ராஜநாகங்கள் . [ சிறுகதை ] - சுப்ரா
[ நடுகல் இதழ் 7 பிப்ரவரி 2020 ல் வெளியானது ]
அதை முதலில் பார்த்தது , அவன் பெயரை அவனே மறந்துபோகும் அளவிற்கு அனைவராலும் ஏ 2 என்றே அழைக்கப்படும் பரந்தாமன்தான் . அந்த அலுவலகத்தில் மூத்த எழுத்தர் .
பரந்தாமனுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை தேநீர் சாப்பிட வேண்டும் . தேநீர் குடித்தவுடனேயே ஒரு சிகரெட்டும் பற்ற வைக்க வேண்டும் . இல்லையென்றால் பரந்தாமனுக்கு வேலை ஓடாது . அதனால் வெளியில் வந்துதான் ஆக வேண்டும் . அதற்காகவே அலுவலகத்தின் பக்க வாட்டில் ஒரு வாசல் உண்டு . அலுவலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஆவணக் காப்பறைக்குப் போகும் வழியாக செல்லும் அந்தப் பாதையை மற்றவர்கள் யாரும் பயன் படுத்துவதில்லை . தூசியும் குப்பையுமாக இருக்கும் அந்தப் பாதையில் பகலில் கூட ஒரு குண்டு பல்ப் எரிந்து கொண்டிருக்கும் . அது தரும் வெளிச்சமும் குறைவுதான் .
அந்த நடுத்தர நகரத்தில் உள்ள பல அரசு அலுவலகங்களில் அந்த அலுவலகத்தில்தான் மக்கள் புழக்கம் அதிகம் . பணப் புழக்கமும்தான் . எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும் . மக்களுக்குத் தேவையான பல முக்கியச் சான்றிதழ்களின் பிறப்பிடம் அந்த அலுவலகம்தான் .
அதிகாரி என்று அழைக்கப்படும் அலுவலகத் தலைவர் தொடங்கி வரிசையின் கடைசிப் படியாக உள்ள அ . உ . என்று சுருக்கமாக அழைக்கப்படும் அலுவலக உதவியாளர் கந்தப்பன் வரை எட்டுப் பேர்கள் . அப்புறம் இரவுக் காவலர் ஒருவர் . ராஜப்பன் பேருக்குதான் இரவுக் காவலர் . ஆனாலும் பகலிலும் அலுவலகத்தில்தான் குடியிருப்பு . ஆக மொத்தம் நவக் கிரகங்கள் போல மொத்தம் ஒன்பது பேர்கள் அந்த அலுவலகத்தில் .
அந்த ஒன்பது பேரும் மூலவர்கள் என்றால் , அலுவலகத்திற்கு வெளியே நிறைய உற்சவர்கள் . வரும் பொது மக்களுக்கு மனுக்கள் எழுதிக் கொடுப்பது , அலுவலகத்தின் உள்ளே கூட்டிச் சென்று மூலவர்களை அடைய வழி காட்டுவது எனப் பல பணிகள் அவர்களுக்கு . சமயங்களில் பேரங்களை முடித்துக் கொடுப்பதும் அவர்கள்தான் . மூலவர்களுக்கும் உற்சவர்களுக்கும் நடுவில் நல்ல புரிதல் உண்டு .
ஊரில் உள்ள பல அலுவலகங்கள் அரசு நிதியில் வசதிகளோடு கூடிய புதிய கட்டிடங்களுக்கு குடி பெயர்ந்த பின்னும் அந்த அலுவலகம் மட்டும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்த பழைய சிவப்பு நிற கட்டிடத்திலேயே இருப்பதற்கு காரணம் இப்போது இருக்கும் அதிகாரிக்கு முன்பிருந்த அதிகாரிதான் . புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு கிடைத்தும் மக்கள் வந்து போக வசதி அந்த இடம்தான் என்று கூறி நிதியை திருப்பி அனுப்பி வைத்து விட்டார் . உண்மையான காரணம் அந்தக் கட்டிடம் மிக ராசியானது என்ற நம்பிக்கைதான் . அந்த அலுவலகத்திற்கு மாறுதல் வாங்கி வந்த ஒரு வருடத்திலேயே நாலைந்து வீடுகளும் , ஏழெட்டு காலி இடங்களும் சொந்த ஊரில் வாங்கிப் போட்டிருந்தார் என்று நம்பகமான தகவல் உண்டு . அலுவலகத்தின் மற்ற ஊழியர்களிடமும் அந்த நம்பிக்கை உண்டு . தீர்த்தராமன் வேறு கட்டிட அமைப்பு வாஸ்துபடி மிக சிலாக்கியம் என்று கூறி விட்டார் . எனவே ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே அந்த அலுவலகம் அதே கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது . கொஞ்சம் பழைய கட்டிடம் என்றாலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டியது என்பதால் நல்ல நிலையிலேயே விரிசல்கள் எதுவும் இல்லாமல் இருந்தது . கட்டிடத்தின் உள்புறத்தில் பல வசதிகள் பண்ணப் பட்டிருந்தாலும் வெளித்தோற்றம் அப்படியேதான்
.
பரந்தாமன் அதைப் பார்த்தது வார ஆரம்பமான ஒரு திங்கள் கிழமை காலையில்தான் . அலுவலகம் திறந்து ஒரு மணி நேரம் கழிந்து அவனது வழக்கமான காலைக் கடன்களை முடிக்க வெளியே போய்விட்டு பக்கவாட்டு வழியில் திரும்பி வரும்போதுதான் அதைப் பார்த்தான் .
அந்த மங்கிய வெளிச்சத்திலும் அது அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை . அதைப் பார்த்த கணத்திலேயே தமிழின் முதல் நாவல் உருவான காலத்தில் விவரிப்பது போலவே உடலில் சர்வாங்கமும் பதறிப் போய் , வியர்த்து விறுவிறுத்து நாக்குழற உள்ளே ஓடி வந்தான் . அந்த பதட்டத்திலும் அவனது விலை உயர்ந்த கைபேசியில் அதை படமெடுக்க மறக்கவில்லை .
“ பா….பா….பாம்பு …. “ அவன் வாயில் இருந்து வார்த்தைகள் குழறிப் போய்தான் வெளிவந்தன .
” பாம்பா … என்னண்ணே ராத்திரி ஏத்தின போதை இன்னும் இறங்கலியா ? “ ஏ 1 மதிவாணன் நக்கலாக கேட்டான் .
“ அட நீ வேற . நிஜமாவே பாம்புதாம்பா . அஞ்சடி நீளம் இருக்கும் . சுவரோரமா வளைஞ்சு நெளிஞ்சு போய் ரெக்கார்ட் ரூமுக்குள்ள போயிட்டுது .
“ இருக்கையில் உட்கார்ந்த பின்னும் படபடப்பு அடங்காமல் பரந்தாமன் சொன்னான் .
அதற்குள் அதிகாரி தவிர மற்ற அலுவலகர்கள் அனைவரும் பரந்தாமன் இருக்கையருகில் குழுமி விட்டனர் . வேலைகளை முடிக்க வந்திருந்த பொது மக்களும் கூட்டி வந்த உற்சவ மூர்த்திகளைத் தொடர்ந்து கூடி விட்டனர் . பரந்தாமன் கைபேசியை நீட்டி பாம்பின் படத்தைக் காண்பித்தான் . உண்மைதான் . ஐந்தடி நீளத்தில் இருந்த பாம்பின் படத்தைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பும் பயம் கலந்த குரல்களும் . வெளி ஆட்களில் சிலர் படத்தைப் பார்த்ததுமே வந்த வேலையை அப்புறம் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மெதுவாக வெளியேறி விட்டனர் .
“ ஆத்தாடி , எவ்வளவு பெரிசு . பார்த்தால் நல்ல பாம்பாட்டம்தான் இருக்கு . “ கண்காணிப்பாளர் தீர்த்தராமன் கண்களிலும் குரலிலும் பயம் .
“ கந்தப்பா நீ ரெக்கார்ட் ரூம் பக்கமா நின்னு பாம்பு வெளியே வருதான்னு பார்த்துகிட்டு இரு . அதிகாரிகிட்ட விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டியதைப் பார்ப்போம் . “ ஓரளவிற்கு பதட்டம் தணிந்திருந்த பரந்தாமன் எழுந்தான் .
“ அது சரி . நான்தான் இளிச்சவாயன் மாட்டினேனா ? அம்மாம் பெரிய பாம்பை உள்ளே வச்சுகிட்டு தனியா அங்கே போய் தனியா நிற்கிறதா . ராசப்பா நீயும் வா . ரெண்டு பேருமா நின்னு பார்ப்போம் . “
எங்கேயோ தேடி எடுத்த நீளமான கம்பை எடுத்துக் கொண்டு வந்த ராஜப்பனையும் கூட்டிக் கொண்டு கந்தப்பன் அந்த பக்க வாட்டு வழியின் ஆரம்பத்தில் ஆவணக் காப்பக அறையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டதும் தீர்த்தராமன் தலைமையில் ஏ 1 , ஏ 2 , இளநிலை உதவியாளர்கள் இருவர் அடங்கிய குழு அதிகாரியின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த்து . ஏற்கனவே சற்று பயந்த சுபாவம் கொண்ட அதிகாரி எப்போதும் இல்லாத வழக்கமாக மொத்த அலுவலகமே உள்ளே நுழைந்ததைப் பார்த்து பதறிப் போனார் . ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ என்ற குழப்பம் மனத்தில் . அதிகாரிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்பதால் தீர்த்தராமன்தான் பேசினார் .
“ சார் . அஞ்சடி நீளத்தில நல்ல பாம்பு ஒன்னு ரெக்கார்ட் ரூமுக்குள்ளே புகுந்திருக்கு . நம்ம பரந்தாமன்தான் பார்த்தான் . படம் கூட எடுத்து வச்சிருக்கான் .
“ தீர்த்தராமன் பேசி முடித்ததும் பரந்தாமன் பணிவாக குனிந்து தன் கைபேசியில் இருந்த படத்தை அதிகாரியின் முகத்திற்கு நேரே நீட்டினான் . அதைப் பார்த்ததுமே அதிகாரி சட்டென்று தன் கால்களை உயரே தூக்கி இருக்கையில் வைத்துக் கொண்டார் .
“ என்னய்யா இவ்வளவு பெரிய பாம்பா இருக்கு . அதுவும் நல்ல பாம்புன்னு வேற சொல்றீங்க . அறைக்குள்ளே நுழைஞ்சு அடிச்சுக் கொல்ல முடியாதா ? “
“ சார் , நாகப்பாம்பு சார் . போட்டுச்சுன்னா பொட்டுன்னு போயிடும் உயிரு . யாராவது பாம்பாட்டியை வரவழைச்சுதான் பிடிக்க முடியும் . அதான் என்ன பண்ணலாம்னு கேட்கதான் வந்தோம் . கந்தப்பனும் , ராஜப்பனும் பாம்பு வெளியே வருதான்னு பார்த்துகிட்டு இருக்காங்க . “
அதிகாரி உட்பட அனைவரும் அறைக்கு வெளியே வந்தார்கள் . வெளியே கந்தப்பனையும் ராஜப்பனையும் தவிர வேறு யாருமே இல்லை .
கந்தப்பனும் ராஜப்பனும் நின்ற இடத்திற்கு அதிகாரியை கூட்டி வந்து தான் பாம்பைப் பார்த்ததை விரிவாகச் சொன்னான் பரந்தாமன் . பாம்பின் நீள அகலம் , அது ஊர்ந்த விதம் , அதன் வர்ணம் உட்பட விலாவாரியாகச் சொல்லி முடித்ததும் மீண்டும் அதிகாரியின் அறைக்குள் நுழைந்து கொண்டனர் .
“ ரெக்கார்ட் க்ளார்க் சுந்தரம் எங்கே ? “ அதிகாரியின் கேள்விக்கு பரந்தாமன்தான் பதில் சொன்னான் .
“ சுந்தரம் இன்னைக்கு லீவு சார் . மச்சினி வீட்டில ஏதோ காது குத்து விசேஷமாம் . நல்ல வேளை . வந்திருந்தா வழக்கமா அங்கே அவன் இருக்கையிலதான் இருந்திருப்பான் . கெட்ட நேரமா இருந்து பாம்பு பொட்டுன்னு போட்டிருந்தா ஏதாவது ஆகியிருக்கும் . ”
“ சரி , சரி . நடக்க வேண்டியதைப் பார்ப்போம் . ஊரில யாராவது பாம்பாட்டி இருந்தா கூட்டிட்டு வாங்க . எதுக்கும் நம்ம மாவட்ட அதிகாரிக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் சொல்லிடுவோம் . எப்படியும் செலவாகிற தொகையை திருப்பி வாங்க வேண்டியதிருக்கும்ல . பரந்தாமன் இரண்டு அலுவலகங்களுக்கும் விலாவாரியாக விஷயத்தைச் சொல்லி ரெண்டு கடிதங்கள் தயார் பண்ணுங்க . “ அதிகாரி தன் அறைக்குள் புகுந்து கொண்டார் .
“ பாம்பாட்டிக்கு எங்கேப்பா போறது . யாருக்காவது தெரியுமா ? “ தீர்த்தராமன் பொதுவாக கேள்வியைப் போட்டார் .
“ நம்மூர்லயே ஒருத்தர் இருக்காரு சார் . நெறைய பாம்பு பிடிச்சு பழக்கமுள்ளவர் . விசாரிச்சு கூட்டிட்டு வந்திடறேன் . “ கந்தப்பன் முந்திக் கொண்டு பதில் சொன்னான் . இப்போதைக்கு இடத்தைக் காலி செய்வது நல்லது என்ற எண்ணத்துடன் வேகமாக வெளியேறினான் .
