ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இந்தத் தடவையாவது ... [ முதல் ஒரு பக்கக் கதை ]

 

இந்தத் தடவையாவது ...    [ சுப்ரா ]



“ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல . பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் .

நடத்துனர் அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ஓட விட்டு நகர்த்தினார் .

அந்த இளைஞன் ஒரு பெட்டியைத் தூக்கியவாறு திருவள்ளுவரை நோக்கி ஓடி வந்தான் . பெட்டி கனமானதுதான் .

பஸ்ஸில் ஏறியவன் மருதுவின் பெட்டிக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் பெட்டியை வைத்தான் . மருதுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மருதுவைப் பார்த்துப் புன்னகைத்தான் .

மருதுவின் பார்வை அவன் பெட்டியின் மீது பாய்ந்தது . இரண்டு பெட்டிகளும் ஒரே மாடல் . ஒரே கலர் . நடுவில் கூடுதல் பூட்டு வைத்த மாடல் . இரண்டிலும் ஒரே மாதிரி பளபளா .

மருது தீர்மானித்து விட்டான் . இந்த தடவை எப்படியாவது பெட்டியை மாற்றிவிட வேண்டும் .



நடத்துனர் எல்லா டிக்கெட்டுகளையும் பார்த்துவிட்டு விளக்கை அணைத்ததுமே பக்கத்து ஸீட் வாலிபன் சாய்ந்து தூங்கி விட்டான் .

மருதுவுக்குத் தூக்கம் வரவில்லை . சிந்தனை முழுவதும் பெட்டியை மாற்றுவதிலேயே இருந்தது .

பெட்டியை மாற்றும் சிந்தனைகளில் மூழ்கியவாறே தூங்கி விட்டான் மருது .

தூக்கம் கலைந்த போது திருவள்ளுவர் நின்றிருந்தார் . எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள் . பக்கத்து ஸீட் வாலிபன் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தான் .

மருது தன் பெட்டியை எடுத்துக் கொண்டான் . அவன் திருமணத்திற்கு சென்னை நண்பர்கள் பரிசாகக் கொடுத்திருந்த அந்த பெட்டியில் நடுப் பூட்டு ஆரம்பத்தில் இருந்தே சரியாக வேலை செய்யவில்லை . அதன் பின் நாலைந்து தடவை சென்னை வந்தும் நேரம் கிடைக்காமல் போய் விட்டது . இந்தத் தடவை காலையிலேயே வந்த வேலையை முடித்து விட்டு மத்தியானம் எப்படியும் அந்த கடைக்குப் போய் கியாரண்டி கார்டையும் , பில்லையும் காண்பித்து வேறு பெட்டி மாற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு மருது தன் பெட்டியோடு லாட்ஜ் நோக்கி நடந்தான் .



-------------- --------------------- ---------------------

[ 02 . 09 . 1993 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்த எனது ஒரு பக்கக் கதை . அச்சில் பிரசுரமான எனது முதல் ஒரு பக்கக் கதையும் இதுதான் . ]   

சனி, 29 அக்டோபர், 2022

” நகுலன் ” எழுத்தும் வாழ்வும் – ஒரு சிறு அறிமுகம் .

 

நகுலன்  எழுத்தும் வாழ்வும் ஒரு சிறு அறிமுகம் .


டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் . ஆனாலும் வாழ்ந்து மறைந்தது திருவனந்தபுரத்தில் . மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாக பணி புரிந்தாலும் தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள் , கட்டுரைகள் எனப் பன்முகப் படைப்புகளைப் படைத்தவர் . இயற்பெயரில் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார் . அவரது படைப்புகள் பெரும்பாலும் மனம் சார்ந்தவைகளாகவும் , மனிதனின் இருப்பு சார்ந்துமே அமைந்தவைகளாகவும் இருந்து விட்டதால் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப் படாமல் போய்விட்டது . எனினும் அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது .

யாத்திரை , நிழல்கள் , ரோகிகள் , நினைவுப்பாதை , நாய்கள் , நவீனன் டயரி , சில அத்தியாயங்கள் , இவர்கள் , வாக்குமூலம் , அந்த மஞ்சள் வெள்ளை நிறப் பூனை என்று பத்து நாவல்கள் , 31 சிறுகதைகள் , நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் தவிர எழுத்து , இலக்கியம் சார்ந்து நிறைய கட்டுரைகள் இவைதாம் நகுலன் தமிழ் இலக்கியத்திற்கு தந்த கொடை . மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார் . ஆங்கிலத்திலும் சில படைப்புகளை அளித்துள்ளார் .



திருமணம் செய்து கொள்ளாமல் இலக்கியமே வாழ்க்கையாக , வாழ்க்கையே இலக்கியமாக வாழ்ந்தவர் என்று பொதுவான ஒரு கருத்து உள்ளது . அந்த வாழ்வை அவர் விரும்பி மேற்கொண்டாரா அல்லது அப்படி அமைந்து விட்டதால் அப்படி வாழ்ந்தாரா என்பதற்கான பதில்களை அவரது எழுத்துகளை நுட்பமாக வாசித்தால் கூட புரிந்து கொள்ள முடியாது என்றுதான் தோன்றுகிறது . அவரது எழுத்துகள் சராசரி எழுத்துகள் அல்ல ; அவை உயிர்த் துடிப்போடு உள்ளவை என்பதை மட்டும் சந்தேகமில்லாமல் சொல்லலாம் .

நான் எதை எழுதினாலும் , எழுதுவதனைத்தும் என் மூலமாக வந்து  , ‘ நானா கத்தானே விரிகிறது ? “ என்று சொல்லும் நகுலன் தமிழில் சுயசரிதைப் புனைகதை வகைமைக்கு முன்னோடியாக அமைந்தவர் என்றும் சொல்லலாம் . மொழிக்குப் பிடிகொடுக்காத , மானுட வாழ்நிலையின் புதிர்வெளிப் பாதையைத் தம் படைப்புகளில் தெளிவு படுத்தியதால் , “ எழுத்தாளர்களின் எழுத்தாளர் என இலக்கியப் படைப்புலகச் சூழலில் அறியப் படுகிறார் . அந்த அடைமொழியே அவரது வாசகர் வட்டப் பரப்பைக் குறுக்கி விட்டதோ என்று தோன்றுகிறது .   

ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய அனுபவம் வெறும் கண்ணாடிச் சில் மட்டும்தான் ; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப் பூச்சு பாய்ச்சுகிறது . நான் எழுதத் தேர்ந்தெடுக்கிற அனுபவமானதும் என் மனவார்ப்பையே காட்டுகிறது . இந்த அனுபவத் துணுக்கு , என்னுடைய அடி மனத்திலிருந்து , என் சிருஷ்டிப்  பரப்பிற்கு வெடித்துக் கொண்டு வருகிறது . இதற்கு ஒரு பூரணத்துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு , மனோவிலாசம் , அனுபவம் , மேலும் இவை போன்ற பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின் செழிப்புத்தான் . “ என்ற நகுலனின் வரிகள் அவரது படைப்பை அணுக வாசகனுக்கான ஒரு கடவுச்சொல் என்று சொல்லலாம் .

நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை . அதுமட்டுமல்ல , எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார் . கவிதையில் மட்டுமல்ல , அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார் . அந்த வகையில் தமிழின் தனித்துவமிக்க இலக்கியவாதி அவர் . நகுலனின் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது . “ – இது நகுலன் படைப்புகள் குறித்து கவிஞர் சுகுமாரனின் பார்வை .

ஆசான் நினைவு விருது , இலக்கியச் சிந்தனை அமைப்பு விருது , விளக்கு விருது போன்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும் , சாகித்ய அகாதமி விருது ஏதோ காரணத்தால் அவருக்கு வழங்கப் படாமலே போய் விட்டது . என்றாலும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் அவரது வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாதமி 2017 ல் வெளியிட்டு அவரை கெளரவித்துள்ளது . [ . பூமிச்செல்வம் எழுதிய இந்த நூல் நகுலன் படைப்புகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி நூல் . ]



 1921 ஆகஸ்ட் 21 – ல் பிறந்த நகுலன் 2007 மே 17 அன்று முதுமை மற்றும் நோய் காரணமாக இறந்தார் . அவரது நூற்றாண்டு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது

********************************************************************

[ ” காணிநிலம் “ நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் வெளியானது ]