வெள்ளி, 22 மே, 2020

பூனை .


பூனை  -  சுப்ரா





அன்று பூனை வீடு திரும்பும்போது நள்ளிரவாகியிருந்தது. ஏதோ ஒரு மரத்தடியில் படுத்துக் கிடந்து வந்திருக்க வேண்டும். உதிர்ந்த காய்ந்த பழுப்பு நிற சருகுகள் அதன் தலையெங்கும் ஒட்டிக் கொண்டிருந்தன. . பார்ப்பதற்கு சிங்கத்தின் சிலிர்த்த பிடரி மயிர் போலத் தோன்றியது. சிங்கத்தைப் போலவே என்று சொல்ல முடியாது. அது ஒரு கறுப்புப் பூனை. பூனைகள் புலிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவைதானே . சிங்கத்தோடான தனது ஒப்பீடு சரியில்லை என்று தோன்றியது.
என்னாச்சு உனக்கு? மனிதக் குரங்குக்கு செயற்கை சிகையலங்காரம் செய்தது போல உள்ளது.“ சந்திரன் அந்தப் பூனையை, அவன், என்றுதான் சொல்லுவான். நீ, வா, போஎன்று சக மனிதனோடு உரையாடுவதைப் போலத்தான் இருக்கும்.
அது தலையைச் சிலிர்த்துக் கொண்டது. இலைகள் தரையில் உதிர்ந்தன. சில இலைகள் அதன் முதுகு வழி பயணித்து வால் நுனி வழியே கீழிறங்கின. அந்த விளையாட்டை ரசிப்பது போல அது மீண்டும் மீண்டும் தலையை அசைத்து இலைகளை உதிர்த்தது.
விளையாட்டை நிறுத்தி விட்டு படுக்கப் போஎன்றான் சந்திரன். மெதுவாக நடந்து கட்டிலருகில் போய்ப் படுத்துக் கொண்டது. வழக்கமாக வீட்டிற்கு வெளியே சுற்றுச்சுவர் அருகில் உள்ள  வாதா மரத்தடியில்தான் படுக்கும். எப்போதாவதுதான் வீட்டிற்குள்.
ஆனால் மூன்று மணிக்கு அது அவனை எழுப்பி விட்டது. அவன் பசுக்களைப் பற்றிய ஆழ்ந்த கனவில் இருந்தான். கடற்கரைவரை பரவியிருந்த பச்சைப் புல்வெளியில் ஏராளமான பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடலைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அவைகளை விழுங்குவது போல ஓர் இராட்சத அலை கரை நோக்கி... அந்த நேரத்தில்தான் பூனை அவன் மார்பில் உட்கார்ந்து அவனை உசுப்பி விட்டது. அதன் கண்கள் ஆழ்கடல் பச்சையாகவும், பெளர்ணமி நிலாவைப் போலப் பெரிதாகவும் இருந்தன.
என்ன வேண்டும் உனக்கு?“ தூக்கமும், கனவும் கலைந்த சலிப்பில் கேட்டான் சந்திரன்.
அது குரல் கொடுக்காமல் கண்களை மூடிக் கொண்டது. கடலும், நிலாவும் காணாமல் போயின. அவன் எழுந்து அதை அறைக்கு வெளியே அது வழக்கமாகத் தூங்கும் இடம் வரை துரத்தி விட்டான். தூக்கம் கலைந்த வெறுப்பு. ஆனாலும் சந்திரனால் அதை நேசிக்காமல் இருக்க இயலாது. அது நிற்கும் தோரணை, அதன் கண்கள், அவன் பேசுவதைப் புரிந்து கொண்டதைப் போலக் காட்டும் அதன் முக பாவனைஅவனது தனிமையை அதன் இருப்புதான் போக்கிக் கொண்டிருப்பதாகவே அவனுக்கு ஒரு நினைப்பு.
அப்படித்தான் ஒருநாள் இரவு சாப்பாட்டிற்கு முன் அது தெருவிலிருந்து வீடு திரும்பிய போது தன் பின்புறத்தைக் காட்டியவாறு வீட்டை நோக்கி நகர்ந்து வந்தது. உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்தது அது அதை விட உருவத்தில் பெரிதான ஒரு பறவையை வாயில் கவ்வி கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது. மின்விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பறவையின் பச்சையான கருவட்டக் கண்கள் பளபளத்தன. பறவையின் எடையை இழுக்க முடியாமல் இரண்டு மூன்று அடிகள் நகர்ந்ததும் ஓய்வெடுக்க நின்று நின்று வந்தது. இடையிடையே அதை எளிதாக இழுத்து வர வேறு வழிகளை முயற்சித்தது. அந்த இறந்த பறவையின் கழுத்தை வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு நடக்க முயன்றது. பறவையின் உடல் அங்கும் இங்கும் அசைந்து பூனையை நிலைகுலைய வைத்தது.
ஆனால் அந்த வழி சரிப்பட்டு வரவில்லை. அந்த அழகான, பெரிதான ஆனால் இறந்த ஆண் பறவை பூனையின் முயற்சியை தோற்றுப் போக வைத்து விட்டது. எனவே மீண்டும் முன்போலவே அதை இழுத்துக் கொண்டு பின்நோக்கி நகர்ந்து வந்தது. அந்த நிலையில் பூனையின் தோற்றம் விகாரமாகத் தோன்றியது.
வீட்டின் முன்புறப் படிகளில் ஏறியதும் பூனை அந்த இறந்த பறவையின் உடலை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் வந்தது. சந்திரன்தான் அதை அப்புறப் படுத்தினான். இறந்த பறவை நல்ல கனம். அதை இழுத்து வருவதற்கு பூனை பட்ட சிரமம் அவனுக்குப் புரிந்தது. முட்டாள் பூனை. அவ்வளவு சிரமப்பட்டு அதை ஏன் இழுத்து வந்தது என்று புரியவில்லை.
உண்மையில் அந்தப் பறவை நகரத்திற்குள் பறக்கும்போது ஏதோ ஒரு வீட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தின் இரும்புக் கதவில் மோதி கழுத்தை ஒடித்துக் கொண்டு கிடந்திருக்கிறது. இறந்து கிடந்த அதை இழுத்துக் கொண்டுதான் பூனை வீட்டிற்கு வந்திருக்கின்றது. இது பின்னர்தான் அடுத்த தெருவில் உள்ள நண்பர் மூலம் தெரிய வந்தது.
அது தெரிந்ததும் சந்திரன் பூனையைத் திட்டினான்.நீயே கொன்றது போல நடித்ததிற்கு வெட்கப்பட வேண்டும். போலிப் பெருமைக்கு ஆசைப்படுபவன் நீ.“ பூனை கண்களைச் சிமிட்டியது.
இன்னொரு நாள் காலை சாப்பிட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே வரும்போதுதான் பார்த்தான். படியில் ஒரு செத்த எலி. வயிறு கிழிக்கப்பட்டு அதன் தோலும், இரத்தமும் படிகளெங்கும் சிதறிக் கிடந்தன. அதைத் தவிர பத்துக்கும் மேற்பட்ட பிறக்காத எலிக் குஞ்சுகளின் பிண்டங்கள். அவை அவனது பெருவிரலை விடச் சிறியதாகவே இருந்தன. பார்ப்பதற்கு மனித சதைப் பிண்டங்கள் போலவே இருந்தன. சந்திரன் அதைப் பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
கொடியவனே  நல்லொழுக்கம் குறித்து நீ கேள்விப்பட்டதே இல்லையா?“ சந்திரன் குரலில் கோபம். மேல் படியில் முன்னங்கால்களை மடித்து நெஞ்சுப் பகுதியில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த பூனையின் கண்கள் மஞ்சளாக இருந்தன. இலேசாகத் திறந்து வைத்துக் கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோலக் கிடந்தது - அவன் பேசியதை சட்டையே செய்யாமல்.
நரகத்திற்குதான் போவாய் நாசக்காரனே.“ சந்திரன் உரத்த குரலில் சபித்தான். அந்த எலி சமாச்சாரங்களை அப்புறப்படுத்தி படிகளை பினாயில், டெட்டால்  தெளித்து சுத்தப்படுத்த ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. பொட்டலமாகக் கட்டி அருகில் இருந்த நகராட்சி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு வந்தான். அது ஒன்றுமே நிகழாதது போல அதே இடத்தில் கண்களை மூடிப் படுத்துக் கிடந்தது. அது அதை எப்படிச் செய்திருக்கும் என்று சந்திரனுக்குத் தெரியும். அது இப்படித்தான் எதிர்பாராத நேரங்களில் மாட்டிக் கொள்ளும் சிறு விலங்குகள், பறவைகள் மீது பாய்ந்து அவற்றின் கழுத்தைக் கவ்வி ஒடிப்பதைப் பார்த்திருக்கிறான். அகப்பட்ட ஜீவராசிக்கு உடனடியாக மென்மையான மரணம் சம்பவித்துவிடும். ஆனால் அந்த எலிக்கு நிகழ்ந்திருப்பது கிட்டத்தட்ட குரூரமான இனப்படுகொலை.
கொலைகாரப் பாவி! நான்தான் உனக்கு வேண்டிய உணவைத் தினமும் நேரம் தவறாமல் தருகின்றேனே. அப்புறம் ஏன் இப்படிச் செய்கிறாய் அடிக்கடி?“
ஒருநாள் பெரிய நாய் ஒன்று வீட்டிற்கு முன் வந்து விட்டது. யார் வீட்டு நாயோ. நல்ல தாட்டியான, நீளமான உடல். வலுவான எலும்பு அமைப்பு. சதைப் பாங்கான உடம்போடு பார்க்கவே சற்று பயம் தரும் விதத்தில் இருந்தது. பூனை அந்த நேரம் தூங்கிக் கொண்டிருந்தது. சந்திரனும் தூங்கிக் கொண்டுதான் இருந்தான்.
என்ன நடந்ததென்று தெரியவில்லை. பூனையின் அவல ஓலம் கேட்டு சந்திரன் வெளியே வந்து பார்த்தபோது பூனையின் கழுத்து நாயின் வாயில். தலையை ஆட்டி ஆட்டி பூனையைத் தரையில் தேய்த்து துவைத்து எடுத்துக் கொண்டிருந்தது நாய். ஆனால் கடிக்கவில்லை. ஏதோ விளையாடுவது போலத்தான் இருந்தது. கடைசியில் தலையை வேகமாக ஆட்டி பூனையின் கழுத்தை நாய் விட்டதும் பூனை காற்றில் பறக்கும் குப்பை போல அருகில் இருந்த மரத்தடியில் போய் விழுந்தது. நாய் வெற்றி நடை போட்டு மெதுவாகவும், கர்வத்தோடும் அகன்றது.
சந்திரன் நாயை விரட்டிவிட்டு பூனையருகில் போனான். உடம்பில் இரத்தம் காணப்படா விட்டாலும் உள் அடி பலமாக இருந்திருக்க வேண்டும். பூனை அசைய முடியாமல் துவண்டு கிடந்தது. சந்திரன் அதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் போனான்.
அந்தத் தாக்குதலின் பாதிப்பில் இருந்து பூனை முழுவதுமாக விடுபட நான்கு வாரங்கள் ஆனது. அதுவும் ஒரு மிருக வைத்தியரின் தீவிர சிகிச்சையினால்.
அந்த நான்கு வாரங்களில் சந்திரன் பூனைக்கு நாய்களைப் பற்றி பாடம் எடுத்தான். அவற்றின் குணம் குறித்து, முரட்டுத்தனம் குறித்து, அதன் நீண்ட நகங்கள் குறித்து... ”நாய்களுக்கு பூனைகள் அளவிற்குக் கூர்மையான பார்வை கிடையாது. வண்ணங்களைச் சரியாகப் பகுத்தறிய முடியாது. பொதுவாக நாய்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை குறைபாடு உண்டு. உடம்பில் அதிக முடி உள்ள நாய்கள் நனைந்திருக்கும் போது அவற்றின் மீதிருந்து ஒருவித வாடை வரும்...”
அவன் சொல்லிய விஷயங்கள் பூனைக்குப் புரிந்ததா? ஆனாலும் பூனை வழக்கமான விஷமத்தனங்கள் இல்லாது சோர்ந்து கிடந்த நேரத்தை சந்திரன் அதனுடன் நாய்கள் குறித்து பேசியே கழித்தான்.
நாய்களுக்கு பூனைகள் மீது எப்போதுமே ஒரு விரோதப் பார்வை உண்டுபூனைகளுக்கு எலிகள் மீதும், மீன்கள் மீதும், சிறு பறவைகள்  மீதும் உள்ளது போலவே. பூனைகள் எப்போதுமே கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்குறிப்பாக நாய்கள் அருகில் இருக்கும் சமயங்களில். சுயமரியாதையுள்ள பூனைகள் ஒருபோதும் நாய்களிடம் மாட்டிக் கொள்ளாது. நாய்களுக்கு பூனைகள் மீது உள்ள பொறாமைக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மைதான் காரணம். பூனைகளின் சொரசொரப்பான நாக்குகள் அவற்றிற்கு மிகப் பயனுள்ளவை. பருகவும், உடம்பை சுத்தம் செய்து கொள்ளவும் பயன்படும். ஆனால் நாயின் நீண்ட நாக்குகள் அதித வெப்பமான நேரங்களில் இரைப்பெடுத்தவாறே வெளியே தொங்கிக் கொண்டிருக்க மட்டுமே உதவும் என்பது நாய்களின் எண்ணமாக இருக்கலாம்.”
நாய்கள் பற்றி அவன் கூறிய தகவல்களில் இரண்டாவதாகக் கூறியவற்றை பூனை கவனமாகக் கேட்டுக் கொண்டது போல சந்திரனுக்கு ஒரு பிரமை.
சரி விடு. வாழ்வின் குறிக்கோளாக ஒன்றை வைத்துக் கொள்வாழு வாழவிடு. அது இயலாவிட்டாலும் பரவாயில்லை உன் தலையை பத்திரமாகப் பார்த்துக் கொள்.“ சந்திரன் பேசி முடித்ததும் பூனை விநோதமான குரல் ஒன்றை எழுப்பியது. அது அவனை அலட்சியப் படுத்தும் தொனியில் இருந்தது.
ஜன்னலருகில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே தூங்கிக் கொண்டும் கனவு கண்டு கொண்டும் இருந்தான் சந்திரன். கனவில் கருநீலக் கடலொன்றில் நுரை ததும்பி வீசிய அலைகளில் டால்பின்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. சந்திரனும் கடலில் மிதந்தவாறும், துள்ளியவாறும் அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தான். டால்பின்கள் செய்வதை எல்லாம் அவனும் செய்து கொண்டிருந்தான். வானில் குதிப்பதும், மீண்டும் நீரில் மூழ்குவதுமான கனவு.
ஒருவித தொடு உணர்வை உணர்ந்து கண் விழித்தபோது பூனை அவன் மார்பின் மீது கால்களை முன் நீட்டிப் படுத்திருந்தது. அவற்றின் நகங்கள் அவன் மார்புத் தோலைப் பிறாண்டுவதும், அப்புறம் கால்களைப் பின்னே இழுத்துக் கொள்வதும் மீண்டும் நீண்டு பிறாண்டுவதுமாக இருந்தது. அதன் கண்களில் அவனைக் காயப் படுத்தும் எண்ணம் இல்லை. ஆனால் அது விழித்திருக்கும்போது அவன் தூங்குவதையும், கூடவே கனவுகள் காண்பதையும் அதனால் பொறுத்துக்கொள்ள முடியாதது போல இருந்தது. “பொறாமைக்காரப் பூனையே! உனது மரத்தடியில் படுத்துத் தூங்க வேண்டியதுதானே நீயும். சனியனே! நல்ல தூக்கத்தையும் கனவையும் கெடுத்து விட்டாயே பாவி.“
ஒருவகையில் பார்த்தால் அதன்மீது பரிதாபம்தான் சந்திரனுக்கு. ஓர் இரவு இரண்டு மணி அளவில் ஒரு புயல் உருவானது போல இடி மின்னலுடன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. தூக்கம் கெட்ட சந்திரன் எழுந்து முன்கதவருகில் வந்து திறந்தான் வழக்கமாக  மரத்தடியில் படுத்திருக்கும் பூனை நனைந்துவிடுமே? வழக்கமாக அவன் முன்புற விளைக்கைப் போட்டதுமே அது உள்ளே ஓடி வரும். ஆனால் அன்று இடி மின்னலால் மின்சாரம் இல்லை. கதவைத் திறந்து மெல்லியதாக சீட்டி அடித்தான் சந்திரன். திடீர் மின்னல் ஒன்று உருவாகி சுற்றுப் புறத்தை சில விநாடிகள் வெளிச்சமாக்கியது. பூனையைக் காணவில்லை. மீண்டும் இருட்டு.
மழைச் சப்தத்தைக் கேட்டவாறே படுத்திருந்தான். சற்று நேரத்தில் மின்சாரம் திரும்பியது. மீண்டும் கதவைத் திறந்து வெளி விளக்கைப் போட்டான். பூனை சட்டென்று பாய்ந்து அவனை உரசிக் கொண்டு உள்ளே நுழைந்தது. அதன் உடம்பில் இருந்து சிதறிய தண்ணீர்த் துளிகள் அவன் உடையை நனைத்தன. முதலில் வந்து பார்த்த போதும் வெளியில் எங்காவதுதான் நின்றிருக்க வேண்டும். அப்படியெனில் வழக்கமாக பூனை உள்ளே நுழைவது அவனைப் பார்த்தோ, அல்லது கதவு திறப்பதைப் பார்த்தோ அல்ல, விளக்கு எரிவதுதான் அதை உள்ளே நுழைய வைக்கும் காரணி என்ற எண்ணம் சந்திரனுக்குள் ஓடியது. பாவ்லோவின் நாய் ஞாபகத்திற்கு வந்து போனது.
மனிதனோ மிருகமோ பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்க முடியாது போலத்தான்.
புயலும் மழையும் ஒரு மணி நேரம் நீடித்தது. செய்வதற்கு வேறெதுவும் இல்லாது போகவே பூனை அவனருகில் வந்து அவன் போர்த்தியிருந்த கம்பிளிக்குள் பதுங்கிக் கிடந்தது. படுக்கை நனைந்து விட்டதோடு அழுக்கும் ஆகி விட்டது என்பதை உணர்ந்ததும் சந்திரன் தன்னை மறந்துசனியனே!“ என்று கத்தியதை அது பொருட்படுத்தவே இல்லை. மழை நின்றதும் அது கட்டிலில் இருந்து இறங்கி முன்கதவருகில் போய் நின்றது. சந்திரன் கதவைத் திறந்து விட்டதும் வெளியே ஓடி வழக்கமான மரத்தடியில் அங்கு படர்ந்திருந்த ஈரத்தையும் சகதியையும் பொருட்படுத்தாமல் படுத்து விட்டது.
படுக்கை உறைகளை மாற்றிய பின்னரே சந்திரனால் தூங்க முடிந்தது.
புயல் வந்துபோன சில நாட்கள் கழித்து வந்த ஒரு விடுமுறை நாள் காலை பூனை வழக்கம் போல் வீடு திரும்பவில்லை. இரவு எங்கு சுற்றினாலும் இரவு அதன் மரத்தடி இருப்பிடத்திற்கு வந்து விடும். தூங்கி எழுந்த சந்திரன் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது பூனையை அதன் இடத்தில் இல்லை. குனிந்து பார்த்தபோது கீழ்ப்படியில் குருவியை விடச் சற்று பெரிய பறவையின் உடல் உள் பாகங்களும் , இறகுகளும் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்ததும் சற்று நேரத்திற்கு முன் பூனை அங்கு வந்து போயிருக்கும் என்பது தெரிந்தது. இப்படித்தான் வேட்டை நன்றாக அமையும் நேரங்களில் சில நாட்கள் அது மாலைவரை கூட வீடு திரும்பாது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சந்திரனுக்குத் தோன்றியது. பூனையைத் திட்டியவாறே சிதறிக் கிடந்த பறவையின் மிச்சங்களை ஒரு காகிதப் பையில் பொதிந்து வெளியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, சுற்றுச் சுவர் கதவருகில்  கிடந்த அன்றைய செய்தித் தாளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று தேநீர் தயாரிக்க ஆரம்பித்தான்.
விடுமுறை என்பதால் வழக்கம்போல் பாதிநேரம் தூக்கத்திலேயே கழிந்தது. மதிய உணவிற்குப் பிறகு படுத்தவன் எழும்போது இருட்டியிருந்தது. அவசரமாக கதவைத் திறந்து முன்பக்க விளக்கைப் போட்டான். பூனை வரவில்லை. மரத்தடியிலும் இல்லை. சீட்டி அடித்தான். பதிலே இல்லை. இரவுச் சாப்பாடு முடிந்து வெளியே வந்து பார்த்தபோதும் அதைக் காணவில்லை. சந்திரனுக்கு எதற்கென்று புரியாமலே ஒருவித பதட்டம் உருவாகியது. எங்கு சுற்றினாலும் இரவு திரும்பிவிடும். கவலையோடு அடிக்கடி வெளியே வந்து பார்த்தான். பூனையின் அறிகுறியே காணவில்லை. இரவு வெகுநேரம் கழித்துதான் தூங்கினான்.
மறுநாளும் விடுமுறை நாள்தான். காலையும் அது திரும்பவில்லை என்றதும் கவலையும் பதட்டமும் கூடிப் போனது. மதியம் மளிகைச் சாமான் சில வாங்க வெளியே சென்றபோது அடுத்த தெருவில் இருந்த சாக்கடையில் ஒரு கறுப்புப் பூனையின் உடல் அசையாமல் கிடந்தது. அடப் பாவமே ! சந்திரன் அருகில் சென்று அங்கு கிடந்த கம்பொன்றால் அதன் உடலைப் புரட்டிப் பார்த்தபோது அதன் கழுத்தில் ஒரு சிவப்பு பட்டி இருந்தது. வேறு வீட்டு வளர்ப்புப் பூனை போலும். தாற்காலிகமாக ஒரு நிம்மதி பரவியது.
அன்று முழுவதுமே மனம் எதிலும் ஈடுபாடு காட்டாததால் நாள் முழுவதுமே வீணாகத்தான் கழித்தான். அடிக்கடி கதவைத் திறந்து பூனை வந்து விட்டதா என்று பார்த்தான். மீண்டும் உள்ளே சென்று கழுவாமல் கிடந்த பாத்திரங்களைக் கழுவினான். ஒட்டடை அடித்தான். சிதறிக் கிடந்த பொருட்களை எடுத்து அதனதன் இடத்தில் வைத்தான். அவ்வப்போது ஏதாவது புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு பாதியிலேயே வைத்தான். ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்த்தான்.
அன்று இரவும் பூனை வீடு திரும்பவில்லை.
பூனை காணாமல் போன மூன்றாவது நாள் பொறுக்க முடியாமல் மனைவியை கைபேசியில் அழைத்தான். இரண்டு முறை அழைப்பு போய் நின்று விட்டது. எடுக்கவில்லை. அவளுக்கும் விடுமுறைதான். தூங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். மூன்றாவது அழைப்பில் இணைப்பு கிடைத்தது. அவள் பேசும் முன்பே அவன் படபடத்தான்.
மூன்று நாட்களாக அவனைக் காணவில்லை. எனக்குக் கவலையாக உள்ளது...“ என்றான்.
யாரைக் காணவில்லை?“ அவள் குரலில் தூக்கத்தின் மிச்சம் தொனித்தது.
பூனை... பூனையைத்தான் காணவில்லை. மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லை...“
கூறு கெட்ட பூனை. எங்காவது அலைந்து திரிந்துவிட்டுத் திரும்பிவரும்.
அவன் இதுவரை இப்படி இருந்ததே இல்லை.
அது ஒரு பூனை. பூனைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி தீர்மானிக்க முடியும்?“
உனக்குக் கவலையாக இல்லையா? நீ என்ன நினைக்கிறாய்?“
உண்மையிலேயே உங்கள் பூனை குறித்து நான் ஏதாவது சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?“
நீ உடனே வந்து அதைத் தேட எனக்கு உதவ முடியுமா?“
முடியாது.“
தயவுசெய்து வாயேன். உன் சீட்டி ஒலி கேட்டால் அவன் எங்கிருந்தாலும் வந்து விடுவான்தானே எப்போதும்? நீ அடிக்கும் சீட்டி போல என்னால் அடிக்க இயலாது. எனது சீட்டி அவனுக்குப் பழக்கமானது இல்லை. நீ வந்து சீட்டி அடித்தால் அதைக் கேட்டு அவன் உடனே வந்து விடக்கூடும்...“
அது வருவது நான் போடும் உணவிற்காக. அதற்குத் தெரியும் நான் சீட்டி அடித்தால் உணவு தயார் என்று. மற்றப்படி அதற்கும் எனக்கும் நடுவில் வேறெந்த புரிந்துணர்வோ நட்போ கிடையாது. மேலும் நான் அதை சீட்டி அடித்துக் கூப்பிட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். அது என் சீட்டி ஒலியை மறந்திருக்கும். ஏன், என்னையே கூட மறந்து போயிருக்கலாம் அதற்கு...“
இல்லை. உன்னை அவன் ஞாபகம் வைத்திருப்பான்.“
அதற்கு நீங்கள் இப்போது உணவு கொடுப்பதில்லையா?“
தினமும் நேரம் தவறாமல் கொடுக்கிறேன்.“
அப்படி என்றால் நிச்சயமாக அதற்கு என்னை ஞாபகம் இருக்காது. எதை நினைவில் வைத்திருக்க வேண்டுமோ அவற்றை மட்டுமே பூனைகள் ஞாபகத்தில் வைத்திருக்கும். தேவையில்லாத, பயன்படாத விஷயங்களை அவை தலைக்குள் வைத்துக் கொள்வதில்லை. பூனைகள் மனிதர்கள் இல்லை...“ மறு முனையில் அவள் மெல்லியதாகச் சிரிப்பது கேட்டது.
நீ பொறுமை இழக்கிறாய்...“
ஆமாம். இங்கு எனக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. எனது வாழ்க்கையை நான் நடத்த வேண்டிய அவசியம் உள்ளதே...“
எனது பயமெல்லாம்... அவனுக்கு ஏதேனும் பெரிய காயம் பட்டு நகர முடியாமல் இருக்கலாம். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பெரிய நாய் அவனை மிரட்டி விட்டது. அதன்பின் அவன் போக்கில் நிறைய மாற்றங்கள்....
கவலைப்படாதே. உன் பூனை எப்படியும் வீடு திரும்பிவிடும். பூனைகள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளாக இருக்கின்றனவே.“
நிச்சயமாக இப்போது உன்னால் வரமுடியாதா? சரி, திரும்பி வருவான் என்று நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை...“
இதற்காகத்தான் என்னை அழைத்தீர்களா?“
ஆமாம்.“
அப்படி என்றால் நான் போனை வைத்து விடுகிறேன். பூனை திரும்பியதும் மறக்காமல் தகவல் சொல்லுங்கள்...“
சரி.“
இணைப்பைத் துண்டித்து விட்டாள்.
அன்று இரவு பழைய நண்பன் ஒருவனுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்புவதற்காக கணினி முன் உட்கார்ந்து வெகுநேரம் விழித்துக் கொண்டிருந்தான். நள்ளிரவு தாண்டி ஒரு மணி இருக்கும். கடிகாரக் கணக்கில் பூனை காணாமல் போன நான்காவது நாளின் ஆரம்பம். ஜன்னலுக்கு வெளியே அதன் குரல் கேட்டது.
அவனாகத்தான் இருக்குமா என்ற சந்தேகத்தில் சந்திரன் எழுந்து முன்கதவைத் திறந்து விளக்கைப் போட்டான். பூனை அவனைக் கடந்து உள்ளே வந்தது. அதன் நடையில் வழக்கமான வேகம் இல்லை. களைத்துப் போனது போல இருந்தது. அதன் முடிகள் காய்ந்து போன சகதியால் கொத்துக் கொத்தாகத் திரிந்து போயிருந்தது. ஒரு காதின் பின்புறம் இரத்தம் காய்ந்து போய் கருஞ்சிவப்பாக உறைந்திருந்தது. உடல் முழுவதும் காய்ந்து போன மர இலைகள். மிகச் சோர்வாக இருந்தது.
சந்திரன் குனிந்து அதன் தலையை வருடினான். முகவாயைத் தடவிக் கொடுத்தான். “சனியனே! நீ என்னை பயமுறுத்தி விட்டாய். இந்தக் கிறுக்குத் தனங்களையெல்லாம் விட்டு விட்டு நீ எப்போது ஒழுங்கான நல்ல பூனையாக ஆகப் போகிறாய்?“
பூனை கால்களை மடக்கிப் படுத்து முகத்தை மார்புக்குள் புதைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டது. அவ்வப்போது உடலை இலேசாக அசைத்து உடம்பில் ஒட்டியிருந்த காய்ந்த இலைச் சருகுகளை கீழே உதிர்த்துக் கொண்டிருந்தது. சந்திரன் அதற்கு உணவு கொண்டு வருவதற்காக சமையலறைக்குள் நுழைந்தான்.

****************************************************************************************** 
” இருவாட்சி பொங்கல் சிறப்பு வெளியீடு 2019 “ ல் வெளிவந்த எனது சிறுகதை .
ஓவியம் - ஓவியர் ஜீவா .