“ சரி , அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிப்போம் . “ பரந்தாமன் சக ஊழியர்களிடம் சொல்லியவாறே தன் கால்களை இருக்கையில் தூக்கி வைத்துக் கொண்டான் . மற்றவர்களும் அவனைப் போலவே கால்களை இருக்கையில் தூக்கி வைத்துக் கொண்டனர் . பாம்பு இருக்கையில் ஏறாது என்ற நம்பிக்கைதான் .
“ சார் , யாராவது ஒருத்தர் இங்கே வாங்க . ரெண்டு பேர்கள் இருந்தால்தான் நல்லா பார்க்க முடியும் பாம்பு வெளியே வந்தால் . “ ராஜப்பன் குரல் கொடுத்தான் .
“ செங்குட்டுவன் நீங்க ராஜப்பன் கூட போய் உட்காருங்க . “ தீர்த்தராமன் இளநிலை உதவியாளரில் ஒருவரான செங்குட்டுவனைப் பார்த்துச் சொன்னார் . செங்குட்டுவனும் வேறு வழியில்லாமல் ராஜப்பன் எடுத்து தயாராக வைத்திருந்த இருக்கையில் கால்களை மேலே வைத்துக் கொண்டு உட்கார்ந்தான் . அதற்குள் பரந்தாமன் மனத்தில் இருந்த பயத்தை வெளிக் காட்டாமல் நகர்ந்து சென்று குண்டு பல்பை கழற்றி விட்டு ஒளி கூடிய பல்ப் ஒன்றை மாட்டி விட்டு வேகமாகத் திரும்பி வந்து தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டான் . இப்போது அந்த பக்க வாட்டு வழி பளிச்சென்று வெளிச்சமாக இருந்தது . பாம்பு வெளியே வந்தால் எப்படியும் தெரிந்து விடும் .
பாம்பு குறித்த கவலை தவிர இப்போது வேறொரு கவலையும் அவர்களிடம் சேர்ந்து கொண்டது . காரியங்களை முடித்துக் கொள்ள வந்த பொதுஜனம் மொத்தமும் பாம்பு பயத்தில் இடத்தைக் காலி பண்ணி விட்டது . அன்றைய வருமானத்தில் அடி விழுந்து விடும் என்பது உறுதியாகி விட்டது .
“ பப்ளிக்தான் பயத்தில ஓடிட்டாங்கன்னா இந்த உற்சவ மூர்த்திகளுக்கு என்ன கொள்ளை வந்தது . இங்கேயே சுத்திச் சுத்தி வருவானுக . இப்ப ஒருத்தனையும் காணும் . ராஜாராமன் வெளியே போய் அவனுக நின்னா கூப்பிட்டுட்டு வாங்க . எல்லாரும் சேர்ந்து வேலை செஞ்சாதான் கதைக்காகும் .
“ தீர்த்தராமன் இரண்டாவது இளநிலை உதவியாளருக்கு உத்தரவிட்டார் .
ராஜாராமன் வெளியே போய் வெளியே நின்று கொண்டிருந்த உற்சவ மூர்த்திகள் ஆறு பேர்களையும் கூட்டி வந்தான் . அவர்களும் பயந்து பயந்துதான் உள்ளே வந்தார்கள் .
“ ஏம்பா இப்படி எல்லாரும் சம்பந்தமே இல்லாத மாதிரி வெளியே போய் நின்னுகிட்டா எப்படி . இந்த அலுவலகத்தில வேலை பார்க்காட்டாலும் இதுதான் உங்களுக்கும் சோறு போடுது . அதை மறந்திடாதீங்க . ஒரு விவகாரம்ன உடனே அத்தனை பேரும் ஓடிப் போயிட்டீங்க . “ தீர்த்தராமன் குரல் ஓங்கி ஒலித்தது .
“ அய்யய்ய …. அப்படில்லாம் ஓடிப் போயிடுவோமா சார் . பாம்பு பயத்தில பார்ட்டிங்கல்லாம் வெளியேறிட்டாங்க . அவங்களைப் பிடிச்சு வைக்கலாம்னுதான் அவங்க கூடவே போனோம் . ஆனால் எவ்வளவோ சொல்லியும் எல்லோரும் அப்புறம் வந்து பார்த்துக்கிடறோம்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டாங்க .
“ உற்சவ மூர்த்திகளில் வயதில் மூத்தவர் மெல்லிய குரலில் சொன்னார் .
“ அப்ப சீக்கிரமே பாம்பைப் பிடிச்சாகணும் . இல்லைன்னா வருமானம் கோவிந்தாதான் . ” தீர்த்தராமன் குரலில் உண்மையான கவலை தொனித்தது .
பாம்பு குறித்த கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே நாலைந்து பேர்கள் உள்ளே வந்தார்கள் . உள்ளூர் பத்திரிகைக்காரகள் . அலுவலகத்திற்கு பழக்கமானவர்கள்தான் .
“ என்ன சார் , ஆபிஸிற்குள்ள பாம்பு வந்துட்டுதாமே . எங்கே இருக்கு . படத்தோடு செய்தி போட்டுடலாம் . “
தீர்த்தராமன் சற்று தயங்கினார் . எதுக்கும் அதிகாரிகிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்றவாறே அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார் . அதிகாரி கால்களை இருக்கையில் வைத்த நிலையிலேயேதான் இருந்தார் . தீர்த்தராமன் பத்திரிகை சமாச்சாரம் குறித்து சொல்லியதும் சிறிது யோசித்தார் .
“ சரி நியூஸ் போடச் சொல்லுங்க . நாளைக்கு செலவான தொகையை திருப்பி வாங்க உதவியாக இருக்கும் . “
தீர்த்தராமன் வெளியே வந்தார் . “ பாம்பு உள்ளே எங்கே இருக்குன்னே தெரியாது . படம் எடுக்கல்லாம் முடியாது . நம்ம பரந்தாமன்தான் முதலில் பார்த்தவர் . அவர்கிட்ட விசாரிச்சு செய்தி எழுதிக்கிடுங்க . அவர் போன்ல எடுத்த படமும் இருக்கு . “
ஊடகக் கூட்டம் பரந்தாமனைச் சூழ்ந்து கொண்டது . அவன் காட்டிய படத்தைப் பார்த்ததும் அவசர அவசரமாக செய்தி சேகரித்துக் கொண்டு , படத்தை தங்கள் கைபேசிக்கு மாற்றிக் கொண்டு அவசரமாக வெளியேறியது கூட்டம் .
கந்தப்பன் திரும்பிவந்த போது மணி ஒன்று . பாம்பாட்டி என்றால் பழைய லுங்கி , பழைய சட்டை , தலையில் முண்டாசு , தாடி , கையில் கூடையும் , மகுடியுமாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது கந்தப்பனோடு வந்த மனிதரின் தோற்றம் . வெள்ளை பைஜாமா , பச்சை ஜிப்பா , தோளில் விலையுயர்ந்த ஒரு பெரிய தோல்பை , ஒப்பனை செய்த ரஜனிகாந்த் போல தலைமுடி சகிதமாக வந்த மனிதரை ஆச்சரியத்தோடு பார்த்தது மொத்த அலுவலகமும் .
அவர்களது வியப்பை புரிந்து கொண்ட கந்தப்பன் விளக்கம் அளித்தான் . “ இவருதான் நாகராசு . நாற்பது வருஷ அனுபவம் . பெரிய பெரிய பாம்புகளையெல்லாம் சாதாரணமாக பிடித்து விடுவார் . தனியா வெப் சைட்டே வச்சிருக்காரு . எப்பவும் வெளியே வேலை விஷயமாக அலைந்து கொண்டிருப்பாரு . வெளியூர்தான் பாதிநாள் .நம்ம நல்ல நேரம் . வீட்டில இருந்தாரு . கையோட கூப்பிட்டுட்டு வந்திட்டேன் . “
நாகராசைக் கூட்டிக் கொண்டு போய் அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார் தீர்த்தராமன் .
வெளியில் வந்ததும் பரந்தாமன் கைபேசியில் இருந்த படத்தைக் காண்பித்தான் .
“ அடடே … பெரிய புள்ளியா இருக்கும் போல இருக்கே சாரே . ராஜநாகம் மாதிரி இருக்கு . பயங்கர விசம் . ரொம்ப கவனமா இருக்கணும் . இல்லைன்னா சோலியை முடிச்சுடும் . அவ்வளவு ஈஸியா பிடிபடவும் செய்யாது . ஆனாலும் நம்மகிட்ட அது பாச்சா பலிக்காது . எப்படியும் அமுக்கிடலாம் . கவலைப் படாதீங்க சாரே . “ ராசப்பா தோள்பையைத் திறந்து உள்ளிருந்து ஒரு பிரம்புக் கூடை , கவட்டையோடு கூடிய சில கம்புகள் , மகுடி எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தார் .
“ இருக்க இடத்தைப் பார்த்திடுவோம் முதலில . “ பரந்தாமன் அவரைக் கூட்டிக் கொண்டு போய் தூரத்தில் இருந்தே பாம்பு புகுந்த வாசலைக் காட்டினான் .
“ உள்ளே போய் பார்க்கணுமே . “
“ உள்ளேயா …. “ பரந்தாமன் பதறினான் . “ அந்த அறைக்குள்ளே போய் வருவது ஒருவர் மட்டும்தான் . அவர் இன்னைக்கு லீவ் . வேற யாருக்கும் உள்ளே போய் பழக்கமில்லையே .
“
மீண்டும் தீர்த்தராமனிடம் வந்தார்கள் .
“ சார் , அவருக்கு உள்ளே போய் பார்க்கணுமாம் . எதுக்கும் ரெக்கார்ட் கிளார்க்கை கூப்பிட்டு வந்திடலாம் . வேற யாருக்கும் அறை அமைப்பு தெரியாது . “
மீண்டும் கந்தப்பன்தான் போனான் . விஷயத்தைச் சொல்லி சுந்தரத்தை கையோடு கூட்டி வர .
அதற்குள் நாகராசின் கட்டணம் , செலவுகள் குறித்து பேச ஆரம்பித்தார் தீர்த்தராமன் .
“ பாம்பு புடிக்க கட்டணம் ஐயாயிரம் ரூபா சாரே . ஒரே நாளில் மாட்டிடும்னு சொல்ல முடியாது . ராத்திரியும் இங்கேதான் கிடக்கணும் . அதுக்கு தனியா ஒரு நாள் செலவுக்கு ஆயிரம் ரூபா ஆகும் . “
“ என்னப்பா இவ்வளவு தொகை சொல்றே ? “
“ சாரே , உருப்படி ரொம்ப பெருசு . பயங்கர ரிஸ்க் எடுத்துதான் பிடிக்கணும் . ரேட்டு ஒத்து வரலைன்னா வேற யாரையாவது வச்சு பாத்துக்கங்க சாரே . “ நாகராசு கிளம்புவதுபோல நகர்ந்தான் .
தீர்த்தராமன் அதிகாரியிடம் சென்று விஷயத்தைக் கூறினார் . சற்று யோசித்தார் அதிகாரி ., “ சரின்னு சொல்லிடுங்க . வேற ஆளுல்லாம் தேட முடியாது இப்ப . அதோட ஆளும் ரொம்ப அனுபவம் உள்ள மாதிரி தெரியுது . அப்படியே தோராயமாக இவ்வளவு செலவு ஆகும்னு மேலிடத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பிடுவோம் . செலவுக் கணக்கை கொஞ்சம் கூடுதலாகவே காட்டுங்க . ” அதிகாரியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் புரிந்து கொண்டவராக தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்தார் தீர்த்தராமன் . மனசிற்குள் நிறைய கணக்குகள் ஓடின .
“ சரிப்பா . அதிகாரி சரி சொல்லிட்டாரு . வேலையை சீக்கிரமாக முடிச்சுக் கொடுத்துடு . உள்ளே இருக்கவே பயமாக இருக்கு . “
“ அட ஏன் சாரே பயம் ? இந்தா இந்த தாயத்தை ஆளுக்கு ஒன்னு கையில கட்டிக்கிடுங்க . ஒரு சீவராசியும் பக்கத்தில வராது . “
பையில் இருந்து எடுத்த தாயத்துகளை ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு தாயத்துக்கு நூறு ரூபாய் வீதம் மறக்காமல் வாங்கிக் கொண்டார் நாகராசு . முலவர்கள் , உற்சவர்கள் உட்பட பதினைந்து தாயத்துகளும் கூடுதலாக ஐந்து தாயத்துகளுமாக கை மாறின .
விஷயத்தைச் சொல்லி சுந்தரத்தைக் கையோடு கூட்டி வந்து விட்டான் கந்தப்பன் . அறைக்குள் போக வேண்டும் என்றதும் சுந்தரம் தயங்கினான் . ” உள்ளே வெளிச்சம் போதாதே . இங்கிலீஷ்காரன் காலத்தில இருந்து உள்ள கோப்புல்லாம் அடைஞ்சு கிடக்கு . “
“ அட நான் இருக்கும்போது நீங்க ஏன் பயப்படறீங்க சாரே . தாயத்து ஒன்னைக் கட்டிட்டு தைரியமா வாங்க . “
பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்ததும்தான் நாகராசுவும் சுந்தரமும் உள்ளே போனார்கள் . சற்று நேரம் கழித்து வெளியே வந்தார்கள் .
“ இடம் ரொம்ப டஞ்சனாத்தான் இருக்கு . உருப்படி ஒளிஞ்சிருக்கிற இடத்தைக் கண்டு பிடிக்கிறது ஈஸியில்ல . பொறுத்திருந்துதான் அமுக்கணும் . யாராவது ஒருத்தர் ராத்திரி பகலா அந்த அறை வாசலைப் பார்த்துகிட்டே இருக்கணும் . நானும் இங்கேயேதான் இருப்பேன் . எப்படியும் வெளியே வந்துதானே ஆகணும் . அமுக்கிடலாம் “ நாகராசு தன் திட்டத்தை விவரித்தார் .
அன்றைய மாலை செய்தித் தாள்களில் எல்லாம் அலுவலகத்தில் பாம்பு புகுந்த செய்தி படத்தோடு வெளியாகியிருந்தது .
அன்று இரவாகியும் பாம்பு பிடிபடவில்லை . இரவு நாகராசுவோடு யாராவது இருவர் மாற்றி மாற்றி தூங்காமல் முழித்திருப்பது என்று முடிவாகியது . முதல் நாள் இரவு கந்தப்பனும் சுந்தரமும் தங்கினார்கள் .
மறுநாள் செவ்வாய் கிழமையும் பாம்பு வெளிவரவே இல்லை .
“ மகுடி ஊதினால் வெளியே வராதா ? “ தீர்த்தராமன் வருமான இழப்பைத் தாங்க முடியாமல் விசாரித்தார் .
“ சாரே , பாம்புகளுக்கு காது கிடையாது . அது முன்னாடி இருக்கும்போது மகுடிக்கு ஆடும்கிறது அதை வாசிக்கிற நம்ம அசைவைப் பார்த்துதான் . அதனால வெளியே வந்தால்தான் மகுடிக்கு வேலை . “
செவ்வாயும் வெட்டியாகவே கழிந்தது . நாகராசு கொஞ்சம் கூட கவனம் சிதறாமல் காரியமே கண்ணாக இருந்தும் பயன் இல்லை .
மூன்றாவது நாள் மதியம் வரை அதே நிலை நீடிக்கவே மொத்த அலுவலகமும் மனம் ஒடிந்து போனது . பாம்பு குறித்த பயத்தைவிட மூன்று நாட்களாக ஏற்பட்ட வருமான இழப்புதான் மனத்தைப் பாதித்திருந்தது . வழக்கமாக அன்றன்று வரும் வருமானத்தில் அன்றாடச் செலவுகள் போக சேமிப்பிற்கு பணம் சேர்த்த நிலை மாறி , சேமிப்பில் இருந்து பணம் எடுத்து அன்றாடச் செலவுகளை செய்ய வேண்டிய நிலை . பற்றாததற்கு நாகராசுக்கு அன்றாடச் செலவுக்கு காசு கொடுக்க வேண்டிய நிலை . போட்ட பணம் என்று திரும்புமோ என்று புரியாத நிலையில் ஒருவர் மாற்றி ஒருவர் செலவழிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் .
நாலாவது நாள் வியாழன் மதியம் அனைவரும் நம்பிக்கை இழந்து சோர்ந்து போயிருந்த சூழலில் அந்த நல்ல காரியம் நடந்து முடிந்தது .
“ வெளியே வந்துட்டுது சார் …. இந்தா புடிச்சாச்சு சார் …. “ நாகராசு உற்சாகத்துடன் நடு அறைக்கு வந்து நின்றார் . வலது கை பாம்பின் தலையை அழுத்தியவாறு அதன் கழுத்தைப் பிடித்திருந்தது . இடது கை வாலைப் பிடித்திருந்தது . அவ்வளவு இறுக்கமான பிடியிலும் அது திமிறிக் கொண்டுதான் இருந்தது .
“ எங்கே போயிடும் நம்மகிட்ட மாட்டாம . அந்தக் கூடையைத் திறந்து வையுங்க சாரே . “ நாகராசுவின் குரலில் பெருமிதம் .
கந்தப்பன் கூடையை திறந்து வைத்து விட்டு நகர்ந்து கொண்டான் . அதிகாரியும் வெளியே வந்துவிட மொத்த அலுவலகமும் நாகராசுவிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு நாகராசுவின் செயல்களையே பார்த்துக் கொண்டிருந்தன . அவர் திறமையாக ஒரு கவுட்டையைப் பயன்படுத்தி பாம்பை கூடைக்குள் தள்ளி கூடையை இறுக மூடியதும்தான் அனைவரும் அருகில் வந்தார்கள் . எல்லோர் முகத்திலும் நிம்மதி . பாம்பு பிடிபட்டதால் மட்டுமில்லை , நாளை முதல் வழக்கம்போல் வருமானம் வரும் என்ற மகிழ்ச்சியும் சேர்த்துதான் .
தீர்த்தராமன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்காமல் உற்சவர்களில் ஒருவரை அனுப்பி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பினார் . பாம்பு பிடிபட்ட செய்தி தெரிந்தால்தானே பொதுஜனம் உள்ளே வரும் .
கொஞ்ச நேரத்திலேயே ஊடகம் வந்து சேர நாகராசு கூடையை இலேசாகத் திறந்து பாம்பை திறமையாக கையில் எடுத்து படம் எடுக்க தோதாக காட்டினார் .
ஊடகங்கள் போனதும் நாகராசு பாம்பை மீண்டும் கூடைக்குள் திணித்து மூடிவிட்டு தீர்த்தராமனுக்கு அருகில் வந்தார் .
“ சாரே , அப்படியே கையோட வனத் துறைக்கும் சொல்லி வந்து பிடிச்சுட்டு போகச் சொல்லிடுங்க . பேப்பர்ல எல்லாம் வந்துட்டதால விஷயத்தை மறைக்க முடியாது . தெரிஞ்சா சிக்கலாயிடும் . அப்புறம் இன்னொரு விஷயம் . இவ்வளவு பெரிய நாகத்தோட தோலும் , விசமும் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல விலை போகும் . இப்ப வெளியே தெரிஞ்சிட்டதால எனக்கு அது போச்சு . நம்ம பில்லில அந்த ஐயாயிரத்தையும் சேர்த்து கொடுத்திடுங்க சாரே . “
வனத்துறை வந்து பாம்பை பெட்டியோடு எடுத்துச் சென்ற பிறகு அதிகாரி முன்னிலையில் நாகராசுவின் கணக்கு வழக்கு பார்க்கும் பணிகள் நடந்தன . அவ்வளவு பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க தயங்கினாலும் , பாம்போடு சாதாரணமாக புழங்கும் நபரோடு சச்சரவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுப்புத்தி அறிவுறுத்த அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் . செலவான தொகைக்கு மேல் கொஞ்சம் அதிகமாகவே கணக்கிடப்பட்டு மேலிடத்திற்கு கடிதமும் கையோடு தயார் பண்ணி விட்டார் தீர்த்தராமன் . ஒருவருக்கு இருவராக அனுப்பி அன்று மாலையே அனைத்து செய்தித் தாள்களிலும் முதல் பக்கத்திலேயே செய்தி வெளியாகுவதையும் , உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி வருவதையும் உறுதி செய்து கொண்டார் . செய்தி பரவலாக சென்றடைந்தால்தானே மக்கள் புழக்கம் ஆரம்பமாகும் .
அன்று இரவு அதிகாரி முதல் உற்சவர்கள் வரை நிம்மதியாக தூங்கப் போனார்கள் . ராஜப்பன் கூட அன்று இரவு துணைக்கு யாரும் இல்லாமல் அலுவலகத்தில் வழக்கமான இடத்திலேயே படுத்து தூங்கினான் .
மறுநாள் வெள்ளிக்கிழமை வழக்கமான புத்துணர்ச்சியோடு அலுவலகம் இயங்கத் தொடங்கியது . உற்சவர்கள் கூடுதலாக உழைத்து மக்களை அலுவலகத்திற்கு கூட்டி வந்தார்கள் . பாம்பு பயத்தால் நாலைந்து நாட்களாக தடைப் பட்டிருந்த காரியங்களை முடிக்க பொதுமக்களும் திருவிழாக் கூட்டம் போல குவிந்தார்கள் . நாலு நாட்கள் இழப்பை சரிக்கட்டும் நோக்கத்தில் அதிகாரி முதல் அ . உ . வரை அனைத்து மூலவர்களும் வழக்கத்தைவிட அதிகமான வேகத்தில் இயங்க என்றைக்குமில்லாத அளவில் சான்றிதழ்களும் , கச்சாத்துகளும் தயாராகின . பணப் புழக்கமும் அதே வேகத்தில் நடைபெற தொகை பெரியது என்பதால் அவ்வப்போது வருமானம் பங்கிடப்பட்டு அந்தந்த கைகளுக்குப் போய் சேர்ந்தது .
கிட்டத்தட்ட அலுவலகம் முடியப் போகும் நேரத்தில்தான் அந்தக் குழு உள்ளே நுழைந்தது . மூலவர்கள் மற்றும் உற்சவர்கள் ஒவ்வொருவருக்கும் இருவர் வீதம் சூழ்ந்து கொள்ள கைகளிலும் , பைகளிலும் , மேசைகளிலும் இருந்த பணம் கைப்பற்றப் பட்டு பெயரோடு பட்டியல் இடப்பட்டது . வெளியேற முயன்ற பொதுஜனத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டது குழு . இரசாயன மை தடவப்பட்ட பணம் தவிர நேரடி சாட்சிகள் அவர்கள்தானே . ஏற்கனவே சொல்லி வைத்தது போல ஊடகத் துறையும் வாசலில் அணி வகுத்து நின்றது .
அத்தகைய நிகழ்வுக்கான அனைத்து நடைமுறைகளும் முறையாக நடந்து முடிந்து மூலவர்களும் , உற்சவர்களும் முகங்களை துண்டுகளால் மூடிக் கொண்டு வெளியே காத்துக் கொண்டிருந்த வாகனங்களில் ஏறும்போதுதான் பரந்தாமன் தற்செயலாக அதைக் கவனித்தான் .
குழுவில் இருந்த அதிகாரிகளில் ஒருவரது முகம் நாகராசுவின் முகம் போலவே இருந்தது .
------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக