ஞாயிறு, 1 அக்டோபர், 2023

இன்னொரு கி . ரா .

 


கி . ரா . என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது கி ராஜநாராயணன் தான் . ஆனால் அவர் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னரே இன்னொரு கி. ரா. தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாக இருந்திருக்கிறார் . 

கி . ரா . என்ற பெயரில் எழுதிய கி . ராமச்சந்திரன் . முழுப்பெயர் A . K . ராமச்சந்திரன் . 1935 ல் பி . எஸ் ராமையா மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தபோது அதில் துணை ஆசிரியராக இருந்தவர் . பின்னர் 1939 ல் வெளிவந்த சூறாவளி இதழுக்கு க . நா . சு ஆசிரியர் ; கி . ரா . துணை ஆசிரியர் . மணிக்கொடி கால எழுத்தாளர்கள் அனைவரைப் பற்றியும் இணையத்தில் தகவல்கள் ஓரளவு கிடைக்கின்றன . ஆனால் அந்த கால கட்டத்தில் நிறைய எழுதிக் கொண்டிருந்த கி . ரா . குறித்து எதுவுமே இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது . 

மேலும் 1958 வாக்கில் ஜெமினி ஸ்டூடியோவின் கதை இலாக்காவில் இருந்துள்ளார் . [ உடன் பணி புரிந்தவர்கள் ந . பிச்சமூர்த்தி , அசோகமித்திரன். ஆகியோர் ] ஒளவையார் , வஞ்சிக்கோட்டை வாலிபன் முதலிய படங்களில் பங்களித்துள்ளார் . 

க . நா . சு , வல்லிக்கண்ணன் , ந . பிச்சமூர்த்தி , பி . எஸ் . ராமையா ஆகியோரின் நூல்களில் இவரைப்பற்றி அடிக்கடி குறிப்பிடப் பட்டிருந்தாலும் முழுமையான தகவல்கள் கண்ணில் படவேயில்லை . ஆர் பி . ராஜநாயகம் , கால சுப்ரமணியம் ஆகியோர் முகநூல் பதிவுகளில் இவர் குறித்து எழுதியுள்ளார்கள் . 

காரைச் சித்தர் என்ற சாமியாரின் தீவிர பக்தராகி இவரும் சாமியாராகி விட்டார் என்ற தகவல் எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை .

 


இந்தக் கி . ரா வின் ஒரு சிறுகதைத் தொகுப்பு – “ மாஜி மனைவி “ கலைமகள் காரியாலயம் வெளியீடு . இரண்டாம் பதிப்பு – ஏப்ரல் 1955 ; முதல் பதிப்பு – நவம்பர் 1944 . 

சுமார் 50 வருடங்களுக்கு முன் பூர்வீக வீட்டின் புத்தக அலமாரியில் இருந்து எடுத்துப் படித்த இந்தப் புத்தகத்தை மீண்டும் தேடி எடுத்து படிக்க வைத்தது இந்தக் கி . ரா . குறித்து R . P . ராஜநாயஹம் எழுதியிருந்த முகநூல் பதிவு ஒன்று . மணிக்கொடி , சூறாவளி , ராஷ்டிரவாணி , கலைமகள் ஆகிய இதழ்களில் வெளிவந்த 19 சிறுகதைகளின் தொகுப்பு . ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் . விஷபாணம் கிட்டத்தட்ட ஒரு சயன்ஸ் ஃபிக்க்ஷன் வகை ; ஹாஸ்யப் பத்திரிகாசிரியன் அவலம் கலந்த நகைச்சுவை என்று பல்வேறு விதமான முயற்சிகள் . 

தமிழ் இலக்கிய உலகில் தூக்கிச் சுமக்க யாராவது இல்லாவிடில் எவ்வளவு பிரமாதமான படைப்பாளியும் காலப் போக்கில் காணாமல்தான் போய் விடுவார்கள் போலும் . 

இந்தத் தொகுப்பில் இல்லாத அவரது சிறுகதை ஒன்று கீழே ….

1945 ல் கலைமகள் இதழில் வெளிவந்தது .









 












 

 

செவ்வாய், 15 நவம்பர், 2022

சொர்க்கமும் நரகமும் .

 சொர்க்கமும் நரகமும் . [ ஒரு குட்டிக் கதை ]


ஒரு அமெரிக்க வழக்கறிஞர் , ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி , ஒரு ரஷ்ய தொழிற்சங்கத் தலைவர் மூவரும் ஒரே நேரத்தில் மரணம் அடைந்தார்கள்.  மூவருமே ஒரே நேரத்தில் வானுலகம் போய்ச் சேர்ந்தார்கள் . அங்கே இரு வாசல்கள் பக்கத்துப் பக்கத்தில் . ஒன்று சொர்க்கத்திற்கானது . மற்றொன்று நரகத்திற்கான வாசல் . இரண்டுக்கும் நடுவில் ஒரு தேவ தூதர் – கையில் ஒரு புத்தகத்தோடு .

 

       மூவரும் போய்ச் சேர்ந்த நேரத்தில் அவர்களுக்கு முன்னால் பெரிய வரிசை . இரண்டு வாசல்களுக்கும் ஒரே வரிசைதான் என்பதால் வரிசை மிக நீண்டிருந்தது . தேவதூதர் தன் கையில் இருந்த புத்தகத்தை புரட்டி பார்த்துப் பார்த்து ஒவ்வொருவராக ஏதேனும் ஒரு வாசலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார் . ஒரு வழியாக நம்மாள் மூவரும் தேவதூதன் முன்னால் வந்து விட்டார்கள் .

 

      “ எதை வைத்து வாசலை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் ? “ என்றார் அமெரிக்க வழக்கறிஞர் .

 

      “ ஒவ்வொருவர் செய்த பாவ புண்ணியங்களின் விபரங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது . அதன் அடிப்படையில் சொர்க்கமும் , நரகமும் தீர்மானிக்கப் படுகிறது “ என்றார் தேவ தூதர் .

 

             ”இல்லை , உங்களது செயல் பாரபட்சமாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் . “ என்றார் ரஷ்யர் .

 

     “ ஏன் அப்படி கருதுகிறீர்கள் ? “ தேவதூதர் குழப்பத்துடன் கேட்டார் .

 

     ”  காத்திருந்த நேரத்தில் நான் சேகரித்த புள்ளி விபரப் படி  99.927 சதவிகித இந்தியர்களை நீங்கள் சொர்க்கத்திற்கு அனுமதித்திருக்கிறீர்கள் . ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை அந்த சதவிகிதம் மிக மிக கம்மியாக உள்ளது . உண்மையில் பார்க்கப் போனால் மற்ற எல்லா நாட்டவர்களுக்கும் சேர்த்து அந்த சதவிகிதம் வெறும் 0.008 தான் “ என்றார் ஜெர்மானிய விஞ்ஞானி .

 

     “ இதை நாங்கள் பலமாக ஆட்சேபிக்கிறோம் . ஒரு போராட்டம் நடத்தப் போகிறோம் . “ என்று குரலை உயர்த்தினார் ரஷ்யர் .

 

     “ உங்களது செயல் பாரபட்சமானது . அதற்கான சரியான காரணம் தெரியும் வரை நாங்கள் உள்ளே போக மாட்டோம் . “ அமெரிக்கர் விரலை உயர்த்தி பேசினார் .

 

     சற்று நேரம் திகைத்துப் போயிருந்த தேவதூதர் மிக மெல்லிய குரலில் பதில் கூறினார் . “ அய்யா , நாங்கள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கும் அத்தனை இந்தியர்களும் அந்த நாட்டில் சாதாரணப் பிரஜைகளாக இருந்தவர்கள் . பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நரக வாழ்க்கையே வாழ்ந்து விட்டார்கள் . பாவம் , இங்கு வந்தாவது சொர்க்க வாழ்வை அனுபவிக்கட்டுமே என்று தேவன் இந்த சலுகையை வழங்கியுள்ளார் . அவ்வப்போது நரகத்திற்குள் அனுப்பப்படும் இந்தியர்கள் அந்த நாட்டு அரசியல்வாதிகள் . “

 

     தேவதூதனின் பதிலைக் கேட்ட மூவரும் மறுபேச்சின்றி அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த வாசலுக்குள் நுழைந்து விட்டனர் .

------------------------------------------------------------------------          



திங்கள், 7 நவம்பர், 2022

“ அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும் ”

 அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்    -  கவி . வளநாடன் 

  பன்முகப் பதிவுகளின் தொகுப்பு   வாசிப்பு அனுபவம் 



சூழல் காரணமாக இன்று நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அநேகமாக நம்மில் பலரும் பிறந்து , வளர்ந்தது கிராமங்களாகத்தான் இருக்கும் . அந்த கிராமங்களின் முகங்களும் இன்று மாறிப் போயிருக்கலாம் . எனினும் பிறந்து வளர்ந்த கிராமங்கள் குறித்த நினைவுகளை அசை போடுதல் ஓர் இனிய அனுபவமே . ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு அந்த மண்ணின் மணத்தையும் , அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் மன வாசத்தையும் அதன் மூலத்தன்மை மாறாது வெளிப்படுத்த இயலும் என்பது கேள்விக் குறியே . அதில் உண்மையான வெற்றி பெற்றுள்ளார் வளநாடன் என்பதை அவரது இந்தத் தொகுப்பு நிரூபிக்கிறது என்றே உணர்கிறேன் .

 

கிராமத்தில் பிறந்து , நகரத்திற்கு குடியேறி , இன்று எங்கோ தொலைதூரத்தில் வசித்தாலும் , பிறந்து வளர்ந்த மண்ணின் நினைவுகளையும் , அந்த மண்ணின் உறவுகளையும் , நட்புகளையும் குறித்த நினைவுகளையும் தனது பதிவுகளின் மூலம் கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் வளநாடன் . வாசித்து முடித்து பல நாட்களாகியும் , அவர் பகிர்ந்து கொண்டுள்ள கிராம வாசம் இன்னும் என் மனதிலேயே தங்கி இருப்பது அவரது எழுத்தாற்றலின்  வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும் .

 

அவரை எப்படி அறிமுகப்படுத்துவதென்றுதான் தெரியவில்லைஎனத் தொடங்கி அவர் அறிமுகப்படுத்தும் காளிமுத்து , அந்த முதல் பதிவைப் படித்து முடிக்கையில் நமக்கும் மச்சானாகிதான் விடுகிறார்அதுவும் அன்பான மச்சானாக .

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் அறிமுகப்படுத்தும் வெள்ளந்தி மனிதர்கள் குறித்த நினைவுகள் மூலம் வாசிக்கும் நம்மிடையே அவர்களை நேரில் உலவ விட்டிருக்கிறார் வளநாடன் .

 

யூசுப் அத்தா , கீழக்கோட்டையார் , , மீனா அத்தாச்சி , தென்கரைப் பூசாரி , வெள்ளையம்மா , கடியாப்பட்டிக் கிழவி , வையாபுரிச் சித்தப்பா , வேம்பத்தூர் கிழவி , துள்ளூட்டியாரு , பாலாமணி அத்தை , கனவில்கூட ஒன்றாகவே வந்துபோகும் மாரியப்பச் செட்டியார் , ரஜாக் பெரியப்பா , அல்போன்ஸ் வாத்தியார் கூட்டணி , அன்னபூரணி அயித்தை , துரைசாமிப் பெரிசு , கீதாரியப்பு , திருவாயி அத்தை , சரவணன் பெரியப்பா ……..அப்பப்பா ! எத்தனை மனிதர்கள் வளநாடன் வாழ்வில் ஊடும் பாவுமாக . அவர் கிராமத்தில் வளரவில்லை …… வாழ்ந்திருக்கிறார் .

 

முனியாண்டித் திடல் , திருவாடானைச் சாலை , கயிற்றுக்கேணி மேடு , சின்ன மாதா கோவில் , மாரியம்மன் மேடை , மசூதி விளக்குத் தூண் , அரச மரத்தடிப் பிள்ளையார் ….. இன்னும் பல இடங்களில் அவர் உலவ விட்டிருக்கும் கிராமத்து மனிதர்களைப் பற்றி மீளக் கூறக் கூட இயலாது என்னால் . அந்த மண்ணின் வாசனையையும் , மனிதர்களின் நேசிப்பு மிக்க மன அழகுகளையும் அவரது வார்த்தைகளை வாசிப்பதின் மூலம் மட்டுமே உணர இயலும் . வட்டார வழக்கும் , எள்ளலும் , துள்ளலும் , கவித்துவமும் கலந்து கட்டிய பதிவுகள் அத்தனையும் . மனித இனத்திற்கேயுரிய போட்டி , பொறாமைகள் இருப்பினும் அதையும் மீறி அன்பால் நிரம்பி வழியும் கிராம வாழ்வின் அழகை , அழகாக எடுத்துச் சொல்லும் பதிவுகள் அத்தனையும் . பெயரில் கவி இணைந்திருந்தாலும் , ஓரிரு பதிவுகள் மட்டுமே கவிதைகளாக . மீதி அனைத்துமே கவித்துவமான உரைநடையில்தான்அதுவும் வட்டார வழக்கில் சுவை சொட்டச் சொட்ட .

 

வழக்கம்போல் அணிந்துரைக்காமல் , முன்னுரைக்காமல் அவருக்கேயுரிய பாணியில் நட்புரைத்திருக்கும் கவிஞர் ஜெயதேவனின் அறிமுகம் நூலுக்கு கனம் கூட்டுகிறது .

 

ஒரு பருக்கையாவது பதம் காட்டாமல் எப்படி முடிப்பது இந்தப் பதிவை ? அதற்காகவே பக்கம் 54 மட்டும் கீழே …..

சூனாப் பானா வீட்டுச் சுரைக்கொடி படர இடம் தேடியலைந்து

காணாப் பேணா வீட்டுப் பந்தல்கால் வழி நுழைந்து பூத்திருக்க ….

இதுல சூனாப் பானாவுக்கும்

காணாப் பேணாவுக்கும் வராத பொறாமை

வீணாப் போனவங்களுக்குதான் வருது .           

 

நூலின் தலைப்பு -  அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்    

ஆசிரியர் கவி . வளநாடன் .

வெளியீடுஇருவாட்சி [ இலக்கியத் துறைமுகம் ] , சென்னை .

விலைரூ . 90 /

--------------------------------------------------------------------------------------------