சனி, 25 ஜூலை, 2020

பார்வை


பார்வை                  

சிறுகதை                      

          “ சுப்ரா  “                                                    ஓவியம் - விஜயா 




நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை .
நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும் கணங்கள் .
காகிதங்களுடனும் , எண்களுடனும் அலுவலகத்தில் கழியும்  ‘வயிற்றுக்காக ‘ நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில் உள்ள இந்த நேரம்தான் மனித மனத்தின் நிஜமான பக்கத்தைக் காட்டும் புத்தகம் .
எதிரே தெரிகின்ற உயர்ந்த கட்டிடம் . பின்புறம் ஓடும் கழிவுநீரின் கரைகளில் முடங்கியிருக்கும் குடிசைகள் – அதனைச் சுற்றி உழலும் ஒரு தனி உலகம் .
எதிர்ச் சுவரில் பெரிய போஸ்டர் . உடைகளைப் பற்றிக் கவலைப் படாத கதாநாயகி . அவளை விடப் பெரியதான A . அந்தப் படங்களைப் போடுவதற்கென்றே சில தியேட்டர்கள் . அந்தப் போஸ்டர்களை ஒட்டுவதற்காகவே சில சுவர்கள் .
பக்கத்தில் சிறிதாக பகல் காட்சியில் ‘ 7வது மனிதன் ‘ . பிழைக்கத் தெரியாத டைரக்டர் .
பெரிய சதுரத்தை நிற்க வைத்து வர்ணங்களை இறைத்தாற்போல பெட்டிக்கடை . எத்தனை பத்திரிகைகள் ! இலக்கிய ஆர்வம் வளர்கிறது என்ற பெருமிதத்தைக் கொல்வதற்காகவே அவற்றின் பின்னால் கயிற்றில் தொங்கும் சில பத்திரிகைகள் . அவற்றின் அட்டையில் போஸ்டர் கதாநாயகியின் சிறு பதிப்புகள் . பெண்மைக்கு அவை அளிக்கும் விளக்கம் மனதைச் சுடுகின்றது .
திருப்தி அளிக்கும் சிகரெட்டின் பெரிய விளம்பரப் பலகை . உடல் நலத்திற்கு கெடுதி விளைவது பற்றிய உபயோகமற்ற எச்சரிக்கை அதன் மூலையில் .
தினம் தினம் காணும் அசைவில்லாத காட்சிகள் . அவற்றைவிடச் சுவையானவை அவற்றின் பின்னணியில் உலவும் மனிதர்கள் .
பஸ் ஷெல்டரின் மூலையில் இருக்கும் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பச்சைப் புடவை . இளம்பெண் .கல்லூரிப் பெண் . அருகில் நின்று கொண்டு வலது கை அவள் தோளில் உரச கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வாலிபன் . அவர்களுக்கிடையே மெல்லிய குரலில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லாத உரையாடல் . இடை இடையே பிறக்கும் அடங்கிய சிரிப்பு .
அடிக்கடி அவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே தனக்குள் எதோ பேசிக் கொள்ளும் வயதானவர் . கையில் குடை , மாத ஜோதிடம் . ரிட்டையர்ட் லைஃபைக் காட்டும் முகம் . அவரிடம் ஏற்படும் உணர்ச்சிகளின் பரிமாணம் எனக்குப் புரியவில்லை .
தலைமுறை வித்தியாசம் உருவாக்கிய வெறுப்பாக இருக்கலாம் . அவள் வயதில் தனக்கிருக்கும் மகள் இதே நேரம் இதே போல எவனுடனாவது நின்று கொண்டிருப்பாளோ என்ற பயமாக இருக்கலாம் .
பார்வையைத் திருப்புகின்றேன் .
