” ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது . ”
சிறுகதை
சுப்ரா ஓவியம் - ராமு
ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை
. நகரத்தை விட்டு அதிகமாக விலகிச்
செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு நிற்கும் அந்த
டெர்மினஸில் ஒரு ஷெல்ட்டரின் கீழ் நான் நின்று கொண்டிருக்கிறேன் .
பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்ற
வார்த்தைகளை என்னால் உபயோகிக்க முடியாது . ஐ அம் நாட் எ ஹிபோகிரைட் . நான் போக வேண்டிய இடத்திற்கு எந்த
பஸ்ஸில் வேண்டுமானாலும் போகலாம். ஆனாலும் நான் வெகுநேரமாக நின்று
கொண்டிருக்கிறேன் – கையில் புகையும் சிகரட்டோடு . இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை .
வகுப்பிற்குச் சென்றதால் ஏற்பட்ட களைப்பைப்
போக்குவதற்காகச் சிரித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிப் பெண்களின்
சிரிப்பிற்கும் கும்மாளத்திற்கும் பின்னே மறைந்திருக்கும் அவர்களது கவலைகள் – வீட்டிற்குச் சென்றதும் அம்மாவின்
அதிகாரம் தொடங்கிவிடுமே . ரேடியோ கேட்காதே ; நாவல் படிக்காதே ; அரட்டை அடிக்காமல் பாடத்தைப் படி
என்னும் வழக்கமான வசனங்களைக் கேட்க வேண்டுமே .
பக்கத்தில் நிற்கும் பெண்கள் கேட்க
வேண்டுமென்பதற்காக உரத்த குரலி ஜோக்கடிக்கும் ஜீன்ஸ் இளைஞர்கள் . ஒன்றுமில்லாத விஷயங்களிற்கெல்லாம்
தோள்களைக் குலுக்கி , கைகளை ஆட்டிச் சிரிக்கும் அவர்களது ஆர்ப்பாட்டம் . அவற்றின் செயற்கைத் தன்மை .
திரைப் படத்தின் பெயரைப் படிப்பது போல , ஜெயமாலினியின் அந்தரங்கங்களை ஆராயும்
அரைகுறைகள் . வெள்ளை உடையால் மனக் கறுப்பை மறைத்து
விடலாம் என்ற போலியான எண்ணங்களோடு , அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அருகில் உள்ள
லாட்ஜீக்குள் மறையும் அழுக்கு வர்க்கங்கள் ; செயற்கைத் தனத்தோடு மார்பில் புடவையை இழுத்து
விட்டுக் கொண்டு அந்த வர்க்கங்களைத் தொடரும் கிராக்கிகள் .
எதிரில் வருபவள் கட்டியிருக்கும் புடவையைப் போல
தன்னிடம் இல்லையே என்ற ஏக்கத்துடன் நடக்கும் மனைவி ; மனைவி மற்றப் பெண்களைப் போல இல்லையே
என்ற தாபத்துடன் அவள் பக்கத்தில் நடக்கும் கணவன் . ஏக்கங்களையும் தாபங்களையும் மறைத்துக்
கொண்டு கடற்கரையை நோக்கிச் செல்லும் அவர்களது போலியான நெருக்கம் .
இவைகளுக்கிடையே நான் இயற்கையாக – மிகவும் இயற்கையாக நின்று
கொண்டிருக்கிறேன் . சுற்றி நிற்கும் பெண்களின் அழகை
ரசிப்பதன் மூலம் எனது தாகங்களை அடக்கிக் கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தில்
மூழ்கி நின்று கொண்டிருக்கிறேன் .
என்னைப் பொறுத்த வரையில் பெண்கள் அழ்கான கலைப்
படைப்புகள் . ஓவியங்களையும் , சிற்பங்களையும் பார்ப்பது போன்ற
உயர்ந்த ரசனையோடு நான் அவர்களைப் பார்க்கிறேன் . நம்புங்கள் . எனது பார்வைகள் யாரையும் துகிலுரிப்பது
கிடையாது . யாரையும் கற்பழிப்பது கிடையாது . அவர்கள் பார்க்கும் போது நான் தலையைத்
திருப்பிக் கொள்வது கிடையாது . நான் திருடனல்ல – ரசிகன் .
ஒவ்வொரு மாலைப் பொழுதையும் நான் இப்படித்தான்
கழிக்கிறேன் . எனது பார்வைகள் என்றுமே ஏக்கங்களாக
மாறியது கிடையாது . ஆசைகள் எல்லையைத் தாண்டும் பொழுது தானே
ஏக்கங்கள் பிறக்கின்றன ? ஏக்கங்களை வெளியில் காட்ட முடியாமல்தானே வேஷங்கள் போடப்படுகின்றன ?
மாலைப் பொழுதின் நடை துரிதப்படுகின்றது . என்னைச் சுற்றிலும் நடனமாடிக்
கொண்டிருந்த சிரிப்பொலிகளும் , வர்ண ஜாலங்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து
மறைந்து கொண்டிருக்கின்றன .
நான் நின்று கொண்டிருக்கின்றேன் . தொண்டையில் ஏற்படும் ‘ குறு குறு ‘ உணர்ச்சியை அடக்கிக் கொண்டிருக்கும்
சிகரட் கையில் புகைகின்றது .
எனது ‘ டிபார்ச்சர் டைம் ‘ நெருங்குகிறது .இன்னும் சிறிது நேரத்தில் நகர்ந்து
விடுவேன் .
கையைச் சுடும் சிகரட்டைத் தூக்கி எறிகிறேன் . கல்லறைக் குழியைச் சுயமாகத் தோண்டிக்
கொண்டிருக்கும் எனக்கு ஓய்வு , அடுத்த சிகரட்டைப் பற்ற வைப்பதற்கு முன்னால்
உள்ள இந்தச் சில நிமிடங்கள்தான்.
வந்து நிற்கும் பஸ்ஸில் தொற்றிக் கொள்கிறேன் . இடது கையால் கம்பியைப் பிடித்துக்
கொண்டு வலது கையைப் பாக்கட்டினுள் விடும்போதுதான் அவளைக் கவனிக்கிறேன் .
ஷெல்ட்டருக்குக் கீழ் நின்று கொண்டிருக்கும்
அவள் என்னை இறங்க வைக்கிறாள் . படியில் இருந்து குதித்து ஷெல்ட்டரை நோக்கி
நடக்கிறேன். சிகரட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு
அவளை முழுவதுமாகப் பார்க்க முடிகின்ற ஓரிட்த்தில் நின்று கொள்கிறேன் .
ரோஸ் நிறப் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்துள்ள
அவள் புதிதாக , இளமையாக , அழகாக இருக்கிறாள் .
லோ ஹிப்பும் , லோ கட்டும் அவளது முகத்தில் தெரியும்
குழந்தைத் தனத்தோடு இணையாமல் வேறுபட்டு நிற்கின்றன . சூழ்ந்து நிற்கும் கண்களுக்குப் பயந்து
அவள் புடவையைப் படரவிட்டுக் கைகளால் அழுத்திக் கொள்கிறாள் . ஆசைகளுக்கும் , அச்சங்களுக்கும் ஒன்றாக இடம் கொடுத்துவிட்ட
அவளது பதைபதைப்பு எனக்குப் புரிகிறது .
அடிக்கடி கையைத் திருப்பி , வாட்சைப் பார்த்துக் கொள்கிறாள் . அவளது கண்களில் தெரியும் படபடப்பு
அவளது எதிர்பார்ப்பைக் காட்டுகின்றது .
அப்போதுதான் அது நிகழ்கின்றது .
அவளுக்கு அருகில் வந்து நின்றான் அவன் . தூக்கிக் கட்டப்பட்டிருக்கும் லுங்கி , வற்றிக் கிடந்த உடம்பில் துவளும் சாயம்
போன கசங்கிய புரூஸ்லி பனியன் , நிறம் மாறிய பரட்டைத் தலை , காதில் செருகப் பட்டிருக்கும் அணைந்து
போன பீடித் துண்டு ..அவனது மனநிலை நிர்வாணமாகத் தெரிகிறது .
அவளுக்கு மிக அருகில் நின்று அவளைப் பச்சையாகப்
பார்க்கிறான். கண்களை விரித்து , உதட்டைச் சுருக்கி ... பிறக்கும் சிரிப்பு அவனது கீழ்த்தரமான
ரசனையைக் காட்டுகிறது . வேறுபட்ட , ஒதுக்கப்பட வேண்டிய ரசனை .
அவனது செயலால் அவளிடம் ஏற்பட்ட சலனத்தை
ரசித்துக் கொண்டே இடுப்பை வளைத்து அவளை ஒரு தடவை மோதுகிறான் .கைகளை அவள் மீது படர விடுகிறான் . ‘ ஜோரா இருக்கே ‘ என்று சொல்லிவிட்டு அநாவசியமான
வேகத்தில் நகர்ந்து விடுகின்றான் .
எதிர்பாராத விதத்தில் நடை பெற்று முடிந்து
விடும் அந்த சம்பவத்தால் அவள் செயலிழந்து விடுகிறாள் .
‘ யாருடா அவன் ... பயலைப் புடிடா ! ‘ பக்கத்தில் கடை விரித்திருக்கும்
செருப்புத் தொழிலாளி கத்துகிறான் , இருந்த இடத்தை விட்டு எழாமல் .
‘ இவனை மாதிரி அயோக்யப் பசங்களை எல்லாம்
சும்மா விடக் கூடாதுபா ! ‘ பேசியவாறே கையில் டீத்தம்ளருடன் அருகே
வருகிறார் ஒருவர் .’
‘ ..... தா ! எவனாவது எம்மேல கை வச்சா கிழிச்சுடுவேன்
. ‘ அந்த புரூஸ்லி கத்தியவாறே வேகமாக
நடக்கின்றான் .
அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது . அனுதாபங்கள் , குமுறல்கல் . ஆனால் எல்லாவற்றிலும் போலித்தனம்
மிளிர்கின்றது. கீழே சிதறிய புத்தகங்களைக் குனிந்து
பொறுக்கிக் கொள்கிறாள் . கண்ணாடியைக் கழற்றி விரல் நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள் .
’ நீ
அழாதேம்மா . இன்னொரு தபா அவன் இப்டிப் பண்ணட்டும் . தோலை உரிச்சுடறேன் . கஸ்மாலம்
! ‘ செருப்புத் தொழிலாளி திட்டுகிறான் .
‘ இவன மாதிரி ஆளுங்கள்ளாம் இருக்கவரை பொண்ணுங்க
ரோட்ல எப்படி நடக்க முடியும்பா . ‘ டீயைக் குடித்து முடித்துவிட்டுத் தம்ளரைக்
கடையில் கொடுத்து விட்டு மெதுவாக லாட்ஜீக்குள் நுழைகிறார் அவர் .
திடீரென்று நடந்து முடிந்து விடுகின்ற அந்தச்
சம்பவத்தின் பரபரப்பைத் தணிப்பதற்காக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறேன் .
நான் அவளைப் பார்க்கிறேன் . சுற்றி நிற்பவர்களின்
பார்வையில் அனுதாபம் என்ற போர்வையில் உறங்கும் வேடிக்கை பார்க்கும் இயல்பைத் தாங்க
முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள் அவள் .
என்னுள் ஏதோ அரிக்கின்றது . அவளைப்
பார்ப்பதற்கு ஏதோ போல் இருக்கின்றது . பார்வையைத் திருப்பிக் கொள்கிறேன் .
ஆட்டோ ஒன்று அருகில் வந்து நிற்கும் சப்தம்
கேட்டுத் திரும்புகிறேன் . அதில் இருந்து அழகான , உயரமான , தலைமுடியை அதிகமாக
வளர்த்திருக்கும் ஒருவன் இறங்குகிறான் .
‘ ஸாரி ஃபார் த டிலே கீத் ! ‘ மன்னிப்பு
கேட்கும் தோரணையில் பேசியவன் அவளைப் பார்த்ததும் பதறுகிறான் .
“ வாட் ஹாப்பண்ட் கீத் ? “
அவள் உடனே பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றாள்
. பின்னர் அரைகுறையாக அவனிடம் நடந்ததைச் சொல்கிறாள் . அதைக் கேட்கும் அவன் சுற்றி
நிற்பவர்களைக் கோபமாகப் பார்க்கிறான் . ‘ ஒருத்தனுக்குக் கூடவா துணிச்சல் இல்லே ?
‘ என்ற கேள்வி அவனது பார்வையில் அமைதியாக ஒலிக்கிறது .
மீண்டும் அவளைப் பார்க்கிறான் . ‘ வேர் இஸ் ஹி
? ஜஸ்ட் ஷோ மி . ‘
அவள் கையை நீட்டி புரூஸ்லி போன திசையைக்
காட்டுகிறாள் . பாதை வெறிச்சோடிக் கிடக்கிறது .
‘ ஆமா, இவரு போய்க் கிழிச்சுடுவாரு . சும்மா
போயா ... அவ்ளோ வீரம் இருந்தா அப்பவே வந்து ஹீரோயினைக் காப்பாத்தி இருக்க
வேண்டியதுதானே ! ‘ கம்பத்தில் சாய்ந்து கொண்டிருப்பவன் கண்களை உருட்டிக் கைகளை
ஆட்டிப் பேசுகிறான் . ‘ என்னவோ நடக்காதது நடந்துட்டாப்ல பேசறியே ! ‘
‘ லெட் அஸ் கெட் எவே ஃப்ரம் ஹியர் ஜார்ஜ் ! ‘
அவள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டு புத்தகங்களைப் பக்கத்தில் வைக்கிறாள் .
அவன் அடுத்த பக்கத்தில் ஏறிக் கொள்ளுகிறான் . அவளிடம் ஏதோ சொல்கிறான் .
‘ நோ ஜார்ஜ் . எனக்கு மனது ஏதோ போல் இருக்கு .
இன்னைக்கு கோவிலுக்குப் போகலாம் . வீ வில் கோ டு மூவி டுமாரோ . ‘
அவன் தலையாட்டுகிறான் . டிரைவரிடம் ‘
மயிலாப்பூர் கோவிலுக்கு விடுப்பா ‘ என்கிறான் . ஆட்டோ புறப்படுகிறது .
’ நல்லா
இருக்குயா நாயம் . செத்த முன்னாடி எவனோ இடிச்சுட்டான்னு ஓன்னு அழுதுச்சு . இப்போ
பாரு இவங்கூட ஒரே ஆட்டோவில போகுது . ம் ... எங்கே போயி விழுந்து கிடக்கப்
போவுதுங்களோ ! ‘ செருப்புத் தொழிலாளி இரண்டு கைகளையும் விரித்துச் சிரிக்கிறான் .
சுற்றி நிற்பவர்களும் சிரிக்கிறார்கள்.
என்னால் சிரிக்க முடியவில்லை .
‘ ஒரே ஆட்டோவில் அவர்கள் ஏறுவதை மட்டும்தானே
பார்க்கிறீர்கள் . உயிரற்ற புத்தகங்களைப் பெருஞ்சுவர்களாக மாற்றிக் கொண்டு இடைவெளி
விட்டு அமரும் அவர்களது பண்பை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் ? அவளது மனத்
துயரைப் போக்குவதற்காகத் தனது ஆசைகளை அழித்துக் கொள்ளும் அவனது பெருந்தன்மையை ஏன்
ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் ? ‘
என் மனம் அழுகின்றது .
‘ வேஷங்கள் போட்டுக் கொண்டு , வேஷங்கள்
போட்டிருப்பவர்களின் மத்தியில் உலவி வரும் உங்களுக்கு , வேஷங்கள் போடாத இவர்களைப்
பிடிக்காதுதான் . வேஷங்கள் போடாவிட்டாலும் கூட இவர்கள் உங்களைவிட அழகானவர்கள் .
உங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் . ‘
என் மனம் அழுகின்றது .
வந்து நின்ற பஸ்ஸில் ஏறிக் கொள்கிறேன் .
’ நீ
எந்த வகையில் சேர்த்தி ? ‘ என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் . பதில் கூற
முடியவில்லை . ஒரு வேளை என் வேஷங்களை என்னால் பார்க்க முடியவில்லையோ . ‘
என் மனம் அழுகின்றது .
--------------------------------------------------------------------------------------------------------------
1979 ல் குமுதம் நடத்திய இளைய தலைமுறையினருக்கான சிறுகதைப் போட்டியில்
இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக