செவ்வாய், 21 ஜனவரி, 2020

“ ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல “ [ ஜெயதேவன் ] கவிதைத் தொகுப்பு – ஒரு வாசிப்பு அனுபவம் .

ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல






ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல “ [ ஜெயதேவன் ] கவிதைத் தொகுப்பு – ஒரு வாசிப்பு அனுபவம் .

தன்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகள் குறித்த உணர்வுகளையும் மனக் குமுறலையும் வெளிப்படுத்தும் வடிகாலாக அரசியல் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் ஜெயதேவன் அடிப்படையில் ஓர் அழகியல் கவிஞர் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது அவரது புதிய தொகுப்புஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல “ . [ அவரது அரசியல் கவிதைகளிலும் அழகியல் உண்டு என்பது வேறு விஷயம் . ]
கவிஞரின் எட்டாவது கவிதைத் தொகுப்பு இது . அழகியல் என்று பொதுப்படையாக கூறினாலும் கவிஞரைப் பொறுத்தவரை வாழ்வியலே அழகியல் . தொகுப்பில் உள்ள கவிதைகள் அதைத்தான் கூறுகின்றன . 61 கவிதைகளில் காதல் , கடந்த கால நினைவுகள் , இழப்புகள் , இழப்புகளின் எச்சங்கள் , தத்துவங்கள் என்று எல்லாமும் உள்ளன . காமமும் பாடுபொருளாகியுள்ளது ; ஆனால் காமத்தைச் சொல்லும் வார்த்தைகளில் விரசம் கிடையாது . அங்கும் அழகியலே தொக்கி நிற்கின்றது .
வாழ்க்கை தன் அழகை இழந்த நிலையிலும் இருப்பின் எச்சம் அவருக்குள் உள்ளதைச் சொல்லும் கவிதையை இப்படி முடிக்கிறார் -
மீன்காரியின் கை ளையொலியில்
எனக்குக் கேட்கிறதே கடலின்
ஆதி இசை . [ 2 ]
நாம் விரும்பியோ விரும்பாமலோ காலம் ஓடிக் கொண்டுதான் உள்ளது . தடுப்பதற்கு யாரால் இயலும் ? எள்ளலுடன் முடிக்கிறார் ஒரு கவிதையை -
காலத்தை நாம் கடத்துகிறோம்
காலம் நம்மைக் கடத்துகிறது
இந்த ஓயாத விளையாட்டைத்தான்
வாழ்க்கை என கைப்பிள்ளை பொம்மையாய் பற்றிக்
கொண்டிருக்கிறோம்
பற்று விடச் சொன்ன பட்டினத்தார்
சமாதி அருகே . [ 5 ]
நம்மைச் சுற்றிலும் மரணம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் . மரணித்தவர்களின் நினைவுகளை நாம் கையாளும் விதம் குறித்த ஒரு கவிதையின் இறுதிப் பத்தியில் தவிர்க்க முடியாத நிஜத்தை ஓர் உதாரணத்துடன் எளிதாக கடந்து செல்கிறார் -  
எப்படியோ ஒரு நாள் நாமும் தொங்குவோம்
எந்த சஞ்சலமும் இன்றி இவ்வளவையும்
பார்ப்போம்
குருவி பறந்து போன கூட்டை ஒரு காய்ந்த மரம்
பார்ப்பது போல . [ 7 ]
உறவுகள் , நட்புகள் எல்லாமே ஒரு எல்லைக்குள் கட்டுப்படும் மனித தொடர்புகளே என்ற யதார்த்தத்தை நமக்கும் கடத்துகிறார் -
யாரைச் சந்தித்தாலும்
மழை எப்படி என்று பொதுவில் கேட்கற்க .
உனது மழை எப்படி என்ற கேள்வி கேட்டு விட்டு
இடம் கடந்து விடுங்கள்
ஆம்மழையில் கோடி மழை உண்டு . [ 10 ]
பாட்டிகளும் , ஆச்சிகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க இயலாத அங்கமாக இருப்பினும் இழந்துதானே ஆக வேண்டும் . அந்த இழப்பை சுட்டும் ஓர் யதார்த்தமான உவமை -
பாட்டிகள் இல்லா வீதி
பாட்டில்கள் இல்லா சாராயக்கடை . [ 12 ]
பொருள் தேடி ஓடிக் கொண்டிருக்க வேண்டிய இன்றைய சூழலில் இயற்கையை எவ்வளவு தூரம் இரசிக்க இயலாமல் போய் விடுகிறது எனக் காட்டுகிறது வலி கலந்த இந்த வார்த்தைகள் -
முப்பது வயதில் நிலாவைத் தொலைத்தேன் நான்.
பத்து வயது பேரன் இன்னும்
பார்க்கவேயில்லை நிலாவை …….. [ 13 ]
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்றான் ஒரு கவிஞன் . ஆனால் ஜெயதேவனோ பறவையைப் பார்க்கையில் அவரது பார்வை தத்துவப் பார்வையாக மாறி விடுகின்றது – முதல் வாசிப்பில் வரிகளில் இலேசான நெருடல் தோன்றினாலும் மீள் வாசிப்பில் வேறு பார்வை புலப்படத்தான் செய்கிறது .
நீங்கள் எப்போதும் பறவையை
பறவையாகவே பார்க்கிறீர்கள்
மனிதர்களாகப் பார்ப்பதில்லை
ஆனால் பறவை உங்களை எப்போதும்
மனிதர்களாகத்தான் பார்க்கிறது தெரியுமா ? [ 16 ]
வீடுகள் போதாது , வங்கிகள் போதாது , அதையும் தாண்டி இரகசிய நிலவறைகள் , கண்காணாத தீவுகளில் வங்கிக் கணக்குகள் என்று மாய்ந்து மாய்ந்து பொருள் தேடும் உலகில் ஒரு குழந்தையின் மனநிலை வாயிலாக  திருப்தி என்றால் என்னவென்று காட்டும் இந்த வரிகள்தான் தொகுப்பின் உச்சம் – என் பார்வையில் .
ஒரே ஒரு துளிதான் விழுந்தது
அதையும் மழை என்றுதான்
சொல்கிறாள் பேத்தி . [ 42 ]
மீண்டும் ஒரு சிறுமி ; மீண்டும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் – அதுவும் கடலளவு .
கைநிறைய கடல் நுரையை அள்ளி
முகந்து பார்த்தாள் சிறுமி
இப்போது கடல் காணாமல் போய்
விட்டது
கை நுரைக்குள் நூறு கடல்கள் . [ 43 ]
கடந்த கால நினைவுகள் கடந்தவைதான் எனினும் ஏதேனும் வடிவத்தில் நம்முள் உறைந்துதான் போகின்றன இறந்த பாட்டி கையில் தந்து வாங்கிய நாணயம் போல
அரச முத்திரையிட்ட இரண்டு ரூபாய்
நிக்கல் நாணயம் அது
இறந்த பாட்டி கையில் தந்து வாங்கி
அலமாரி உள்ளறையில் வைக்கிறேன்
இப்போது உள்ளறையில் பாட்டியை வைக்கிறேன் . [ 48 ]
நேற்று போல இன்றில்லை ; இன்றைப் போல நாளையிருக்காதுதான் எனினும் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது ஒவ்வொருவர் வாழ்க்கையும் .
ரயில் போய்ச் சேருகிறது ஒருநாள்
காலதேசமற்ற பேரூர்
இடையில் பொங்கிக் கொண்டிருக்கிறது நம்
பாத்திரம் . [ 51 ]
எல்லாக் கவிதைகளுமே தலைப்பில்லாக் கவிதைகள்தான் . எனினும் தொகுதியின் தலைப்பு தாங்கிய கவிதை மனதைத் தட்டிச் செல்கிறது வேறு ஒரு வடிவில் .
நாள் என்பது கடிகாரத்திற்கு வெளியே இருக்கிறது
ஆயினும்
சுவர்க்கோழி போல் கத்திவிட்டு
அடங்கும் கடிகாரம்
மரணத்தின் ஊரிலிருந்து வந்தவன்
தட்டும் கதவு ஒலிதான் . [ 54 ]
எல்லோருமே ஏதோ ஒரு தருணத்தில் கவிஞர்கள்தான் என்பதை கொஞ்சம் எள்ளல் , நிறைய அழகு கலந்து சொல்லும் கவிதை முடியும் வரி -
சந்தேகம் வேண்டாம் நீங்கள் கவிஞனாவதற்கான
பூப்பு உங்களில் பூக்கத் துவங்கிவிட்டது . [ 49 ]
காலை எப்போதுமே அழகுதான் … அதிலும் பனி உதிர்க்கும் காலை …. அழகைத் தவிர வேறு சிலவும் கொண்டுள்ளது கவியின் பார்வையில் -  
பனி உதிர்க்கும் இக்காலைதான்
எவ்வளவு குளிர்மை
எத்தனை அழகு
எத்தனை வெடவெடப்பு
எத்தனை நீர்மை
எத்தனை கனிமை
எத்தனைக் கொடுமை
எத்தனைக் காதலமை
.. பனி உதிர்க்கும் இக்காலைதான்
எத்தனை …….  [ 53 ]

என்னதான் வாழ்வு குறித்த அழகியல் கவிதைகளின் தொகுப்பு எனினும் நிகழ்காலத்து நடப்புகள் குறித்து எழுதாமல் இருக்கவில்லை கவிஞரால் – அது தரும் அச்சம் குறித்து எழுதி முடிக்கிறார் -
இந்த இரவு தனியாய் இருக்கிறது
எனக்கு அச்சமாக இருக்கிறது
என்னைப் பற்றிய அச்சம் என் மனை , மக்களுக்கு
வரும் முன் 
வீடு போய்ச் சேர வேண்டும் பத்திரமாய் …. [ 9 ]
வேகமான வாழ்க்கைப் போக்கில் இழந்தவைகளை அழகியலோடு சொல்லும் இந்தக் கவிதை அவரது வரிகளால் இழப்பை மேலும் பெருவலி தரும் இழப்பாக்குகின்றது . அவர் சொல்ல வந்தது இதுதான் . ஆனால் அதை அவர் சொல்லும் விதம் வேறு வகையில் அழகு .  
புல்லாங்குழல் விற்றவள் பின்னால் வீதி போய்விட்டது ; மல்லிகை விற்றவள் கூடப் போய்விட்டன வீடுகள் ; மாம்பழம் விற்றவள் கூடையில் ஏறிப் போய் விட்டன வாசல் கோலங்கள்இனி வரும்  ‘ னிக்காரன்எவரிடம் போய் விற்பான் ஊரிருந்த தடயம் காணாமல் போன அந்தத் தடத்தில் .  [ 26 ]
தொகுப்பின் இறுதிக் கவிதை ஒருவித ஆழ் சிந்தனைகளோடு கூடிய தத்துவப்பார்வை . அதை கவிஞரின் வரிகளிலேயேதான் வாசித்தால்தான் அதன் ஆழத்தையும் அழகையும் உணர முடியும் . வாசித்துதான் பாருங்களேன் .
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்தான் . எனினும் பிரதி உங்களுக்குமானது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுதலே சரி எனப் படுகிறது .
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பது – இன்றைய அவசர அச்சு உலகில் அபூர்வமாகிப்போன ஒரு விஷயம் . வாசிக்கையில் கண்களை உறுத்தாத எழுத்துருவும் , அழகிய வடிவமைப்பும் கூடுதல் பலம் சேர்க்கின்றன தொகுப்புக்கு .
ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல
ஆசிரியர்ஜெயதேவன்
வெளியீடுசந்தியா பதிப்பகம் , சென்னை
விலைரூ 100 /
தொடர்புக்கு – 9486926886 / 8610280848  
**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக