” நகுலன் ” எழுத்தும் வாழ்வும் – ஒரு சிறு அறிமுகம் .
டி. கே.
துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் . ஆனாலும் வாழ்ந்து மறைந்தது
திருவனந்தபுரத்தில் . மார் இவானியஸ்
கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாக பணி புரிந்தாலும் தமிழ் மீது உள்ள ஆர்வத்தால்
தமிழில் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டு கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள் , கட்டுரைகள் எனப் பன்முகப்
படைப்புகளைப் படைத்தவர் . இயற்பெயரில் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார் . அவரது படைப்புகள் பெரும்பாலும்
மனம் சார்ந்தவைகளாகவும் , மனிதனின் இருப்பு சார்ந்துமே அமைந்தவைகளாகவும் இருந்து
விட்டதால் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப் படாமல் போய்விட்டது . எனினும் அவருக்கென்று ஒரு வாசகர்
வட்டம் இருக்கத்தான் செய்கிறது .
யாத்திரை , நிழல்கள் , ரோகிகள் , நினைவுப்பாதை , நாய்கள் , நவீனன் டயரி , சில அத்தியாயங்கள் , இவர்கள் , வாக்குமூலம் , அந்த மஞ்சள் வெள்ளை நிறப் பூனை என்று
பத்து நாவல்கள் , 31 சிறுகதைகள் , நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள்
தவிர எழுத்து , இலக்கியம் சார்ந்து நிறைய
கட்டுரைகள் – இவைதாம் நகுலன் தமிழ்
இலக்கியத்திற்கு தந்த கொடை . மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார் . ஆங்கிலத்திலும் சில படைப்புகளை
அளித்துள்ளார் .
திருமணம் செய்து கொள்ளாமல் இலக்கியமே வாழ்க்கையாக , வாழ்க்கையே இலக்கியமாக வாழ்ந்தவர்
என்று பொதுவான ஒரு கருத்து உள்ளது . அந்த வாழ்வை அவர் விரும்பி மேற்கொண்டாரா அல்லது அப்படி
அமைந்து விட்டதால் அப்படி வாழ்ந்தாரா என்பதற்கான பதில்களை அவரது எழுத்துகளை
நுட்பமாக வாசித்தால் கூட புரிந்து கொள்ள முடியாது என்றுதான் தோன்றுகிறது . அவரது எழுத்துகள் சராசரி
எழுத்துகள் அல்ல ; அவை உயிர்த்
துடிப்போடு உள்ளவை என்பதை மட்டும் சந்தேகமில்லாமல் சொல்லலாம் .
“ நான் எதை எழுதினாலும் , எழுதுவதனைத்தும் என் மூலமாக
வந்து , ‘ நானா ‘கத்தானே விரிகிறது ? “ என்று சொல்லும் நகுலன் தமிழில்
சுயசரிதைப் புனைகதை வகைமைக்கு முன்னோடியாக அமைந்தவர் என்றும் சொல்லலாம் . மொழிக்குப் பிடிகொடுக்காத , மானுட வாழ்நிலையின் புதிர்வெளிப்
பாதையைத் தம் படைப்புகளில் தெளிவு படுத்தியதால் , “ எழுத்தாளர்களின் எழுத்தாளர் “ என இலக்கியப் படைப்புலகச் சூழலில்
அறியப் படுகிறார் . அந்த அடைமொழியே
அவரது வாசகர் வட்டப் பரப்பைக் குறுக்கி விட்டதோ என்று தோன்றுகிறது .
“ ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய அனுபவம் வெறும் கண்ணாடிச் சில்
மட்டும்தான் ; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப்
பூச்சு பாய்ச்சுகிறது . நான் எழுதத் தேர்ந்தெடுக்கிற அனுபவமானதும் என் மனவார்ப்பையே
காட்டுகிறது . இந்த அனுபவத் துணுக்கு , என்னுடைய அடி மனத்திலிருந்து , என் சிருஷ்டிப் பரப்பிற்கு வெடித்துக் கொண்டு வருகிறது . இதற்கு ஒரு பூரணத்துவத்தைக்
கொடுப்பது எழுதுபவனின் படிப்பு , மனோவிலாசம் , அனுபவம் , மேலும் இவை போன்ற பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின்
செழிப்புத்தான் . “ என்ற நகுலனின்
வரிகள் அவரது படைப்பை அணுக வாசகனுக்கான ஒரு கடவுச்சொல் என்று சொல்லலாம் .
“ நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத்
தோன்றவில்லை . அதுமட்டுமல்ல , எல்லோரும் தனக்குள்ளிருந்து
வெளியேறிக் கொண்டிருக்கும்போது நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று
கொண்டிருந்தார் . கவிதையில் மட்டுமல்ல
, அவருடைய நாவல்களிலும் இதைத்
தொடர்ந்தார் . அந்த வகையில் தமிழின்
தனித்துவமிக்க இலக்கியவாதி அவர் . நகுலனின் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின்
சுடரை யாராலும் தொட முடியாது . “ – இது நகுலன் படைப்புகள் குறித்து கவிஞர் சுகுமாரனின் பார்வை .
“ ஆசான் “ நினைவு விருது , இலக்கியச் சிந்தனை அமைப்பு விருது , விளக்கு விருது போன்ற விருதுகளைப்
பெற்றிருந்தாலும் , சாகித்ய அகாதமி
விருது ஏதோ காரணத்தால் அவருக்கு வழங்கப் படாமலே போய் விட்டது . என்றாலும் “ இந்திய இலக்கியச் சிற்பிகள் “ வரிசையில் அவரது வாழ்க்கை வரலாற்றை
சாகித்ய அகாதமி 2017 ல் வெளியிட்டு அவரை
கெளரவித்துள்ளது . [ ஆ . பூமிச்செல்வம் எழுதிய இந்த நூல்
நகுலன் படைப்புகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி நூல் . ]
1921 ஆகஸ்ட் 21 – ல் பிறந்த நகுலன் 2007 மே 17 அன்று முதுமை மற்றும் நோய் காரணமாக இறந்தார் . அவரது நூற்றாண்டு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது .
********************************************************************
[ ” காணிநிலம் “ நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் வெளியானது ]



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக