புதன், 4 ஆகஸ்ட், 2021

ஒரு புகைப்படமும் சில நினைவுகளும் ...

 ஒரு புகைப்படமும் சில நினைவுகளும் ...



பரவாயில்லை ; 42 வருடங்கள் ஆகியும் முகஜாடை மாறவில்லை . நேற்று பதிவிட்டிருந்த புகைப்படத்தில் என்னைப் பலரும் சரியாகவே அடையாளம் கண்டு பிடித்து விட்டார்கள் – 3 ஆம் எண்தான் நான் . [ குறுந்தாடி சிலரை ஏமாற்றிவிட்டது . குறுந்தாடி எல்லாம் பணி ஓய்வு பெற்ற பின்னர்தான் . அதற்குமுன் சோம்பல் காரணமாக முழுத்தாடி எப்பவாவது . ]

1979 ஆகஸ்டில் இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவின் கீழ் Short service Commission க்கு ஆள் எடுக்கும் நேர்முகத் தேர்வுக்காக பெங்களுரூவில் [ அப்போது பெங்களூர்தான் ] Service Selection Board நடத்திய நேர்முகத் தேர்வுக்காக போயிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அது . [ அந்த விபரங்கள் எனது காலடியில் உள்ள பலகையில் உள்ளன . ]

Short service Commission கீழ் தேர்வானால் ராணுவத்தில் ஐந்து வருடங்கள் பணி செய்யலாம் . விரும்பினால் தொடரலாம் . [ இப்போது பத்து ஆண்டுகள் ஆக்கி விட்டார்கள் . ] தேர்வானால் பயிற்சி முடிந்தவுடன் நேரடியாக செகண்ட் லெஃப்டினண்ட் ஆகிவிடலாம் . இப்போது செகண்ட் லெஃப்டினண்ட் கிடையாது . எடுத்தவுடன் லெஃப்டினண்ட் . ] 

ஐந்து வருடப் படிப்பை முடிக்க கூடுதலாக 6 மாதங்கள் எடுத்துக் கொண்டதால் மற்ற துறைகளிடமிருந்து அழைப்பதற்கு முன்னால் ராணுவத்தில் சேரலாமே என்று ஓர் எண்ணம் . அதற்கு சில காரணங்கள் உண்டு .

1 ] எப்படியாவது தேசத்திற்கு சேவை செய்துவிட விட வேண்டும் என்ற ஆசை . [ நம்ப வேண்டும் ] ஏற்கனவே பள்ளி நாட்களில் NCC யில் இருந்தபோதிலிருந்தே அந்த சீருடை மீது ஒரு மோகம் உண்டு .

2 ] மற்ற துறைகளைவிட சம்பளமும் கூடுதல் . தவிர மாதாமாதம் பான ஒதுக்கீடு உண்டு என்று கேள்வி .

3 ] ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் குமுதம் உபயத்தில் ஒரு வாரம் பெங்களூர் வாசம் ஏற்படுத்திருந்த அனுபவம் காரணமாக மீண்டும் அரசு செலவில் [ போக்குவரத்து , தங்குமிடம் , சாப்பாடு ] பெங்களூரில் சில நாட்களைக் கழிக்கலாமே என்ற ஆசையும்தான் .  

தொழில்நுட்ப பிரிவுக்கு SSB நடத்தும் எழுத்துபூர்வத் தேர்வு கிடையாது . நேரடியாக நேர்முகத் தேர்வுதான் . மொத்தம் ஐந்து நாட்கள் . தினசரி காலை முதல் மாலை வரை உடல் மற்றும் மனம் / அறிவு சம்பந்தப்பட்ட தேர்வுகள் நடந்து கொண்டே இருக்கும் . மாலை மூன்று மணி நேரம் மட்டும் வெளியே போய் விட்டு வரலாம் . அந்தக் குழுவில் மொத்தம் 17 பேர்கள் . நானும் இன்னொருவரும் மட்டுமே தமிழ்நாடு . [ எண் 5 . கல்லூரியிலும் எனக்கு ஒரு வருடம் இளவல்தான் . ]

ஐந்து நாட்களும் நன்றாகவே கழிந்தன பகல் பொழுதுகளும் மாலைப் பொழுதுகளும் . ஓட்டம் , தாண்டுதல் , கயிறில் ஏறுதல் , வலையில் ஏறுதல்  , படம் பார்த்து கதை சொல்லல் …. இன்ன பிற ] முதற் கட்டத்தில் தேர்வானால் உடல் பரிசோதனைகளுக்காக கூடுதலாக இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் . அந்த கட்டத்திற்குப் போனவர்கள் இருவர் மட்டுமே . [ அவர்களும் ஏற்கனவே ராணுவத்தில் இருந்து கொண்டே தொழில் நுட்ப படிப்பை முடித்தவர்கள்தான் . அவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டாம் .]

எப்படியோ எனது சேவையைப் பயன் படுத்திக் கொள்ளும் அதிர்ஷ்டம் இந்த தேசத்திற்கு இல்லாமல் போய் விட்டது  . ஐந்து நாட்களும் அவர்கள் போட்ட சத்துள்ள உணவுகளை உண்டு மகிழ்ந்து , தேர்வு முடிந்ததும் அவர்கள் கொடுத்த ரயில்வே வாரண்டில் பயணித்து வீடு திரும்பினேன் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக