வேதாளம் சொன்ன தேர்தல் கதை .
” சுப்ரா “ ஓவியம் - அரஸ்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன்
மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து
கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து , “ மன்னனே ! நீ என்ன வேலை செய்து வெற்றி அடையப்
போகிறாய் என்பது எனக்குத் தெரியாது . ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத் தாம்
அடைந்ததைக்கூட எளிதில் விட்டு விடுகிறார்கள் . இதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் . கவனமாகக் கேள் “ என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது .
தமிழ்நாடு என்ற தேசத்தில் பலவிதமான தேர்தல்கள்
நடைபெறுவது வழக்கம் . பாராளுமன்றம் , சட்டசபை , மேல்சபை , அவை தவிர அவ்வப்போது இடைத் தேர்தல்கள்
என்று ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கும் .
ஆயினும் திடீரென்று எதிர்பாராத ஒரு தேர்தல்
வந்தது . பஞ்சாயத்துத் தேர்தல் என்று பெயர் . பாராளுமன்றத்திற்கும் , சட்டமன்றத்திற்கும் போகச் சந்தர்ப்பம்
கிடைக்காத அரசியல்வாதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட தேர்தல் .
வெகு காலமாக நடைபெறாமலே இருந்து திடீரென்று
பஞ்சாயத்துத் தேர்தல் வந்ததும் தமிழ்நாடு திருவிழாக் கோலம் பூண்டது . தேர்தல் காலச் சுறுசுறுப்பில் கலகலப்பானது . பலவிதக் கொடிகள் பறக்கவிடப் பட்டன .எல்லாச் சுவர்களும் வெள்ளை
அடிக்கப்பட்டுத் தேர்தல் கோஷங்கள் எழுதப்பட்டன . சாலைகளில் வாகனங்கள் கொடிகளோடு
விரைந்தன . ஒலி பெருக்கிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்
கொண்டன .
வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள்
வெளியாக ஆரம்பித்தன . இடம் நிச்சயமானவர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தார்கள் . மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்க
ஆரம்பித்தார்கள் . மற்றவர்கள் தங்கள் பெயர்
வெளியாவதற்காகக் காத்திருந்தார்கள் .
தேர்தல் சமயங்களில் மட்டுமே உருவாகும்
கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீட்டின் காரணமாக வேட்பாளர்
பட்டியல் வெளியாவது தாமதமாயிற்று . அதன் காரணமாக நிறையப் பேரின் இரத்த அழுத்தமும்
அதிகமாயிற்று .
ஆனால் அந்த பரபரப்பினால் எந்தவிதத்திலும்
பாதிக்கப் படாமல் இருந்தார் ராமசாமி . எக்காளப்பட்டி யூனியன் தலைவர் பதவிக்குத் தன்
கட்சி வேறு யாரையும் நிறுத்தாது என்று அவருக்குத் தெரியும் . ராமசாமி அந்த வட்டாரத்தில் மிகவும்
பிரபலமான ஆளுங் கட்சிப் பிரமுகர் . வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு , தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த
ஆரம்பித்தார் .
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒவ்வொரு கட்சியும்
மாற்று வேட்பாளராக ஒருவரை நிறுத்தும் . ராமசாமிக்கு மாற்று கூடக் கிடையாது. அந்த அளவிற்கு நிச்சயமாக்கப்பட்ட இடம்
அவருடையது .
பிரதான எதிர்க்கட்சி அவரை எதிர்த்து அறிவுத்
தம்பியை நிறுத்தியது. அறிவுத் தம்பி எம். ஏ. முடித்த இளைஞர் . கட்சியில் தீவிரப் பற்று உடையவர் . அவருக்கு மாற்றாக இன்னொருவர் .
அப்புறம் இன்னொரு தேசியக் கட்சியும் ஒருவரை
நிறுத்தியது . அவருக்கும் ஒரு மாற்று .
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளும்
முடிந்தது . எக்காளப்பட்டியில் மும்முனைப் போட்டி
உறுதியாயிற்று . இரண்டு மாற்று வேட்பாளர்களும் வழக்கம்
போல் விலகிக் கொள்வதாகத் தீர்மானமாயிற்று.
ராமசாமிக்கு தமிழரசி என்று ஒரு மகள் . அறிவுத் தம்பியோடு ஒன்றாகப் படித்தவள் . படிக்கும்போதே இருவரும் காதலிக்கத்
தொடங்கினார்கள் . படித்து முடித்ததும் அறிவுத் தம்பி அரசியலில்
இறங்கியதில் தமிழரசிக்கு சந்தோஷம் . தந்தை அரசியல்வாதியாதலால் , ஓர் அரசியல்வாதியையே கணவனாக அடைய
வேண்டும் என்று விரும்பினாள் . ராமசாமிக்கும் அவர்கள் காதல் பற்றி ஓரளவிற்கு
தெரியும்.
தன் தந்தையை எதிர்த்து அறிவுத் தம்பி தேர்தலில்
நிற்பது தெரிந்ததும் தமிழரசி வருத்தப்படத்தான் செய்தாள் . ராமசாமி வெற்றி பெற்றுவிடுவார் எனத்
தெரியும் . அறிவுத் தம்பியின் அரசியல் வாழ்வில்
ஓர் அனுபவமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தாள் .
ராமசாமியும் கவலையில்லாமல்தான் இருந்தார் . ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க
இலேசாகக் கவலைப்பட ஆரம்பித்தார் .அறிவுத் தம்பி இளைஞன் . எதிர்க் கட்சி மட்டுமில்லாமல் மற்ற
கட்சி இளைஞர்களும் அவனை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் . இளைஞர் ஓட்டுகளும் , நடுநிலை ஓட்டுகளும் அறிவுத்
தம்பிக்குப் போய் விட்டால் தாம் தோற்று விடுவோமோ என்று அஞ்சினார்.
அந்த்த் தேர்தலின் முக்கிய அம்சம் , ஐந்து பேரில் அறிவுத் தம்பி தவிர மற்ற
நால்வரும் ஒரே ஜாதி . தேசியக் கட்சி வேட்பாளர் ஜாதி ஓட்டுகளைப் பிரித்துவிட்டால் தமக்கு
ஓட்டு குறையலாம் என்ற பயம் வேறு .
எப்படியாவது அறிவுத் தம்பியை விலக்கி விட்டால்
நல்லது என கணக்குப் போட்டார் . தமிழரசியைத் தூது அனுப்பினார் . அறிவுத் தம்பி விலகாவிட்டால் அவளை
மறக்க வேண்டியதுதான் என்றார் .
தமிழரசி நேராக அறிவுத் தம்பியிடம் போனாள் . தந்தையின் மிரட்டலைச் சொன்னாள் . ஆனால் அறிவுத் தம்பி மறுத்துவிட்டான் .
தமிழரசி வெகு நேரம் பேசிப் பார்த்தாள் . அறிவுத் தம்பி ஆளுங் கட்சியின் மோசமான
ஆட்சியைப் பற்றி தேர்தல் பிரச்சாரப் பாணியில் பேச ஆரம்பித்ததும் மனமொடிந்து
விட்டாள் . ராமசாமி தேர்தலில் இருந்து
விலகாவிட்டால் தன்னை மறந்துவிடும்படி பதில் மிரட்டலை வெளியிட்டான் அறிவுத் தம்பி .
தமிழரசி தன் தந்தையிடம் எல்லாவற்றையும்
சொன்னாள் . ராமசாமி விலக முடியாது என்று
கூறிவிட்டார் . வேற்று ஜாதிக்காரனோடு என்ன உறவு என்று
திட்டினார் . தேர்தலில் தோற்றதும் அவன் திமிர்
அடங்கிவிடும் என மகளைச் சமாதானப்படுத்தினார் .
தமிழரசி அறிவுத் தம்பியைச் சந்தித்துக்
காதலைவிட தந்தை மேல் உள்ள பாசமே பெரிது என்று சொல்லிவிட்டாள் .
இந்தச் சம்பவங்கள் எல்லாம் எக்காளப்பட்டி
மக்களுக்குத் தெரியாது . வேட்புமனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளும் வந்து சேர்ந்தது . அன்று மாலை கிடைத்த செய்தி
எக்காளப்பட்டி முழுவதுமே பெரும் வியப்பை உண்டாக்கிவிட்டது .
ராமசாமி , அறிவுத் தம்பி இருவருமே தேர்தலில்
இருந்து விலகிவிட்டிருந்தார்கள் . தேசியக் கட்சியின் மாற்று வேட்பாளர் ஏற்கனவே
விலகிவிட்டதால் கடைசியில் எதிர்க் கட்சியின் மாற்று வேட்பாளராக
இருந்தவருக்கும் தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும்தான் போட்டி நடந்தது .
வேதாளம் இக்கதையைக் கூறி , ”
மன்னனே ! தன் மகளின் காதலுக்காகப்
போட்டியில் இருந்து விலகிய ராமசாமி , காதலிக்காக விலகிக் கொண்ட அறிவுத் தம்பி ,
தந்தை மீதுள்ள பாசத்தால் காதலைத் தியாகம் செய்த தமிழரசி . இவர்களில் யாருடைய
தியாகம் உயர்ந்தது ? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால்
உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும் “ என்றது .
விக்கிரமன் அடக்க முடியாமல் சிரிக்க
ஆரம்பித்தான் .
“ தியாகமாவது கத்திரிக்காயாவது ? மூவரின்
செயலுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு . ஆளும் கட்சியின் தலைவர்கள் கடைசியில் சில
நிர்ப்பந்தங்களால் தேசியக் கட்சியோடு கூட்டு வைக்க முடிவு செய்து விட்டார்கள் .
சில தொகுதிகளை தேசியக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை .
எக்காளப்பட்டியும் அதில் ஒன்று .
கூடிய சீக்கிரமே ராமசாமியை எம்.எல்.சி. ஆக்கி ,
முடிந்தால் மந்திரி பதவியும் தருவது என்ற செய்தியோடு தலைவர் தூது அனுப்பினார் .
ராமசாமியும் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டு , மறு பேச்சு இல்லாமல் விலகிக்
கொண்டுவிட்டார் .
எதிர்க் கட்சியின் தலைமையிடத்திற்குக் கடைசி
நேரத்தில்தான் முக்கியமான செய்தி ஒன்று கிடைத்தது . அறிவுத் தம்பியின் ஜாதி அந்தத்
தொகுதியில் மிகக் குறைவு . மாற்று வேட்பாளரால்தான் ஜாதி ஓட்டுகளைப் பெற முடியும் .
கேவலம் , ஜாதியைக் காரணமாக வைத்துத் தங்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிடக்
கூடாதே என்று நினைத்து அறிவுத் தம்பியை விலகிக் கொள்ளும்படி செய்தி வந்தது .
இளமைத் துடிப்பில் அறிவுத் தம்பி மறுத்தான் . தொடர்ந்து சற்றே மோசமான மிரட்டல்
வந்தது . அறிவுத் தம்பி புத்திசாலி . கை , கால் சேதமடைவதை விரும்பாமல் விலகிக்
கொண்டான் .
ஆளுங்கட்சியை விட்டுவிட்டு பிடிவாதமாக எதிர்க்
கட்சி மீது பற்று வைத்திருக்கும் அறிவுத் தம்பி போன்றவர்களால் அரசியலில் காலந்தள்ள
முடியாது என்று தெரிந்த தமிழரசி தன் மனதை மாற்றிக் கொண்டாள் . பேசாமல் தன்
தந்தையின் கட்சியில் உள்ள ஏதாவது ஓர் இளைஞனையே திருமணம் பண்ணிக் கொண்டால்
வருங்காலம் வளமாக இருக்கும் என்று நினைத்துத்தான் அறிவுத் தம்பியின் காதலை
உதறிவிட்டாள் .
“ மொத்தத்தில் மூவருக்குமே தியாகம்
பற்றியெல்லாம் எதுவும் தெரியாது . உண்மையில் தியாகம் பண்ணுபவர்கள் எக்காளப்பட்டி
மக்கள்தான் . இவர்களையெல்லாம் நம்பி நாட்டையும் , எதிர்காலத்தையும்
ஒப்படைக்கிறார்களே , அதனால் “ என்றான் விக்கிரமன் .
விக்கிரமனின் பதிலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டது
வேதாளம் . வழக்கம் போல விக்கிரமனின் மெளனம் கலைந்ததும் அவன் சுமந்து வந்த உடலோடு
உயரக் கிளம்பி மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது வேதாளம் !
----------- ---------------- -------------
---------------
கல்கி 09.03.1986.


அரசியல் கணக்கு எல்லா காலத்திலும் அதே தான் !
பதிலளிநீக்கு