பார்வை
சிறுகதை
“ சுப்ரா “ ஓவியம் - விஜயா
நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச்
சூரியனின் மரண அவஸ்தை .
நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும்
ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ்
ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் நிஜங்களைத் தரிசிக்கும்
கணங்கள் .
காகிதங்களுடனும் , எண்களுடனும்
அலுவலகத்தில் கழியும் ‘வயிற்றுக்காக ‘
நேரத்திற்கும் , காற்றில்லாத அறையின் அவலத்தில் ஸார்த்தரின் எழுத்துக்களோடு
உறவாடும் ‘ மனதிற்காக ‘ நேரத்திற்கும் இடையில் உள்ள இந்த நேரம்தான் மனித மனத்தின்
நிஜமான பக்கத்தைக் காட்டும் புத்தகம் .
எதிரே தெரிகின்ற உயர்ந்த கட்டிடம் .
பின்புறம் ஓடும் கழிவுநீரின் கரைகளில் முடங்கியிருக்கும் குடிசைகள் – அதனைச் சுற்றி
உழலும் ஒரு தனி உலகம் .
எதிர்ச் சுவரில் பெரிய போஸ்டர் . உடைகளைப்
பற்றிக் கவலைப் படாத கதாநாயகி . அவளை விடப் பெரியதான A . அந்தப்
படங்களைப் போடுவதற்கென்றே சில தியேட்டர்கள் . அந்தப் போஸ்டர்களை ஒட்டுவதற்காகவே
சில சுவர்கள் .
பக்கத்தில் சிறிதாக பகல் காட்சியில் ‘ 7வது
மனிதன் ‘ . பிழைக்கத் தெரியாத டைரக்டர் .
பெரிய சதுரத்தை நிற்க வைத்து வர்ணங்களை
இறைத்தாற்போல பெட்டிக்கடை . எத்தனை பத்திரிகைகள் ! இலக்கிய ஆர்வம் வளர்கிறது என்ற
பெருமிதத்தைக் கொல்வதற்காகவே அவற்றின் பின்னால் கயிற்றில் தொங்கும் சில
பத்திரிகைகள் . அவற்றின் அட்டையில் போஸ்டர் கதாநாயகியின் சிறு பதிப்புகள் .
பெண்மைக்கு அவை அளிக்கும் விளக்கம் மனதைச் சுடுகின்றது .
திருப்தி அளிக்கும் சிகரெட்டின் பெரிய
விளம்பரப் பலகை . உடல் நலத்திற்கு கெடுதி விளைவது பற்றிய உபயோகமற்ற எச்சரிக்கை
அதன் மூலையில் .
தினம் தினம் காணும் அசைவில்லாத காட்சிகள் .
அவற்றைவிடச் சுவையானவை அவற்றின் பின்னணியில் உலவும் மனிதர்கள் .
பஸ் ஷெல்டரின் மூலையில் இருக்கும்
கம்பத்தில் சாய்ந்து நிற்கும் பச்சைப் புடவை . இளம்பெண் .கல்லூரிப் பெண் . அருகில்
நின்று கொண்டு வலது கை அவள் தோளில் உரச கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும்
வாலிபன் . அவர்களுக்கிடையே மெல்லிய குரலில் நடை பெற்றுக் கொண்டிருக்கும்
முடிவில்லாத உரையாடல் . இடை இடையே பிறக்கும் அடங்கிய சிரிப்பு .
அடிக்கடி அவர்களைத் திரும்பிப் பார்த்தவாறே
தனக்குள் எதோ பேசிக் கொள்ளும் வயதானவர் . கையில் குடை , மாத ஜோதிடம் . ரிட்டையர்ட்
லைஃபைக் காட்டும் முகம் . அவரிடம் ஏற்படும் உணர்ச்சிகளின் பரிமாணம் எனக்குப்
புரியவில்லை .
தலைமுறை வித்தியாசம் உருவாக்கிய வெறுப்பாக
இருக்கலாம் . அவள் வயதில் தனக்கிருக்கும் மகள் இதே நேரம் இதே போல எவனுடனாவது
நின்று கொண்டிருப்பாளோ என்ற பயமாக இருக்கலாம் .
பார்வையைத் திருப்புகின்றேன் .
வாரப்படாத தலைமுடி , ஷேவ் பண்ணாத தாடி ,
மீசை , டெனிம் , அலட்சியமாக ஜீன்ஸூள் செருகப் பட்டிருக்கும் சட்டை , கண்களில்
ஒளியில்லாத விரக்தி , கையில் ‘ நீட்ஷேயின் கடிதங்கள் ‘ . தன் மீது மோதி திரும்பும்
பார்வைகளின் வெறுப்பைக் கண்டு கொள்ளாமல் இடைவிடாமல் புகையும் சிகரெட்டோடு , உடம்பை
தளர்த்தி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இவனை கல்லூரிக்குப் போய்க்
கொண்டிருந்த நாளிலிருந்தே இந்த பஸ் ஸ்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
அப்போதெல்லாம் ‘ ரேமன்ஸ் ‘ விளம்பரத்தில்
இருந்து கிளம்பி வருவது போல இருப்பான் . கவலைப் படுவது எப்படி என்று ஒரு
ஸிம்போஸியமே நடத்தினால் கூட அவனுடைய மகிழ்ச்சி குறையாது என்பதைப் போல அவ்வளவு
கலகலப்பாக இருப்பான் .
அவனுடைய மாற்றத்தை விடாமல் கவனித்துக்
கொண்டுவரும் எனக்கு அவன் மனதின் பிரளயம் நன்றாகப் புரிகின்றது .
” என்ன மச்சி ! நேத்து இண்டர்வியூவிற்குப் போனியா ? “ இந்தக் கேள்வி
அவனிடம் கேட்கப்படுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .
“ எஸ் “
அமைதியான பதில் . இதுவும் வழக்கமானதுதான் .
“ இப்படியேவா
போனே ? “
பதிலாக வரும்
அவன் வார்த்தைகள் சுற்றி நிற்பவர்களைப் பாதிக்கின்றது . தங்களது சமூக நியதிகளை
அவன் தாண்டி ஓடுவதைப் போல அவனைப் பார்க்கிறார்கள் .அப்படி ஓடத்தான்
விரும்புகின்றேன் என்பதைப் போல அவன் அதே அலட்சியத்துடன் புகையை உள்ளே இழுத்து
வெளியே விடுகின்றான் .
நான் பார்வையைத்
திருப்புகிறேன் .
கடந்த காலத்தை
மறைக்க முயலும் மலிவான அலங்காரங்களோடு , உடம்பின் வளைவுகளாலும் செயற்கை
சிரிப்பாலும் தனது தொழிலுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் பெண் . அவளைப்
பொறுத்த வரையில் இரவு – பகல் என்பதெல்லாம் அர்த்தமில்லாத வார்த்தைகள். வாழ்வில்
வயிற்றின் பங்கை நன்கு உணர்ந்தவள் .
சில சமயங்களில்
அவள் கண்களில் தெரிவதைப் படிக்க முயல்வதுண்டு . தெரிவதெல்லாம் அவற்றில்
பளிச்சிடும் அழைப்புதான் .
நான் பார்வையைத்
திருப்புகிறேன் .
“ ஹலோ , என்னது
இது ? மிஸஸ் துர்க்காராம் பஸ்ஸிற்காக நிற்பது ஆச்சரியமா இருக்கே ! வண்டி என்னாச்சு
? “
நான் மிஸ்ஸ்
துர்க்காராமைப் பார்க்கிறேன் . வயதின் மேல் ஏற்பட்ட பயம் அவள் அலங்காரத்தில்
தெரிகிறது . பஸ்ஸின் மீது ஏற்பட்ட கோபத்தில் பல்லவனைத் திட்டுவது புரிகின்றது .
நான் பார்வையைத்
திருப்புகிறேன் .
ஒரு மாற்றம் என்
மனதை நெருடுகின்றது .
அந்த பஸ்
ஷெல்டரின் மூலையில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பூட் பாலிஷ் முருகன் அந்த
இடத்தில் இல்லை . பதிமூன்று வயதுதான் இருக்கும் . தன் உழைப்பால் வாழ்கிறோம் என்ர
பெருமிதத்தில் வறுமையை மறைக்க முயலும் முகம் . நான் அவனது வாடிக்கைகளில் ஒருவன் .
இன்று அவனை
வழக்கமான இடத்தில் காணாதது ஏதோ போல் இருக்கின்றது .என்னவாயிற்று அவனுக்கு ?
மனதினுள் ஒரு
நெருடல் .
நான் தினம்
தினம் காணும் மனித சித்திரங்களில் அவன் சற்று வித்தியாசமானவன் . அழகற்ற கான்வஸில்
வரையப்பட்ட அழகான ஓவியம் . சத்தியசோதனையைப் படிக்காமலே வாழ்க்கையை நேர் கோடு
ஆக்கிக் கொண்டிருப்பவன் .
“ குட் ஈவினிங்
ஸார் ! “
திரும்புகிறேன்
. இடது கையில் கூடை . வலது கையில் ஒரு கடலைப் பொட்டலம் . ராமு – ஒவ்வொரு மாலையும்
நான் சந்திக்கும் இன்னொரு நேர்கோடு . சின்ன வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடலைக்
கூடையோடு நகரத்தின் மூலைமூலையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை நம்பி ஒரு
குடும்பம் . சின்ன வயதில் எத்தனை பொறுப்புகள் .
அவன்
நீட்டுகின்ற கடலையை வாங்கிக் கொள்கிறேன் .
“ முருகன் எங்கே
? “
“ காலைல போலீஸ்
புடிச்சிட்டுப் போயிட்டாங்க ஸார் . “
“ நிஜமாவா ? “
என் மனதின் நெருடல் விரிகின்றது .
“ ஆமா ஸார் . ஒரு வாரமா வருமானமே இல்லைன்னு சொல்லி
அழுதான் . பிக்பாக்கெட் அடிக்கப் போறேன்னான் ... எவ்வளவோ சொல்லியும் கேட்கல . “
ராமு டெனிம்
ஜீன்ஸிற்கு கடலையோடு புன்னகையையும் சேர்த்துக் கொடுக்கிறான் . இன்னொரு கஸ்டமர் .
“ தாங்க்ஸ் ராமு
! “ டெனிம் ஜீன்ஸ் காசோடு நன்றியையும் அளிக்கிறான் .
ராமுவின் பார்வை
மிஸஸ் துர்க்காராம் மீது பதிகின்றது . நகர்கிறான் .
“ கடலை
சாப்பிடுங்கம்மா . “
“ நீ விற்கிற
கடலையையா ? இப்படி பிளாட்பாரத்தில் விற்பதை எல்லாம் வாங்கித் தின்னா ஊர்ல உள்ள
வியாதியெல்லாம் வரும் . கொஞ்சங்கூட சுத்தமில்லாதவங்க . “
ராமு நகர்கிறான்
. இளம் கால்களில் வேகம் .
அவனை
வெறுப்பாகப் பார்த்துவிட்டு மிஸஸ் துர்க்காராம் காலியாக வரும் ஆட்டோவை கை காட்டி
நிறுத்துகிறாள் .
மாற்றத்திற்காக
பஸ் பயணம் செய்ய வந்து , பொறுமை இழந்து போய் விட்ட நிலையில் அவசரமாக ஆட்டோவை
நோக்கி விரைகின்றாள். ஆட்டோவில் ஏறப் போகும் நேரத்தில் அவளை நோக்கி இரண்டு மெல்லிய
கைகள் நீளுகின்றன . வறுமை உடம்பெங்கும் தெரிய நிற்கும் இந்நாட்டு செல்வம் ஒன்று .
சகோதர இந்தியன் !
சுண்டி விடப்
பட்ட நாணயம் ஒன்று உருண்டோடுகிறது . முழு நாலணா . மிஸஸ் துர்க்காராமின் அலட்சியம்
நாணயத்தின் ஒலியில் தெரிகின்றது . குனிந்து பொறுக்கும் விரைவில் அந்தச் சிறுவனின்
இல்லாமை தெரிகின்றது .
அந்த நாணயம்
பொறுக்கப் படுவதற்கு முன்பே மிஸஸ் துர்க்காராமை நோக்கி நீளும் மற்றொரு கை .
மீண்டும் ஒரு நாணயத்தின் உருளல் . ஆட்டோ புறப்படுகின்றது . திரும்பி சாலையின் வாகன
வெள்ளத்தில் கலந்து மறைகின்றது .
என் மனதில்
நெருடல் அதிகமாகின்றது . சட்டத்தின் பிடியில் முருகன் தெரிகின்றான் . தூரத்தில்
நேர்கோடாகச் சென்று கொண்டிருக்கிறான் ராமு.
இந்த நேர்கோடும் உருவம் மாறிவிடலாம் , இல்லை மாற்றப்பட்டு விடலாம்.
பிறரின்
இரக்கத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் வரிசையைப் பார்க்கிறேன் . மிஸஸ்
துர்க்காராமிடம் நாலணா பெற்ற சகோதர இந்தியர்கள் , வலது கையில் பாதி இல்லாத ஒருவன்
, கடந்த காலத்தின் சுவடுகள் முகத்தில் புண்களாக மாறிய பெண் , எதிரில் விழும்
நாணயங்களையும் பக்கத்தில் வரும் மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடிகின்ற ஒரு
குருடன் . வரிசை நீள்கின்றது . பின்னால் சுவரில் ஏதோ ஒரு ஆண்டின் இலட்சிய வரிகள்
நிறம் மாறித் தெரிகின்றது . ’இவர்களுக்குத்
தேவை ஊக்கம் , இரக்கம் அல்ல .’
முருகனும் அந்தப் பெண்ணும் இவர்களிடம்
இருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறார்கள் . அவர்கள் உரு மாறியவர்கள்தான் . ஆனால்
சமூகத்தின் இரக்கத்தை நம்பி வாழாமல் தங்கள் மன வலிமையால் வாழத் துணிந்துவிட்ட சுயமரியாதைக்காரர்களாகத்
தெரிகிறார்கள் . எங்கோ படித்த வரிகள் நினைவில் மோதுகின்றன . சமுதாயம் குற்றங்களை
உருவாக்குகிறது . குற்றவாளிகள் அவற்றை செய்து முடிக்கிறார்கள் .
உண்மைதான் . இவர்கள் உருவாகவில்லை .
உருவாக்கப் படுகிறார்கள் .
“ ஏ சமுதாயமே ! உன்னிடம் இருந்து
உருண்டோடும் நாணயங்கள் உண்மை உழைப்பிற்கு கூலியாக மாறட்டும் . சோம்பேறிக்
கூட்டத்தை உருவாக்கும் போலி கௌரவமாக இருக்க வேண்டாம் . “
மனதின் குரல் வலியை ஏற்படுத்துகிறது .
“ உன் வக்கிர எண்ணங்களால் நேர்கோடுகளை
உருமாற்றி சிதைத்து விடாதே . அவர்களும் மனிதர்கள்தான் . சத்திய சோதனையை
வாழ்க்கையாக்கிக் கொள்ள அவர்கள் மகாத்மாக்கள் இல்லை . “
டெனிம் ஜீன்ஸ் கையில் சிகரெட்டோடு அப்படியே
நின்று கொண்டிருக்கிறான் . மனதின் குமுறல் சிகரெட் புகையாக வெளியேற வெறித்த
பார்வையோடு நின்று கொண்டிருக்கிறான் .
அன்றைய வருமானத்தை அளிக்கப் போகும் எவனோ
ஒருவனுடன் அந்தப் பெண் பக்கத்துச் சந்தில் மறைகிறாள் . நான் வந்து நிற்கும்
பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .
----------- ------------ ------------
-------------
“ வட்டங்கள் – சதுரங்கள் – முக்கோணங்கள் “
என்ற தலைப்பில் நடத்தப் பட்ட சிறுகதைப் போட்டியில் பிரசுரத்திற்கு தேர்வாகி 20. 05
.1983 தேதியிட்ட தினமணி கதிர் வார இதழில் வெளிவந்த எனது சிறுகதை .
------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக