வெறும் பட்டாம்பூச்சிகளாக நினைத்து கைகளை வீசி விரட்ட முயற்சித்தார் .
எங்களது மூத்த சகோதரன்தான் முதலில் பேசி அவருக்கு எங்களைப் பற்றி
கூறினான் . அவர் முதலில் நம்பவில்லை . எனது இரண்டாவது சகோதரன் அவன் இயற்றிய எசுப்பானிய
மொழிக் கவிதை ஒன்றை ஏற்ற இறக்கங்களோடு கூறி முடித்ததும் அவர் தன் இருக்கையில் இருந்து
எழுந்து இரு கைகளையும் உரக்கத் தட்டினார் . எங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் பொறுமையாகக்
கேட்டார் .
எங்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்பட்டது . எங்களுக்கென்று ஒரு தனி அறை . பத்திரிகைக்கு வரும் எல்லாக் கவிதைகளும்
எங்கள் பார்வைக்கு வந்து அவற்றில் நாங்கள் தேர்வு செய்தவற்றை நாங்கள் செய்யும் சில
மாறுதல்களுக்குப் பிறகே அவை பிரசுரத்துக்குப் போகும் . நாங்கள் அங்கு சென்று ஒரே வருடத்தில் பத்திரிகையின்
புகழ் பரவலாகி அதன் விற்பனை பல மடங்கு உயர்ந்து விட , ஆசிரியர் எங்களுக்கு மேலும் மேலும் பல சலுகைகளையும் , சுவையான உணவுகளையும் வழங்கத் தொடங்கினார் .
இந்தச் சூழ்நிலையில்தான் அந்தக் கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பு
வந்தது . வந்து குவிந்த அத்தனைக் கவிதைகளையும்
எங்கள் அறையில் கொண்டு வந்து குமித்து விட்டார் ஆசிரியர் . ஓய்வே இல்லாமல் வாசிக்க ஆரம்பித்தோம் . அப்போதுதான் என் கண்ணில் பட்டது உன் கவிதை . அதன் உருவம் , படிமங்கள் , உருவகங்கள் , ஓசை நயம் எல்லாமே என்னிடம் ஒரு கிளர்ச்சியை
உருவாக்கி விட்டது
. ஆனால் கவிதையோ விதிமுறையை
மீறி ஆங்கிலத்தில் இருந்தது
. ஏற்கனவே சொல்லியுள்ளேன்
எங்களுக்கு எல்லா மொழிகளும் தெரியும் என்று . கவிதையை என் சகோதரர்களிடம் காண்பித்தேன் . வாசித்துவிட்டு ஏக மனதாகத் தீர்மானித்து
விட்டோம் உன் கவிதைக்குதான் முதல் பரிசு என்று . வேறு மொழியில் எழுதப்பட்டு விதி மீறியிருந்தாலும்
ஒரு நல்ல கவிதை அதற்குரிய அங்கீகாரத்தை இழக்கக் கூடாது என தீர்மானித்தோம் . எனது மூத்த சகோதரன் மிக சிரத்தை எடுத்து
உன் கவிதையின் மூல அழகு மாறாமல் அதை எசுப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்தான் . பின்னர் தேர்வு குறித்த முடிவுகளை ஆசிரியரிடம்
சொல்ல …. அப்புறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே . இப்போது உன் கவிதைக்கு பரிசு கிடைத்த குழப்பம்
தீர்ந்திருக்குமென நம்புகிறேன்
.
பட்டாம்பூச்சி சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது .
அப்புறம் ஒரு முடிவெடுத்தோம் . நானும் எனது சகோதரர்களில் ஒருவரும் உன்னோடு
இணைந்து அற்புதமான கவிதைகளை உன் மூலமாக உலகிற்கு அளிப்பது என்று . ஆசிரியரிடம் சொன்னபோது அவர் சிறிது தயங்கினார்
எங்களில் இருவரைப் பிரிவதற்கு
. எனினும் மூவர் அவருடனேயே
இருப்பதால் சம்மதம் தெரிவித்து விட்டார் . அதன்
விளைவாகவே சிறப்புப் பரிசாக என்னை உன்னிடம் அனுப்பி வைப்பது என்ற முடிவு . இதோ , நானும் உன்னை வந்தடைந்து விட்டேன் .
நடப்பதை நம்புவதா , வேண்டாமா
என்ற குழப்பத்தில் நானிருப்பதை உணர்ந்து தொடர்ந்து பேசத் தொடங்கியது பட்டாம்பூச்சி .
என்ன வியப்பாக உள்ளதா ? பொறு மீதியையும் கேட்டு விடு . அதற்கு முன் ஒரு கேள்விக்குப் பதில் சொல் . உன்னிடம் ஒரு பேனா இருந்ததே . அது இப்போது எங்கே ?
சுயநிலை மறந்து மிதந்து கொண்டிருந்த நான் தரையில் கால் வைத்தேன் . ஒரு பொம்மையைப் போல் இயங்கி அருகில் இருந்த
அலமாரியை அடைந்து அதனுள் இருந்த பேனாவை எடுத்து வந்து மேசையில் வைத்தேன் . அது மகீ எனக்கு வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த
வெளிநாட்டுப் பேனா
. அதை வைத்துதான் நிறைய
கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன் . கணினியில் நேரடியாக தட்டச்சு செய்யும் அளவிற்கு
மொழி மீது ஆளுமை வந்த பிறகு அதன் தேவை இல்லாதததால் அலமாரிக்குள் வைத்து விட்டேன் பயன்
படுத்தாமலே . ஆனால் பட்டாம்பூச்சி எதற்காக அந்தப்
பேனாவைக் கேட்கிறது
.
மேசையில் வைத்த பேனாவைக் கண்டதுமே பட்டாம்பூச்சி வேகமாக அதன்
மேல் வந்து அமர்ந்து கொண்டது
. பின் விலகி அதன்
அருகில் அமர்ந்தது
. அதனிடம் இருந்து
புரியாத மொழியில் வார்த்தைகள் வெளிப்பட்டன . தொடர்ந்து அதே மொழியில் இன்னொரு குரல் . அது வெளிப்பட்டது பேனாவிடம் இருந்து என்பது
புரிபட எனக்கு சிறிது நேரம் பிடித்தது .
நான் ஒருவன் இருப்பதையே மறந்து பேனாவுடன் பேசிக் கொண்டிருந்த
பட்டாம்பூச்சி சற்று நேரம் கழித்து என் பக்கம் திரும்பியது .
ஆ
… சொல்ல மறந்து விட்டேனே . இது என்னுடைய கடைசி சகோதரன் . இருவர் உன்னோடு இருப்பது என்று முடிவெடுத்தவுடனேயே
ஆசிரியரிடம் சொல்லி விட்டு இவன் மறுநாளே கிளம்பி வந்து விட்டான் . இரு தடவை உருமாறலாம் என்ற சலுகையைப் பயன்படுத்தி
பேனாவாக மாறி விட்டான்
. ஆனால் ஏனோ தெரியவில்லை , சில நாட்களிலேயே நீ அவனைப் பயன்படுத்தாமல்
சிறைப் படுத்தி விட்டாய்
. உன்னோடு இணைந்து
கவிதைகள் பல படைக்கும் ஆர்வத்தில் இருந்த அவன் மனம் உடைந்து அங்கிருந்த எங்களிடம் தினசரி
வருத்தத்தோடு பேசிக் கொள்வான்
. நான் வரும்வரை பொறுமையாக
இருக்கும்படி நாங்கள் ஆறுதல் கூறித் தேற்றுவோம் அவனை .
பட்டாம்பூச்சி பேசிக் கொண்டிருக்கும்போதே எனக்குள் பழைய ஞாபகம்
ஒன்று மங்கலாக நிழலாடியது
. போட்டிக் கவிதையை
அனுப்பி வைத்த சில நாட்கள் கழித்து நானும் மகீயும் மது அருந்திய ஒரு நாளில் , அவன் சென்ற பிறகு ஒரு கவிதை எழுதும் முயற்சியில்
பேனாவை எடுத்தவன் போதையின் கிறக்கத்தில் உடல் ஒத்துழைக்காமல் பேனாவை மூடி மேசையில்
வைத்துவிட்டு படுத்து விட்டேன்
. கண்களைப் பாதி மூடிய
நிலையில் படுத்திருக்கும்போது மங்கலாக காட்சி ஒன்று தென் பட்டது . மேசையின் ஒரு மூலையில் விநோதமான ஒரு பட்டாம்பூச்சி
அமர்ந்திருந்த காட்சி
. பிரமை என்று எண்ணியவாறே
போதையில் தூங்கி விட்டேன்
.
காலையில் எழுந்த போது மேசையில் பட்டாம்பூச்சி இல்லை . இரவு கண்டது பிரமையாகத்தான் இருக்க வேண்டும்
என்று நினக்கும் போதே இன்னொரு மாறுதல் மனதில் பட்டது . இரவு நான் வைத்த இடத்தில் இருந்து பேனா சற்றே
விலகி இருப்பது போலத் தோன்றியது
. சட்டென்று அந்த எண்ணத்தை
உதறினேன் . இரவு போதை சற்று அதிகமாகி இருக்க
வேண்டும் என்று தோன்றியது
. இரவு எழுத நினைத்து
எழுதாமல் விட்ட கவிதை வரிகள் நினைவில் வர மேசை முன் அமர்ந்து எழுதத் தொடங்கினேன் . எப்போதும் இல்லாத கூடிய அழகோடு வார்த்தைகள்
காகிதத்தில் வந்து விழுந்தன
.
பட்டாம்பூச்சி சொன்ன கதை மங்கலான அந்த நினைவுகளைத் தெளிவாக்கியது
போலிருந்தது . அப்படி என்றால் அன்று இரவு அந்த
இன்னொரு பட்டாம்பூச்சி பேனாவாக உருமாறியிருந்தது என்பதை உணர முடிந்தது . அதன்பின் அந்த பேனாவால் எழுதிய எல்லாக் கவிதைகளுமே
வழக்கத்தைவிட அதிக பொலிவோடு இருந்தது என்ற எண்ணமும் மனதில் தவிர்க்க முடியாமல் வந்து
போனது .
இப்போது ஓரளவிற்கு எல்லாமே புரிந்திருக்குமே . நல்லது இன்று முதல் நீயும் , நானும் , எனது சகோதரனும் சேர்ந்து உலகத்தின் ஆகச்
சிறந்த கவிதைகளைப் படைக்கப் போகிறோம் .
பட்டாம்பூச்சியின் குரலில் அதன் சகோதரனைச் சந்தித்த மகிழ்ச்சி
நிறைந்து இருந்தது
.
அதற்கான திட்டத்தின் கடைசி நிகழ்வாக இப்போது நான் , எனது இரு தடவை உருமாறும் சலுகையை பயன்படுத்தி
நீயாக மாறப் போகிறேன்
. நீ என் வடிவத்தில்
எங்களோடு எப்போதும் இருப்பாய்
. உனது கற்பனைகளை பட்டாம்பூச்சி
உருவத்தில் இருந்து நீ கூறக் கூற நான் உன் வடிவில் இருந்து என் சகோதரன் துணையோடு இனிய
கவிதைகளாக மாற்றி இந்த உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் நமது ஆகச் சிறந்த கவிதைகளை
நிரப்புவோம் …
எனக்குள் ஏதோ நிகழ்வதுபோல உணரத் தொடங்கி , கொஞ்சம் கொஞ்சமாக எனது உடல் இலேசாக மாறிப்
பறப்பது போல் தோன்றிய கணத்தில் கதவு தட்டப்பட்டது . மகீயாகத்தான் இருக்க வேண்டும் .
------------------------------------------------------------------------------------------------------
[ புதுப்புனல் இதழில் வெளியான எனது சிறுகதை ]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக