தாவி அடியெடுத்துக் குதி ….. 1
பயப்பட வேண்டாம் . Hop Step & Jump என்ற தடகளப் போட்டியின்
தமிழாக்கம்தான் . அப்படிப் பொதுவாக
அறியப்பட்டாலும் அதன் அதிகாரப் பூர்வ பெயர் Triple Jump தான் . படத்தில் உள்ள சான்றிதழைப்
பார்த்துக் கொள்ளுங்கள் . பதிவு அது தொடர்பானதுதான் . ஏன் இந்தியாவால் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில்
பதக்கங்களே வாங்க முடியவில்லை என்பதற்கான விளக்கமும் பதிவில் வரும் . [ 1900 ல் இந்தியா பெயரில் இரண்டு தடகளப் பதக்கங்கள்
இருந்தாலும் பெற்றுத் தந்தவரை முழுமையாக இந்தியர் என்று சொல்ல முடியாது . ] ஒரு சின்ன முன்னுரையோடு
துவங்குவோம் .
பள்ளிநாட்களில் விளையாட்டு விழா நடக்கும் ஒரு வாரமும்
கலகலப்பாகத்தான் இருக்கும் . ஆறாவது வகுப்பில் இருந்து 11 வது வகுப்பு வரை உள்ளவர்களை நான்கு
குழுக்களாக பிரித்து விடுவார்கள் . வெள்ளை , சிவப்பு , நீலம் , மஞ்சள் என்று வண்ணங்களின் பெயர்களோடு . ஆனால் போட்டிகள் வயது
அடிப்படையில்தான் இருக்கும் . சப் ஜூனியர் , ஜூனியர் , சீனியர் , சூப்பர் சீனியர் . எந்தப் பிரிவில் இருந்து வெற்றி பெற்றாலும் எந்த குழுவைச்
சேர்ந்தவர்களோ அந்த குழுவிற்கு புள்ளிகள் சேர்ந்துவிடும் . அதன் அடிப்படையில்தான் குழு
சேம்பியன்ஷிப் கோப்பை . குழு விளையாட்டுப் புள்ளிகளும் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படும் . வயதுப் பிரிவில் வழங்கப்படும்
சேம்பியன்ஷிப் கோப்பைக்கு தடகளப் போட்டிகள் மட்டுமே .
வழக்கமாக எதிலுமே அதீத ஆர்வம் காட்டாததைப் போலவே
விளையாட்டும் அப்படித்தான் நமக்கு . அந்த நேரத்தில் மட்டுமே அது குறித்த நினைவுகள் வரும் . மற்றப்படி எதிலுமே தீவிரமான
பயிற்சி , முயற்சி மீதெல்லாம் எப்போதுமே
ஒருவித ஒவ்வாமை .
பத்தாவது படிக்கும்போது விளையாட்டு விழாவுக்கு சில
தினங்களுக்கு முன் விளையாட்டு ஆசிரியர் நடேசன் சாரிடம் பெயர் கொடுக்க வேண்டும் . பெயர் கொடுப்பது என்றால் தனிநபர்
விளையாட்டுகளில் எவற்றில் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறோம் என்று சொல்வதுதான் . குழு விளையாட்டுகளுக்கான அணிகளை
அந்தந்த குழு [ House ] தலைவர்கள்தான் தேர்வு செய்வார்கள் .
எப்போதும் போல பெயர் கொடுக்கும்போது நடேசன் சார் “ லே , இந்த வருஷம் புதுசா Hop Step & Jump ன்னு ஒரு புதுப் போட்டியும்
இருக்கு . இஷ்டம் உள்ளவங்க அதில சேரலாம் “ என்றார் . “ அப்படின்னா என்னாது சார் ? “ கோரஸாக குரல் கொடுத்தோம் .
அனைவரையும் மைதானத்திற்கு கூட்டிச் சென்று தரையில் கோடு
போட்டு விவரித்தார் நடேசன் சார் . நீளம் தாண்டுதல் போலவே ஓடி வந்து வலது காலை [ அல்லது இடது காலை ]
கோட்டில் மிதித்துத்
தாவ வேண்டும் . தாவலின் முடிவில் அதே காலை மட்டும்
தரையில் ஊன்றி அதே வேகத்தில் இன்னொரு காலை முன் வைத்து இன்னொரு தாவல் . அந்த தாவலின் முடிவில் அந்த இன்னொரு
கால்தான் தரையில் பட வேண்டும் . அப்புறம் ஒரு குதிப்பு குதித்து நீளம் தாண்டுதல் போலவே
இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி முடிக்க வேண்டும் . அவர் சொல்லி முடிப்பதற்குள்
கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு தலை சுற்றியது . ஐந்தாறு முறை நடேசன் சார் சொல்லிய
பின்பும் குழப்பம்தான் . அப்புறம் அவரே சின்னதாக ஒரு ஒத்திகை செய்து காட்டினார் .
அதற்குள் குழுத் தலைவர்களில் ஒருவரான மனோகரன் சாமுவேல்
வந்துவிட நடேசன் சார் அவரிடம் கைகாட்டி விட்டார் . மனோகரன் சாமுவேல் டெல்லி வரை
சென்று பதக்கங்கள் எல்லாம் வாங்கி வந்த சூப்பர் சீனியர் . [ ஓட்டம் , தாண்டுதல் இரு பிரிவுகளிலும் ] ஆணி வைத்த spiked shoes மாட்டிக் கொண்டுதான் ஓடுவார் . நாங்களெல்லாம் வெற்றுக்
காலர்கள்தான் . அவர் அந்த உருப்படியில் கலந்து
கொள்ள மாட்டார் என்றாலும் அவருடைய பல போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவங்களின்
அடிப்படையில் தெளிவாக விளக்கினார் . ஒரு மாதிரியாகப் புரிந்தது போல இருந்தாலும் நாங்களாக
முயற்சி செய்து பார்த்தபோது தண்ணி காட்டி விட்டது . கால்களை மாற்றி மாற்றி ஊன்றுவதில்
ஏராளமான குழப்பம் . சாமுவேல் விடவில்லை .
ஒருவழியாக ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டு
விட்டது . நடேசன் சாரைப் பார்த்து ஒவ்வொரு
பிரிவிலும் சில பேர்கள் மட்டும் அந்த போட்டிக்கு பெயர்களைப் பதிவு செய்து கொண்டோம்
. அந்த ஒரு மணி நேர பயிற்சியின்போதே
நாலைந்து பேர்களுக்கு டர்பண்டைன் , நாலைந்து பேர்களுக்கு டிஞ்சர் தேவைப்பட்டதால் மற்றவர்கள்
அந்த விபரீத விளையாட்டிற்கு தயாராக இல்லை . அப்புறம் தினமும் மாலையில் ஒருமணி
நேரம் தீவிரப் பயிற்சி .
குழு விளையாட்டுகள் முடிந்து விளையாட்டு விழா தினமும் வந்து
சேர்ந்தது . பள்ளி விளையாட்டு மைதானம் களை
கட்டியது . அன்று முழுவதும் தடகளப் போட்டிகள்
மட்டுமே . வண்ணக் கொடிகள் கட்டி , ஷாமியானா போட்டு கோலாகலமாக
இருக்கும் மைதானம் . ஓடுதல் , தாண்டுதல் , வீசுதல் என்று அங்கங்கு தனித்
தனியாக போட்டிகள் நடைபெறும் . பெண்களுக்கும் போட்டிகள் உண்டு என்றாலும் அவர்களுக்கு
குறிப்பிட்ட போட்டிகள் மட்டும்தான் .
சீனியர் பிரிவுக்கான
Hop Step & Jump
போட்டிக்கு
தயாராகும்படி ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் . பெயர் கொடுத்தவர்களில் இருவர்
காயம் / பயம் காரணமாக விலகிவிட நாங்கள் ஆறு
பேர்கள் மட்டும் கைகால்களை உதறிக்கொண்டு தயாராகினோம் . [ மனதிற்குள் ஏற்பட்ட உதறல்கள் தனி ]
பதிவு நீண்டு கொண்டே போவதால் மீதியை இன்னொரு பதிவில்
பார்க்கலாம் . [ ஒரு சின்ன குறிப்பு மட்டும் இந்த
விளையாட்டில் ஆண்கள் பிரிவில் தற்போதைய உலக சாதனை மிகச் சரியாக 60 அடிகள் – 18 . 29 மீட்டர்கள் - Jonathan Edwards என்பவர் 26 வருடங்களுக்கு
முன் உருவாக்கியது .
. பெண்கள் பிரிவில் இந்த வருட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம்
வென்றவர் புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளார் . Yulimar
Rojas –
15 . 67 மீட்டர்கள் ]
--------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக