வெள்ளி, 6 மார்ச், 2020

உருவு கண்டு ......

உருவு கண்டு ......
------------------------------






காலியாக கிடந்த பக்கத்து வீட்டிற்கு ஆள் வந்து விட்டார்கள் . ஒரு முதியவர் . அவரது மனைவி . பெரியவர் டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் .இருவரும் நிரந்தரமாக இங்கே இருக்கப் போகிறவர்கள் .

தற்காலிகமாக இரு இளம் பெண்கள் . பெரியவரின் மகள் வயிற்றுப் பேத்திகள் . படிப்பு பெங்களூரில் . பெற்றோர்கள் டான்சேனியாவில் இருப்பதால் விடுமுறையைக் கழிக்க தாத்தா வீடு . தகவல்கள் உபயம் என் மனைவி.


வழக்கம் போல் மனைவி அவர்களோடு எளிதில் சகஜமாகி விட்டாள் . பெரியவர்களுக்கு பக்திப் பாடல்கள் .இளையோருக்கு ரமணிசந்திரன் . காட்டிக் கவிழ்த்து விட்டாள் .மூன்றாம் நாள் மூத்தவளோடு என் அறைக்குள் வந்தாள் .


” இது மல்லிகா ” என்று ஆரம்பித்து விரிவாக அறிமுகம் செய்தாள் . ”படிக்கிறதிலே ரொம்ப ஆர்வம் . உங்ககிட்ட நெறைய புத்தகம் இருக்குன்னு சொன்னதும் உடனே வரணும்ட்டா . “


அடுக்கப் பட்டிருந்த புத்தகங்களை பார்த்து விழிகள் விரிய ” ஃபண்டாஸ்டிக் கலக்‌ஷன் ” என்றாள் மல்லிகா .


” எல்லாம் கொஞ்ச ஹெவி சப்ஜக்ட்ஸ் . உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலே . “ மனதிற்குள் ” புரியுமான்னு தெரியலே “


நீட்ஷே , ஹெகல் , சார்த்ரு , ஃபோர்ஹே ....


வரிசையாக பார்த்தாள் . ஒரு புத்தகத்தை தூக்கிக் காட்டினாள் . பின் நவீனத்துவம் பற்றியது . “ இது கூட வச்சிருக்கீங்களா ” ஆச்சரியக் குரல் .


எனக்கே புரியாத புத்தகம் அது . இன்னும் நாலைந்து தடவையாவது படிக்கும் உத்தேசத்தில் இருந்தேன் .


அவள் புத்தகத்தை திருப்பினாள் . பின் அட்டை பார்வையில் வந்தது . புகைப்படத்துடன் ஆசிரியர் பற்றிய குறிப்பு . புகைப்படத்தில் மல்லிகா சிரித்துக் கொண்டிருந்தாள் .
” ஐநூறு பிரிண்ட் போட்டேன் . ஐம்பது கூட விற்கவில்லை . “ மல்லிகா சொன்னாள் புகைப்படத்தில் இருந்த அதே புன்னகையோடு .


*********************************************************************


[ பாக்யா , மார்ச் 13 – 19 , 2015 இதழில் வெளியாகியுள்ள எனது ஒரு பக்கக் கதை . ]

மார்ச் 6 , 1967 .... [ இதே தினம் அன்று.... ]

மார்ச் 6 , 1967 .... [ இதே தினம் அன்று.... ] 
--------------------------------------------------------------------------



தமிழகத்தில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத மாற்று அரசு பதவி ஏற்றது 1967 மார்ச் 6 அன்றுதான் . அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து பதவி ஏற்ற தினம் . அந்த மாற்றம் தமிழகத்திற்கு ஏற்றத்தைக் கொண்டு வந்ததா , அல்லது ஏமாற்றத்தை கொண்டு வந்ததா என்பது குறித்த பதிவில்லை இது .

அப்போது எனக்கு 11 வயது . கதர் வேட்டிக்கும் , கரை வேட்டிக்கும் அதிக வித்தியாசம் தெரியாத வயது . ஆனால் அந்த தேர்தல் குறித்த என்னுடைய நினைவுகள் இன்னும் மங்கலாக என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன . அந்த வயதில் கட்சிகள் குறித்தெல்லாம் எந்த விதமான கருத்துகளும் என்னிடம் இருந்ததாக நினைவு இல்லை . அப்பா கதர் சட்டைதான் போடுவார் . அது அவர் காங்கிரஸ் அபிமானி என்பதால் என்பதே அதன் பின் பல வருடங்கள் கழித்துதான் எனக்குப் புரிய வந்தது . பக்கத்து வீடுகளில் உள்ள பல இளவயது அண்ணன்மார்கள் எல்லோருமே தி.மு.க . ஆதரவு கோஷ்டிதான் . [ எல்லோருமே அண்ணன்தான் அப்போது ] அதிலும் ஒருவர் அவரது பள்ளிக்கூட நோட்டுகளின் முதல் பக்கத்தில் தி.மு.க . துணை என்று எழுதி வைத்திருப்பார் . பெரியவர்கள் யாராவது கேட்டால் திருச்செந்தூர் முருக கடவுள் துணை என்று விளக்கமும் கொடுப்பார் . சரி , அது இருக்கட்டும் விஷயத்திற்கு வருவோம் .
பக்கத்து வீட்டு அண்ணன்மார் அத்தனை பேரும் தேர்தல் களத்தில் படு மும்முரமாக இருந்ததால் ஒருவிதமான ஆர்வம் ஏற்பட்டு நானும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் குதித்து விட்டேன் . மாலை பள்ளி முடிந்து வந்ததும் நேரா கட்சி அலுவலகம்தான் . [ அது ஒரு பெட்டிக்கடையை ஒட்டிய ஒரு திண்ணை ] போனதுமே நிறைய பிரச்சார சாதனங்களைக் கையில் கொடுத்து விடுவார்கள் . காகிதக் கொடிகள் , ஊக்குடன் கூடிய சோடா சிப்பி போன்று இருக்கும் வட்ட இரும்பு வில்லைகள் .... இத்யாதிகள் . எல்லாவற்றிலும் கருப்பு சிவப்பும் , உதய சூரியனும்தான் . அவற்றை எல்லாம்விட என்னை அதிகமாக ஈர்த்தது , கழுத்தில் கட்டோடு எம்.ஜி.ஆர். படம் போட்ட சின்னச் சின்ன போஸ்டர்கள்தான் . எம். ஆர் . ராதா சுட்டதால் ஏற்பட்ட காயத்திற்குப் போட்ட கட்டோடு எம்.ஜி.ஆர் கும்பிட்டவாறே உதய சூரியனுக்கு ஓட்டு கேட்பார் . [ என்னை மட்டும் அல்ல , தமிழகத்தையே அந்த போஸ்டர்தான் ஈர்த்திருந்தது என்பது 1972 ல் தான் புரிந்தது – அப்ப பி.யூ.சி நான் ]
மற்ற எல்லோரையும் விட என்னிடம்தான் அதிக சாதனங்கள் தருவார்கள் . [ அதில் சிலவற்றை நான் தனியாக ஒதுக்கி வீட்டிற்கு கொண்டு வந்து விடுவது வேறு விஷயம் . ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் தீப்பெட்டி படம் , சினிமா பாட்டுப் புத்தகம் , ஃப்லிம் , சினிமா நோட்டிஸ்கள் போன்ற பொக்கிஷங்களோடு சேர்த்து அவற்றையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன் . காலப் போக்கில் எல்லாப் பொக்கிஷங்களும் காணாமல் போய் விட்டது குறித்து இன்னும் மனதில் ஒரு சின்ன வலி உண்டு ]
இரும்பு வில்லைகளை சட்டையில் குத்திக் கொண்டு , கையில் கொடியோடு தெருத் தெருவாக ஊர்வலம் . [ இருப்பதே ஐந்தாறு தெருக்கள்தான் ]
“ போடுங்கம்மா ஓட்டு ... உதய சூரியனைப் பார்த்து ... “
” பக்தவச்சலம் அண்ணாச்சி ... பருப்பு விலை என்னாச்சி ? “
” அழகேசன் அண்ணாச்சி .... அரிசி விலை என்னாச்சி ? “
“ காமராஜ் அண்ணாச்சி... கருப்பட்டி விலை என்னாச்சி ? “
என்பது போல எதுகை , மோனையோடு பல கோஷங்கள் . [ அந்த கடைசி கோஷத்தை உச்சரித்தது குறித்து , விஷயம் தெரிந்தவன் ஆன பிறகு பல முறை வருத்தப் பட்டிருக்கிறேன் . ] விடுமுறை நாட்கள் என்றால் காலையில் இருந்தே ஊர்வலம் தொடங்கிவிடும் . [ இதில் ஆச்சரியமான விஷயம் அப்பா இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவித்ததில்லை . என் வீட்டிற்கு முன்னால் வரும்போது மட்டும் என் குரலை அமுக்கிக் கொள்வேன் . ] கூடுதலான கவர்ச்சி அண்ணாவின் “ ரூபாய்க்கு மூன்று படி “ முழக்கம் .
இது தவிர சின்னம் வரையும் குழுவிலும் எனக்கு இடம் உண்டு . [ நீதான் நல்லா படம் போடுவியேடே ...என்று உசுப்பிவிட்டு கையில் பெயிண்ட் டப்பாவைக் கொடுத்து விடுவார்கள் . ] உதய சூரியன் படம் போடுவதும் எளிதுதான் . ரெண்டு வளைகோடு ... மலை . நடுவில் இன்னொரு அரை வட்டம் . அப்புறம் சின்னதும் , பெரிதுமாக சில கோடுகள் . உதயசூரியன் தயார் . [ காங்கிரஸ் சின்னம் இரட்டைக் காளை – வரைவது மிக சிரமம் . அதற்கு ஸ்டென்ஸில் வைத்திருப்பார்கள் . பத்து சூரியன்கள் இருந்தால் ஒரு இரட்டைக்காளைதான் இருக்கும் .]
இவை போக பக்கத்துவீட்டு அண்ணன்மார்கள் கைக்காசு போட்டு , தேரடி மண்டபம் அருகில் வாரத்துக்கு ஒரு கூட்டம் போட்டு விடுவார்கள் . ” பலகுரல் மன்னன் ” சிவகங்கை சேதுராசன் , தேவராசன் – நிர்மலா ...இசை நிகழ்ச்சிகள் வேறு . அது தவிர போகிற போக்கில் கலைஞரோ அல்லது நாவலரோ [ சரியாக ஞாபகம் இல்லை ] வழியில் சில இடங்களில் கழகக் கொடிகளை ஏற்றி வைத்தார்கள் .
மொத்தத்தில் அந்த தேர்தல் என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு விட்டது . ஊர் முழுக்க கறுப்பு சிவப்பும் , உதய சூரியனும்தான் . இடை இடையே இரட்டைக் காளைகள் , கதிர் அரிவாள் கண்ணில் படும் . [ தொகுதி ஹார்வி மில் இருந்த பகுதியை உள் அடக்கி இருந்ததாலும் , விவசாயிகள் அதிகம் என்பதாலும் கொஞ்சம் இடதுசாரி வாக்கு வங்கி உண்டு . எனவே எங்கள் தொகுதி இடதுசாரிக்கு ஒதுக்கப்பட்டு திரு . நல்லசிவம் நிறுத்தப் பட்டதில் பக்கத்து வீட்டு அண்ணன்மார்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் . திரு . நல்லகண்ணுவும் , திரு . நல்லசிவமும் ஒரு தேர்தல் விடாமல் நின்று , விடாமல் தோற்றும் போவார்கள். ] ஆனாலும் சலிக்காமல் அரிவாள் சுத்தியலுக்காக வேலை செய்தார்கள் - எம் ஜி ஆரின் படத்தை முன் நிறுத்திதான் . அரிவாள் சுத்தியல் வரைவதும் எளிதுதான் .
இப்படியாக எனது முழு உழைப்போடு தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது . முடிவு சொல்லும் நாள் அன்று , ஊராட்சி வானொலி அறை அருகில் எங்கள் ஊர் வரலாறு அறியாத கூட்டம் . [ எங்கள் வீட்டில் ரேடியோ உண்டு . ஆனால் வெற்றியைக் கொண்டாட முடியாதே . ] முடிவுகள் வர வர கூட்டம் உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தது . எல்லாம் கழகத் தோழர்கள்தான் . எதிர்பாராத வகையில் கழகம் பெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது . கழக தலைவர்கள் எல்லோரும் அபார வெற்றியைக் குவித்துக் கொண்டிருந்தனர் . பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர் சாதனை புரிந்து இமாலய வெற்றி .
கழகத்தினரே எதிர்பாராத செய்தி விருதுநகர் தொகுதியில் இருந்து வந்தது . சீனிவாசன் என்ற கல்லூரி மாணவரிடம் காமராஜர் தோற்றுப் போனார் . கூட்டம் ஆர்ப்பரித்தது . தமிழகம் முழுவதுமே கழகத் தோழர்கள் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் . இருந்தாலும் எங்கள் தொகுதியில் முடிவு நேர்மாறாக ஆகிவிட்டது . காங்கிரஸ் அபேட்சகர் கோமதி சங்கர தீட்சிதர் வெற்றி பெற்று விட்டார் . [ ஏற்கனவே இரு தடவைகளுக்கு மேல் அவர்தான் வெற்றி பெற்றிருந்தார் . எங்கள் தொகுதி தேர்தலைப் பொறுத்தவரை அவர் ஒரு எம்.ஜி.ஆர். மாதிரிதான் . அவர் உயிரோடு இருந்தவரை அவர்தான் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ . சுதந்திரத் தியாகி . காங்கிரஸ் பொன்விழா மண்டபம் என்ற கட்டிடத்தில்தான் தங்குவார் . ] அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற சில தொகுதிகளில் அதுவும் ஒன்று . அதன்பின் தொடர்ந்து வந்த சில தேர்தல்களிலும் காங்கிரஸ்தான் எங்கள் தொகுதியில் .
நாடு முழுவதும் கழகம் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும் , எங்கள் தொகுதியில் தோல்வி என்பதில் பக்கத்துவீட்டு அண்ணன்மார்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான் . அதன்பின் அண்ணா பதவி ஏற்பதைப் பார்க்க சிலர் செலவு செய்து சென்னைக்கும் போய் வந்து அந்தக் கதையை பல நாட்களுக்குச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் .
பதிவு நீண்டு விட்டது . இன்னும் கொஞ்சம்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது பதிவை முடிக்கு முன்பு ஒரு விஷயம் மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன் .
கைக்காசை செலவழித்து கழகத்திற்காக பாடுபட்ட அந்த பக்கத்து வீட்டு அண்ணன்மார்களில் ஒருவர் கூட , இத்தனை வருட கழக ஆட்சிகளில் எந்த பதவியோ , பயனோ அடையாமல் அடையாளம் இழந்து போய்விட்டார்கள் .
கட்சிக்காக செலவழித்த காசை சேமித்து வைத்திருந்தால் கூட பொருளாதார ரீதியில் சற்று மேம்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் .
இவ்வளவு சொன்னவன் எந்தத் தொகுதி என்று சொல்லாமல் விட்டு விட்டேனே . நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம்தான் அந்தத் தொகுதி . அதன் அருகில் அம்பையைச் சார்ந்த ஒரு சிற்றூர்தான் எங்க ஊர் .
[ சம்பவங்களை மட்டுமே பதிவு செய்துள்ளேன் . பின்னர் இது குறித்து நான் நினைத்துப் பார்த்தவற்றைப் பற்றிப் பேசினால் அது அரசியல் விமர்சனம் ஆகி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது . ]
*******************************************************************************