வாரப்படாத தலைமுடி , ஷேவ் பண்ணாத தாடி , மீசை , டெனிம் , அலட்சியமாக ஜீன்ஸூள் செருகப் பட்டிருக்கும் சட்டை , கண்களில் ஒளியில்லாத விரக்தி , கையில் ‘ நீட்ஷேயின் கடிதங்கள் ‘ . தன் மீது மோதி திரும்பும் பார்வைகளின் வெறுப்பைக் கண்டு கொள்ளாமல் இடைவிடாமல் புகையும் சிகரெட்டோடு , உடம்பை தளர்த்தி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இவனை கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த நாளிலிருந்தே இந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
அப்போதெல்லாம் ‘ ரேமன்ஸ் ‘ விளம்பரத்தில் இருந்து கிளம்பி வருவது போல இருப்பான் . கவலைப் படுவது எப்படி என்று ஒரு ஸிம்போஸியமே நடத்தினால் கூட அவனுடைய மகிழ்ச்சி குறையாது என்பதைப் போல அவ்வளவு கலகலப்பாக இருப்பான் .
அவனுடைய மாற்றத்தை விடாமல் கவனித்துக் கொண்டுவரும் எனக்கு அவன் மனதின் பிரளயம் நன்றாகப் புரிகின்றது .
என்ன மச்சி ! நேத்து இண்டர்வியூவிற்குப் போனியா ? “ இந்தக் கேள்வி அவனிடம் கேட்கப்படுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .
“ எஸ் “ அமைதியான பதில் . இதுவும் வழக்கமானதுதான் .
“ இப்படியேவா போனே ? “
பதிலாக வரும் அவன் வார்த்தைகள் சுற்றி நிற்பவர்களைப் பாதிக்கின்றது . தங்களது சமூக நியதிகளை அவன் தாண்டி ஓடுவதைப் போல அவனைப் பார்க்கிறார்கள் .அப்படி ஓடத்தான் விரும்புகின்றேன் என்பதைப் போல அவன் அதே அலட்சியத்துடன் புகையை உள்ளே இழுத்து வெளியே விடுகின்றான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
கடந்த காலத்தை மறைக்க முயலும் மலிவான அலங்காரங்களோடு , உடம்பின் வளைவுகளாலும் செயற்கை சிரிப்பாலும் தனது தொழிலுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் பெண் . அவளைப் பொறுத்த வரையில் இரவு – பகல் என்பதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகள். வாழ்வில் வயிற்றின் பங்கை நன்கு உணர்ந்தவள் .
சில சமயங்களில் அவள் கண்களில் தெரிவதைப் படிக்க முயல்வதுண்டு . தெரிவதெல்லாம் அவற்றில் பளிச்சிடும் அழைப்புதான் .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
“ ஹலோ , என்னது இது ? மிஸஸ் துர்க்காராம் பஸ்ஸிற்காக நிற்பது ஆச்சரியமா இருக்கே ! வண்டி என்னாச்சு ? “
நான் மிஸ்ஸ் துர்க்காராமைப் பார்க்கிறேன் . வயதின் மேல் ஏற்பட்ட பயம் அவள் அலங்காரத்தில் தெரிகிறது . பஸ்ஸின் மீது ஏற்பட்ட கோபத்தில் பல்லவனைத் திட்டுவது புரிகின்றது .
நான் பார்வையைத் திருப்புகிறேன் .
ஒரு மாற்றம் என் மனதை நெருடுகின்றது .
அந்த பஸ் ஷெல்டரின் மூலையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பூட் பாலிஷ் முருகன் அந்த இடத்தில் இல்லை . பதிமூன்று வயதுதான் இருக்கும் . தன் உழைப்பால் வாழ்கிறோம் என்ர பெருமிதத்தில் வறுமையை மறைக்க முயலும் முகம் . நான் அவனது வாடிக்கைகளில் ஒருவன் .
இன்று அவனை வழக்கமான இடத்தில் காணாதது ஏதோ போல் இருக்கின்றது .என்னவாயிற்று அவனுக்கு ?


மனதினுள் ஒரு நெருடல் .
நான் தினம் தினம் காணும் மனித சித்திரங்களில் அவன் சற்று வித்தியாசமானவன் . அழகற்ற கான்வஸில் வரையப்பட்ட அழகான ஓவியம் . சத்தியசோதனையைப் படிக்காமலே வாழ்க்கையை நேர் கோடு ஆக்கிக் கொண்டிருப்பவன் .
“ குட் ஈவினிங் ஸார் ! “
திரும்புகிறேன் . இடது கையில் கூடை . வலது கையில் ஒரு கடலைப் பொட்டலம் . ராமு – ஒவ்வொரு மாலையும் நான் சந்திக்கும் இன்னொரு நேர்கோடு . சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடலைக் கூடையோடு நகரத்தின் மூலைமூலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை நம்பி ஒரு குடும்பம் . சின்ன வயதில் எத்தனை பொறுப்புகள் .
அவன் நீட்டுகின்ற கடலையை வாங்கிக் கொள்கிறேன் .
“ முருகன் எங்கே ? “
“ காலைல போலீஸ் புடிச்சிட்டுப் போயிட்டாங்க ஸார் . “
“ நிஜமாவா ? “ என் மனதின் நெருடல் விரிகின்றது .
 ஆமா ஸார் . ஒரு வாரமா வருமானமே இல்லைன்னு சொல்லி அழுதான் . பிக்பாக்கெட் அடிக்கப் போறேன்னான் ... எவ்வளவோ சொல்லியும் கேட்கல . “
ராமு டெனிம் ஜீன்ஸிற்கு கடலையோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுக்கிறான் . இன்னொரு கஸ்டமர் .
“ தாங்க்ஸ் ராமு ! “ டெனிம் ஜீன்ஸ் காசோடு நன்றியையும் அளிக்கிறான் .
ராமுவின் பார்வை மிஸஸ் துர்க்காராம் மீது பதிகின்றது . நகர்கிறான் .
“ கடலை சாப்பிடுங்கம்மா . “
“ நீ விற்கிற கடலையையா ? இப்படி பிளாட்பாரத்தில் விற்பதை எல்லாம் வாங்கித் தின்னா ஊர்ல உள்ள வியாதியெல்லாம் வரும் . கொஞ்சங்கூட சுத்தமில்லாதவங்க . “
ராமு நகர்கிறான் . இளம் கால்களில் வேகம் .
அவனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு மிஸஸ் துர்க்காராம் காலியாக வரும் ஆட்டோவை கை காட்டி நிறுத்துகிறாள் .
மாற்றத்திற்காக பஸ் பயணம் செய்ய வந்து , பொறுமை இழந்து போய் விட்ட நிலையில் அவசரமாக ஆட்டோவை நோக்கி விரைகின்றாள். ஆட்டோவில் ஏறப் போகும் நேரத்தில் அவளை நோக்கி இரண்டு மெல்லிய கைகள் நீளுகின்றன . வறுமை உடம்பெங்கும் தெரிய நிற்கும் இந்நாட்டு செல்வம் ஒன்று . சகோதர இந்தியன் !
சுண்டி விடப் பட்ட நாணயம் ஒன்று உருண்டோடுகிறது . முழு நாலணா . மிஸஸ் துர்க்காராமின் அலட்சியம் நாணயத்தின் ஒலியில் தெரிகின்றது . குனிந்து பொறுக்கும் விரைவில் அந்தச் சிறுவனின் இல்லாமை தெரிகின்றது .
அந்த நாணயம் பொறுக்கப் படுவதற்கு முன்பே மிஸஸ் துர்க்காராமை நோக்கி நீளும் மற்றொரு கை . மீண்டும் ஒரு நாணயத்தின் உருளல் . ஆட்டோ புறப்படுகின்றது . திரும்பி சாலையின் வாகன வெள்ளத்தில் கலந்து மறைகின்றது .
என் மனதில் நெருடல் அதிகமாகின்றது . சட்டத்தின் பிடியில் முருகன் தெரிகின்றான் . தூரத்தில் நேர்கோடாகச் சென்று கொண்டிருக்கிறான் ராமு.  இந்த நேர்கோடும் உருவம் மாறிவிடலாம் , இல்லை மாற்றப்பட்டு விடலாம்.
பிறரின் இரக்கத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் வரிசையைப் பார்க்கிறேன் . மிஸஸ் துர்க்காராமிடம் நாலணா பெற்ற சகோதர இந்தியர்கள் , வலது கையில் பாதி இல்லாத ஒருவன் , கடந்த காலத்தின் சுவடுகள் முகத்தில் புண்களாக மாறிய பெண் , எதிரில் விழும் நாணயங்களையும் பக்கத்தில் வரும் மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடிகின்ற ஒரு குருடன் . வரிசை நீள்கின்றது . பின்னால் சுவரில் ஏதோ ஒரு ஆண்டின் இலட்சிய வரிகள் நிறம் மாறித் தெரிகின்றது .  இவர்களுக்குத் தேவை ஊக்கம் , இரக்கம் அல்ல .
முருகனும் அந்தப் பெண்ணும் இவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறார்கள் . அவர்கள் உரு மாறியவர்கள்தான் . ஆனால் சமூகத்தின் இரக்கத்தை நம்பி வாழாமல் தங்கள் மன வலிமையால் வாழத் துணிந்துவிட்ட சுயமரியாதைக்காரர்களாகத் தெரிகிறார்கள் . எங்கோ படித்த வரிகள் நினைவில் மோதுகின்றன . சமுதாயம் குற்றங்களை உருவாக்குகிறது . குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கிறார்கள் .
உண்மைதான் . இவர்கள் உருவாகவில்லை . உருவாக்கப் படுகிறார்கள் .
“ ஏ சமுதாயமே ! உன்னிடம் இருந்து உருண்டோடும் நாணயங்கள் உண்மை உழைப்பிற்கு கூலியாக மாறட்டும் . சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கும் போலி கௌரவமாக இருக்க வேண்டாம் . “
மனதின் குரல் வலியை ஏற்படுத்துகிறது .
“ உன் வக்கிர எண்ணங்களால் நேர்கோடுகளை உருமாற்றி சிதைத்து விடாதே . அவர்களும் மனிதர்கள்தான் . சத்திய சோதனையை வாழ்க்கையாக்கிக் கொள்ள அவர்கள் மகாத்மாக்கள் இல்லை . “
டெனிம் ஜீன்ஸ் கையில் சிகரெட்டோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறான் . மனதின் குமுறல் சிகரெட் புகையாக வெளியேற வெறித்த பார்வையோடு நின்று கொண்டிருக்கிறான் .
அன்றைய வருமானத்தை அளிக்கப் போகும் எவனோ ஒருவனுடன் அந்தப் பெண் பக்கத்துச் சந்தில் மறைகிறாள் . நான் வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .
----------- ------------ ------------ -------------
“ வட்டங்கள் – சதுரங்கள் – முக்கோணங்கள் “ என்ற தலைப்பில் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் பிரசுரத்திற்கு தேர்வாகி 20. 05 .1983 தேதியிட்ட தினமணி கதிர் வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை .  
------------------------------------------------------------------------------------------------------     
   

சனி, 18 ஜூலை, 2020

வேதாளம் சொன்ன தேர்தல் கதை .


வேதாளம் சொன்ன தேர்தல் கதை .


” சுப்ரா “                                                                      ஓவியம் - அரஸ்    
                        




தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து , “ மன்னனே ! நீ என்ன வேலை செய்து வெற்றி அடையப் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது . ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத் தாம் அடைந்ததைக்கூட எளிதில் விட்டு விடுகிறார்கள் . இதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் . கவனமாகக் கேள் என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது .
தமிழ்நாடு என்ற தேசத்தில் பலவிதமான தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம் . பாராளுமன்றம் , சட்டசபை , மேல்சபை , அவை தவிர அவ்வப்போது இடைத் தேர்தல்கள் என்று ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கும் .
ஆயினும் திடீரென்று எதிர்பாராத ஒரு தேர்தல் வந்தது . பஞ்சாயத்துத் தேர்தல் என்று பெயர் . பாராளுமன்றத்திற்கும் , சட்டமன்றத்திற்கும் போகச் சந்தர்ப்பம் கிடைக்காத அரசியல்வாதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட தேர்தல் .
வெகு காலமாக நடைபெறாமலே இருந்து திடீரென்று பஞ்சாயத்துத் தேர்தல் வந்ததும் தமிழ்நாடு திருவிழாக் கோலம் பூண்டது . தேர்தல் காலச்  சுறுசுறுப்பில் கலகலப்பானது . பலவிதக் கொடிகள் பறக்கவிடப் பட்டன .எல்லாச் சுவர்களும் வெள்ளை அடிக்கப்பட்டுத் தேர்தல் கோஷங்கள் எழுதப்பட்டன . சாலைகளில் வாகனங்கள் கொடிகளோடு விரைந்தன . ஒலி பெருக்கிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன .
வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்தன . இடம் நிச்சயமானவர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தார்கள் . மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்க ஆரம்பித்தார்கள் . மற்றவர்கள் தங்கள் பெயர் வெளியாவதற்காகக் காத்திருந்தார்கள் .
தேர்தல் சமயங்களில் மட்டுமே உருவாகும் கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீட்டின் காரணமாக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாயிற்று . அதன் காரணமாக நிறையப் பேரின் இரத்த அழுத்தமும் அதிகமாயிற்று .
ஆனால் அந்த பரபரப்பினால் எந்தவிதத்திலும் பாதிக்கப் படாமல் இருந்தார் ராமசாமி . எக்காளப்பட்டி யூனியன் தலைவர் பதவிக்குத் தன் கட்சி வேறு யாரையும் நிறுத்தாது என்று அவருக்குத் தெரியும் . ராமசாமி அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஆளுங் கட்சிப் பிரமுகர் . வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு , தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் .
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒவ்வொரு கட்சியும் மாற்று வேட்பாளராக ஒருவரை நிறுத்தும் . ராமசாமிக்கு மாற்று கூடக் கிடையாது. அந்த அளவிற்கு நிச்சயமாக்கப்பட்ட இடம் அவருடையது .
பிரதான எதிர்க்கட்சி அவரை எதிர்த்து அறிவுத் தம்பியை நிறுத்தியது. அறிவுத் தம்பி எம். . முடித்த இளைஞர் . கட்சியில் தீவிரப் பற்று உடையவர் . அவருக்கு மாற்றாக இன்னொருவர் .
அப்புறம் இன்னொரு தேசியக் கட்சியும் ஒருவரை நிறுத்தியது . அவருக்கும் ஒரு மாற்று .
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளும் முடிந்தது . எக்காளப்பட்டியில் மும்முனைப் போட்டி உறுதியாயிற்று . இரண்டு மாற்று வேட்பாளர்களும் வழக்கம் போல் விலகிக் கொள்வதாகத் தீர்மானமாயிற்று.
ராமசாமிக்கு தமிழரசி என்று ஒரு மகள் . அறிவுத் தம்பியோடு ஒன்றாகப் படித்தவள் . படிக்கும்போதே இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள் . படித்து முடித்ததும் அறிவுத் தம்பி அரசியலில் இறங்கியதில் தமிழரசிக்கு சந்தோஷம் . தந்தை அரசியல்வாதியாதலால் , ஓர் அரசியல்வாதியையே கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பினாள் . ராமசாமிக்கும் அவர்கள் காதல் பற்றி ஓரளவிற்கு தெரியும்.
தன் தந்தையை எதிர்த்து அறிவுத் தம்பி தேர்தலில் நிற்பது தெரிந்ததும் தமிழரசி வருத்தப்படத்தான் செய்தாள் . ராமசாமி வெற்றி பெற்றுவிடுவார் எனத் தெரியும் . அறிவுத் தம்பியின் அரசியல் வாழ்வில் ஓர் அனுபவமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தாள் .
ராமசாமியும் கவலையில்லாமல்தான் இருந்தார் . ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க இலேசாகக் கவலைப்பட ஆரம்பித்தார் .அறிவுத் தம்பி இளைஞன் . எதிர்க் கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சி இளைஞர்களும் அவனை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் . இளைஞர் ஓட்டுகளும் , நடுநிலை ஓட்டுகளும் அறிவுத் தம்பிக்குப் போய் விட்டால் தாம் தோற்று விடுவோமோ என்று அஞ்சினார்.
அந்த்த் தேர்தலின் முக்கிய அம்சம் , ஐந்து பேரில் அறிவுத் தம்பி தவிர மற்ற நால்வரும் ஒரே ஜாதி . தேசியக் கட்சி வேட்பாளர் ஜாதி ஓட்டுகளைப் பிரித்துவிட்டால் தமக்கு ஓட்டு குறையலாம் என்ற பயம் வேறு .
எப்படியாவது அறிவுத் தம்பியை விலக்கி விட்டால் நல்லது என கணக்குப் போட்டார் . தமிழரசியைத் தூது அனுப்பினார் . அறிவுத் தம்பி விலகாவிட்டால் அவளை மறக்க வேண்டியதுதான் என்றார் .
தமிழரசி நேராக அறிவுத் தம்பியிடம் போனாள் . தந்தையின் மிரட்டலைச் சொன்னாள் . ஆனால் அறிவுத் தம்பி மறுத்துவிட்டான் .
தமிழரசி வெகு நேரம் பேசிப் பார்த்தாள் . அறிவுத் தம்பி ஆளுங் கட்சியின் மோசமான ஆட்சியைப் பற்றி தேர்தல் பிரச்சாரப் பாணியில் பேச ஆரம்பித்ததும் மனமொடிந்து விட்டாள் . ராமசாமி தேர்தலில் இருந்து விலகாவிட்டால் தன்னை மறந்துவிடும்படி பதில் மிரட்டலை வெளியிட்டான் அறிவுத் தம்பி .
தமிழரசி தன் தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னாள் . ராமசாமி விலக முடியாது என்று கூறிவிட்டார் . வேற்று ஜாதிக்காரனோடு என்ன உறவு என்று திட்டினார் . தேர்தலில் தோற்றதும் அவன் திமிர் அடங்கிவிடும் என மகளைச் சமாதானப்படுத்தினார் .
தமிழரசி அறிவுத் தம்பியைச் சந்தித்துக் காதலைவிட தந்தை மேல் உள்ள பாசமே பெரிது என்று சொல்லிவிட்டாள் .
இந்தச் சம்பவங்கள் எல்லாம் எக்காளப்பட்டி மக்களுக்குத் தெரியாது . வேட்புமனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளும் வந்து சேர்ந்தது . அன்று மாலை கிடைத்த செய்தி எக்காளப்பட்டி முழுவதுமே பெரும் வியப்பை உண்டாக்கிவிட்டது .
ராமசாமி , அறிவுத் தம்பி இருவருமே தேர்தலில் இருந்து விலகிவிட்டிருந்தார்கள் . தேசியக் கட்சியின் மாற்று வேட்பாளர் ஏற்கனவே விலகிவிட்டதால்  கடைசியில் எதிர்க் கட்சியின் மாற்று வேட்பாளராக இருந்தவருக்கும் தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும்தான் போட்டி நடந்தது .



வேதாளம் இக்கதையைக் கூறி ,   மன்னனே ! தன் மகளின் காதலுக்காகப் போட்டியில் இருந்து விலகிய ராமசாமி , காதலிக்காக விலகிக் கொண்ட அறிவுத் தம்பி , தந்தை மீதுள்ள பாசத்தால் காதலைத் தியாகம் செய்த தமிழரசி . இவர்களில் யாருடைய தியாகம் உயர்ந்தது ? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும் “ என்றது .
விக்கிரமன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான் .
“ தியாகமாவது கத்திரிக்காயாவது ? மூவரின் செயலுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு . ஆளும் கட்சியின் தலைவர்கள் கடைசியில் சில நிர்ப்பந்தங்களால் தேசியக் கட்சியோடு கூட்டு வைக்க முடிவு செய்து விட்டார்கள் . சில தொகுதிகளை தேசியக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை . எக்காளப்பட்டியும் அதில் ஒன்று .
கூடிய சீக்கிரமே ராமசாமியை எம்.எல்.சி. ஆக்கி , முடிந்தால் மந்திரி பதவியும் தருவது என்ற செய்தியோடு தலைவர் தூது அனுப்பினார் . ராமசாமியும் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டு , மறு பேச்சு இல்லாமல் விலகிக் கொண்டுவிட்டார் .
எதிர்க் கட்சியின் தலைமையிடத்திற்குக் கடைசி நேரத்தில்தான் முக்கியமான செய்தி ஒன்று கிடைத்தது . அறிவுத் தம்பியின் ஜாதி அந்தத் தொகுதியில் மிகக் குறைவு . மாற்று வேட்பாளரால்தான் ஜாதி ஓட்டுகளைப் பெற முடியும் . கேவலம் , ஜாதியைக் காரணமாக வைத்துத் தங்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிடக் கூடாதே என்று நினைத்து அறிவுத் தம்பியை விலகிக் கொள்ளும்படி செய்தி வந்தது . இளமைத் துடிப்பில் அறிவுத் தம்பி மறுத்தான் . தொடர்ந்து சற்றே மோசமான மிரட்டல் வந்தது . அறிவுத் தம்பி புத்திசாலி . கை , கால் சேதமடைவதை விரும்பாமல் விலகிக் கொண்டான் .
ஆளுங்கட்சியை விட்டுவிட்டு பிடிவாதமாக எதிர்க் கட்சி மீது பற்று வைத்திருக்கும் அறிவுத் தம்பி போன்றவர்களால் அரசியலில் காலந்தள்ள முடியாது என்று தெரிந்த தமிழரசி தன் மனதை மாற்றிக் கொண்டாள் . பேசாமல் தன் தந்தையின் கட்சியில் உள்ள ஏதாவது ஓர் இளைஞனையே திருமணம் பண்ணிக் கொண்டால் வருங்காலம் வளமாக இருக்கும் என்று நினைத்துத்தான் அறிவுத் தம்பியின் காதலை உதறிவிட்டாள் .
“ மொத்தத்தில் மூவருக்குமே தியாகம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது . உண்மையில் தியாகம் பண்ணுபவர்கள் எக்காளப்பட்டி மக்கள்தான் . இவர்களையெல்லாம் நம்பி நாட்டையும் , எதிர்காலத்தையும் ஒப்படைக்கிறார்களே , அதனால் “ என்றான் விக்கிரமன் .
விக்கிரமனின் பதிலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டது வேதாளம் . வழக்கம் போல விக்கிரமனின் மெளனம் கலைந்ததும் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது வேதாளம் !
----------- ---------------- ------------- ---------------
                                            கல்கி  09.03.1986.