வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தாவி அடியெடுத்துக் குதி ….. 2 [ தொடர்ச்சி ]

 

தாவி அடியெடுத்துக் குதி ….. 2 [ தொடர்ச்சி ]



எங்கே விட்டோம் ? ஆஹ் கைகால்களை உதறிக் கொண்டதில் இருந்து ஆரம்பிப்போம் . Hop Step & Jump சீனியர் பிரிவுகளுக்கான போட்டி ஆரம்பித்தது . ஆறு பேர்கள் மட்டுமே . இதில் இன்னொரு முக்கியமான விஷயம் அந்த ஆறு பேர்களில் நான் மட்டும் வயதுப்படி ஜூனியர் பிரிவைச் சேர்ந்தவன் . அந்தப் போட்டிக்கு மட்டும் ஜூனியர் பிரிவில் வேறு யாருமே பெயர் கொடுக்காததால் நானும் சீனியர் பிரிவிலேயே கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தேன் . ஆக அந்த ஆறு பேர்களில் கம்மி வயதினன் நான்தான் [ விளையாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் பலரும் படிப்பில் கோட்டை விடுவது வழக்கம் என்பதால் ஒரே வகுப்பை பல வருடங்கள் படித்தவர்கள் அதிகம் உண்டு . ஒரே வகுப்பில் ஜூனியர் , சீனியர் , சூப்பர் சீனியர் எல்லாப் பிரிவுகளும் இருப்பதுண்டு . வயது மட்டும் வித்தியாசப்படும் . மாவட்ட , மாநில அளவுப் போட்டிகளில் சில சமயம் பொய் வயது சொல்லி மாட்டிக் கொள்வது சகஜம் . பெற்ற பதக்கங்களைக்கூட பறித்துக் கொள்வார்கள் இப்போதைய ஊக்க மருந்து சோதனைகளைப் போல . ]

ஒவ்வொருவருக்கும் மூன்று வாய்ப்புகள் . முதல் வாய்ப்பில் மூன்று பேர்கள் ஃபவுல் . கடைசியாகக் குதித்த நான் குதித்த தூரம் நான்காவது , ஐந்தாவது தாண்டியவர்களை விட ஐந்தாறு அடிகள் அதிகமாக இருந்துவிட எனக்கே ஓர் அதிர்ச்சிதான் . பயிற்சிகளின்போது அவ்வளவு தூரம் தாண்டியதே இல்லை . [ சரியான தூரம் எவ்வளவு என்று இப்போது சரியாக ஞாபகம் இல்லை . ஆனால் எப்படியும் இருபது அடிகளுக்கு மேல் இருக்கும் ]

இரண்டாவது வாய்ப்பில் யாரும் ஃபவுல் இல்லை . ஆனால் எனது முதல் குதிப்பைவிட அதே ஐந்தாறு அடிகள் கம்மிதான் ஐவருமே . கொஞ்சம் தெனாவட்டாக இரண்டாவது முயற்சிக்கு பாஸ் சொல்லி விட்டேன் . மூன்றாவது முயற்சியிலும் யாரும் எனது தூரத்தைத் தாண்டவில்லை . அந்த முயற்சியையும் பாஸ் செய்திருந்தாலும் நான்தான் முதலிடம் . ஆனால் விதி யாரை விட்டது . தாண்டித்தான் பார்ப்போமே என்று ஓட்டத்தை ஆரம்பித்ததுமே பின்னங்கால் சதை மேலேறிக் கொள்ள வலி பின்னி எடுத்துவிட்டது . நொண்டிக் கொண்டே ஓரமாக உட்கார்ந்து கொண்டேன் . மூன்றாவது முயற்சியில் தாவாமலே முதல் இடம் உறுதியாகி விட்டாலும் கால் வலி தாங்க முடியவில்லை . இப்போது போல உடனடித் தெளிப்பான் எல்லாம் கிடையாது அப்போது . கை நிறைய டர்பண்டைனை வாங்கி அழுத்தித் தேய்த்துக் கொள்வது ஒன்றுதான் வழி . அந்த டர்பண்டைன் வாடை இரண்டு நாட்களுக்கு நம்மை விட்டு அகலாது .

அதற்குள் WHITE அணித் தலைவர் வந்து விட்டார் . அரைமணி நேரத்தில் ஜூனியர் பிரிவுக்கான 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டம் . அதில் மூன்றாவது இடத்தில் நான் ஓட வேண்டும் . ஒவ்வொரு புள்ளியும் அணிகளுக்கான ஒட்டு மொத்த புள்ளிகளுக்கு முக்கியம் என்பதால் அவருக்கு அவர் கவலை . “ வலி பரவாயில்லையா ? ரிலேயில ஓடிடுவேல்ல ? “ . கை கொடுத்து தூக்கிவிட்டு நான் நேராக நின்றதைப் பார்த்த பின்தான் திருப்தியானார் . சற்று தள்ளிப் போய் கிழக்கும் மேற்குமாக நாலைந்து தடவை என்னோடு சேர்ந்து அவரும் ஓடி ஓடிப் பார்த்ததும் பிரச்சினை இல்லை . ஓடிடலாம் . விட்றக்கூடாது . “ என்று கூறிவிட்டு அவர் அவருடைய போட்டிக்காகப் போய்விட்டார் .

அரை மணி நேரம் கழித்து 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டம் என ஒலிபெருக்கி குரல் கொடுக்க நால்வரும் தயாரானோம் . தொடர் ஓட்டத்தில் ஓடுவதற்கு உள்ள முக்கியத்துவம் குச்சியை மாற்றுவதற்கும் உண்டு . கொஞ்சம் ஏமாந்தாலும் காலி .

முதலில் ஆரம்பித்தவன் சரியான ஓட்டக்காரன் . முதலில் குச்சியைக் கைமாற்றியது எங்கள் அணிதான் . எதிர்பார்த்தது போலவே இரண்டாவது ஓடியவன் கொஞ்சம் பிந்திவிட என் கைக்கு குச்சி வந்து சேர சில விநாடிகள் தாமதமாகி விட்டது . முக்குதிப்பில் முதலிடம் வந்த பூரிப்பில் கால்வலி எல்லாம் காணாமல் போய்விட அந்த சில நொடிகளை நான் சரி செய்து நான்காவது ஓட்டக்காரனிடம் முதலில் கொண்டு கொடுத்து விட அவன் ஏற்கனவே பரம்பரை 100 மீட்டர் சேம்பியன் . தூள் பரத்தி விட்டான் . அப்புறம் என்ன எங்கள் அணிதான் முதலிடம் . [ பார்க்க படம் ] அதைவிட முக்கியமான விஷயம் அந்த புள்ளிகள் உபயத்தில் எங்கள்  WHITE HOUSE அணியின் ஒட்டு மொத்த முதலிடம் நிச்சயமாகி விட்டது என்பதுதான் . மைதானத்தில் ஆரவாரம் . எல்லாம் WHITE HOUSE ஆதரவாளர்கள் .

[ என்னமோ ஒலிம்பிக்கில் இந்தியா தடகளப் போட்டிகளில் பதக்கங்கள் பெறாமல் போவதற்கு காரணம் சொல்கிறேன் என்று ஆரம்பித்து ஒரே சொந்தக் கதையாக இருக்கே …. என்கிறீர்களா ? பொறுங்கள் அடுத்த பதிவு வரை . ]          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக