பொடி விஷயம் . - சுப்ரா
காலையில் கிளம்பும் போதே பரபரப்போடுதான்
கிளம்பினார் ரங்கசாமி . ஆறு மாதமாக காலியாக இருந்த பக்கத்து இருக்கைக்கு இன்று
புதிதாக ஆள் வருகிறான் .
அலுவலகத்தில் அவர் பிரிவில் இரண்டு
கண்காணிப்பாளர் பதவிகள் . ஒன்று காலி . ரங்கசாமிதான் ஆறு மாதமாக கூடுதல்
பொறுப்பில் அந்த இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .
கால் மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில்
இருந்தார் ரங்கசாமி . ஐந்து நிமிடத்தில்
புதியவனும் வந்து விட்டான் .
வந்தவுடன் அறிமுகம் செய்து கொண்டான் .
இருவரும் சென்று மேல் அதிகாரிகளை பார்த்து விட்டு வந்தார்கள் .
இருக்கையில் அமர்ந்ததுமே வெற்றிலை போட
ஆரம்பித்தான் . அவருக்கும் நீட்டினான் . பெட்டியை இருவருக்கும் நடுவில் இருந்த ரேக்கில்
வைத்தான் .
கால் மணி நேரம் கழிந்ததும் ரங்கசாமிக்கு
மூக்கு அரித்தது . கை அனிச்சை செயலாக ரேக்கிற்கு நீண்டது . வழக்கமாக வைக்கும்
இடத்தில் பொடி டப்பா இல்லை . .திரும்பிப் பார்த்தார் . டப்பாவில் இருந்து உரிமையோடு
எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் .
பொடி டப்பாவை அவன் ரேக்கில் வைத்ததும்
அவசரமாக எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார் .
கால் மணி நேரம் போயிருக்கும் பொடி
உறிஞ்சும் ஓசை கேட்டுத் திரும்பினார் . அவன்தான் .
அதன் பின் கால் மணி நேரத்திற்கு ஒரு தடவை
பொடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் . போற போக்கில் பயல் டப்பாவை காலி பண்ணி விடுவான்
போலிருந்தது .
மாலையில் அவசரமாக பொடி டப்பாவை எடுத்து பைக்குள்
போட்டுக் கொண்டார் . டப்பா அநேகமாக காலி . நாளை டப்பாவை பைக்குள்ளேயே வைத்துக்
கொள்ள வேண்டும் . கொஞ்சமும் நாசூக்கு இல்லாத பயல் .
வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியின் குரல்
ஒலித்தது .
” ஆபிஸ்ல எப்படி வேலை ஓடுச்சு ? பொடி டப்பாவை எடுக்காமலேயே போயிட்டிங்களே . “ மனைவி
கையில் அவரது பொடி டப்பா .
அவரது கை பைக்குள் அதே போலிருந்த டப்பாவை
வருடியது .
---------------------------------------------------------------------------
[ நவம்பர்
21-27 , 2014 “ பாக்யா “ இதழில் வெளிவந்த கதை . ]

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஒரு ஓட்டலில் இரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தன்னுடைய தட்டு என்று நினைத்து அவனுடைய தட்டிலிருந்து எடுத்து சாப்பிடுகிறார்.இப்படி ஒன்று படித்தேன். கதையின் பெயரோ எழுதியவரின் பெயரோ நினைவில்லை. ஒரு திரைப் படத்தில் வடிவேலு கூல் டிரிங்க்ஸ் வைத்து இதைப் போல் காமெடி செய்திருப்பார். கண்ணதாசன் ஒரு பத்திரிகை நடத்தினார். அதிலும் ஒரு துணுக்குக் கதை வந்தது.ஒருவன் வீட்டில் ஒரு பொருள் காணவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்தான் எடுத்திருப்பார் என்று நினைக்கிறார். அவரைப் பார்க்கும்போது அவரது விழிகள் திருடன் விழிகள் போலவே இருக்கின்றன. பிறகு அந்தப் பொருள் அவர் வீட்டிலேயே கிடைத்து விடுகிறது. இப்பொழுது பக்கத்து வீட்டுக்காரரை பார்க்கிறார். அவர் விழிகள் கலங்கமில்லாதது போல் தெரிகிறது.
பதிலளிநீக்குவாசித்து கருத்து கூறியதற்கு நன்றி ஒரு முடிச்சை விதவிதமாக எழுதிப் பார்ப்பது என்ற வகையில் எழுதப்பட்ட கதைதான் இது . Jeffrey Archer எழுதிய Broken Routine என்ற சிறுகதையின் தாக்கத்தால் எழுதிப் பார்த்ததே இந்த கதை . அதில் ரயிலில் நடைபெறுவதாக சம்பவம் வரும் . பொடிக்குப் பதிலாக செய்தித்தாளும் , சிகரெட்டும் அதில் . அவ்வளவு ஏன் ? கி.பி. 7 ம் நூற்றாண்டில் மகேந்திர விக்ரம வர்மன் என்ற அரசனால் எழுதப்பட்ட “ மத்த விலாசம் “ என்ற வடமொழி நாடகத்தின் மையமே இந்த முடிச்சுதான் . சத்தியசோமன் என்ற கபாலிகனின் பிட்சாபாத்திரம் [ மண்டை ஓட்டினால் ஆனது ] காணாமல் போகிறது . அங்கு வரும் ஒரு புத்த பிட்சு மீது சந்தேகம் வந்து சண்டையாகிறது . கடைசியில் ஒரு நாயிடம் இருந்து அந்த பாத்திரத்தை ஒரு பித்தன் பிடுங்கிக் கொண்டு அங்கு வருகிறான் . அனைவரும் சமாதானமாகிப் போகிறார்கள் .
நீக்குஇராமாயணத்தில் வரும் அகலிகை – இந்திரன் சம்பவம் கூட ஆள்மாறாட்டத்தின் அடிப்படையில்தானே .
முடிச்சு ஒன்றானாலும் சொல்லும் விதத்தால்தான் படைப்புகள் பல உருவாகுகின்றன .