“ அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும் ” - கவி . வளநாடன்
பன்முகப் பதிவுகளின் தொகுப்பு வாசிப்பு அனுபவம்
சூழல் காரணமாக இன்று நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அநேகமாக நம்மில் பலரும் பிறந்து , வளர்ந்தது கிராமங்களாகத்தான் இருக்கும் . அந்த கிராமங்களின் முகங்களும் இன்று மாறிப் போயிருக்கலாம் . எனினும் பிறந்து வளர்ந்த கிராமங்கள் குறித்த நினைவுகளை அசை போடுதல் ஓர் இனிய அனுபவமே . ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு அந்த மண்ணின் மணத்தையும் , அந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் மன வாசத்தையும் அதன் மூலத்தன்மை மாறாது வெளிப்படுத்த இயலும் என்பது கேள்விக் குறியே . அதில் உண்மையான வெற்றி பெற்றுள்ளார் வளநாடன் என்பதை அவரது இந்தத் தொகுப்பு நிரூபிக்கிறது என்றே உணர்கிறேன் .
கிராமத்தில் பிறந்து , நகரத்திற்கு குடியேறி , இன்று எங்கோ தொலைதூரத்தில் வசித்தாலும் , பிறந்து வளர்ந்த மண்ணின் நினைவுகளையும் , அந்த மண்ணின் உறவுகளையும் , நட்புகளையும் குறித்த நினைவுகளையும் தனது பதிவுகளின் மூலம் கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் வளநாடன் . வாசித்து முடித்து பல நாட்களாகியும் , அவர் பகிர்ந்து கொண்டுள்ள கிராம வாசம் இன்னும் என் மனதிலேயே தங்கி இருப்பது அவரது எழுத்தாற்றலின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும் .
“ அவரை எப்படி அறிமுகப்படுத்துவதென்றுதான் தெரியவில்லை “ எனத் தொடங்கி அவர் அறிமுகப்படுத்தும் காளிமுத்து , அந்த முதல் பதிவைப் படித்து முடிக்கையில் நமக்கும் மச்சானாகிதான் விடுகிறார் – அதுவும் அன்பான மச்சானாக .
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பதிவிலும் அறிமுகப்படுத்தும் வெள்ளந்தி மனிதர்கள் குறித்த நினைவுகள் மூலம் வாசிக்கும் நம்மிடையே அவர்களை நேரில் உலவ விட்டிருக்கிறார் வளநாடன் .
யூசுப் அத்தா , கீழக்கோட்டையார் ,
, மீனா அத்தாச்சி , தென்கரைப் பூசாரி , வெள்ளையம்மா , கடியாப்பட்டிக் கிழவி , வையாபுரிச் சித்தப்பா , வேம்பத்தூர் கிழவி , துள்ளூட்டியாரு , பாலாமணி அத்தை , கனவில்கூட ஒன்றாகவே வந்துபோகும் மாரியப்பச் செட்டியார் , ரஜாக் பெரியப்பா , அல்போன்ஸ் வாத்தியார் கூட்டணி , அன்னபூரணி அயித்தை , துரைசாமிப் பெரிசு , கீதாரியப்பு , திருவாயி அத்தை , சரவணன் பெரியப்பா ……..அப்பப்பா ! எத்தனை மனிதர்கள் வளநாடன் வாழ்வில் ஊடும் பாவுமாக . அவர் கிராமத்தில் வளரவில்லை …… வாழ்ந்திருக்கிறார் .
முனியாண்டித் திடல் , திருவாடானைச் சாலை , கயிற்றுக்கேணி மேடு , சின்ன மாதா கோவில் , மாரியம்மன் மேடை , மசூதி விளக்குத் தூண் , அரச மரத்தடிப் பிள்ளையார்
….. இன்னும் பல இடங்களில் அவர் உலவ விட்டிருக்கும் கிராமத்து மனிதர்களைப் பற்றி மீளக் கூறக் கூட இயலாது என்னால் . அந்த மண்ணின் வாசனையையும் , மனிதர்களின் நேசிப்பு மிக்க மன அழகுகளையும் அவரது வார்த்தைகளை வாசிப்பதின் மூலம் மட்டுமே உணர இயலும் . வட்டார வழக்கும் , எள்ளலும் , துள்ளலும் , கவித்துவமும் கலந்து கட்டிய பதிவுகள் அத்தனையும் . மனித இனத்திற்கேயுரிய போட்டி , பொறாமைகள் இருப்பினும் அதையும் மீறி அன்பால் நிரம்பி வழியும் கிராம வாழ்வின் அழகை , அழகாக எடுத்துச் சொல்லும் பதிவுகள் அத்தனையும் . பெயரில் கவி இணைந்திருந்தாலும் , ஓரிரு பதிவுகள் மட்டுமே கவிதைகளாக . மீதி அனைத்துமே கவித்துவமான உரைநடையில்தான் – அதுவும் வட்டார வழக்கில் சுவை சொட்டச் சொட்ட .
வழக்கம்போல் அணிந்துரைக்காமல் , முன்னுரைக்காமல் அவருக்கேயுரிய பாணியில் நட்புரைத்திருக்கும் கவிஞர் ஜெயதேவனின் அறிமுகம் நூலுக்கு கனம் கூட்டுகிறது .
ஒரு பருக்கையாவது பதம் காட்டாமல் எப்படி முடிப்பது இந்தப் பதிவை ? அதற்காகவே பக்கம் 54 மட்டும் கீழே …..
சூனாப் பானா வீட்டுச் சுரைக்கொடி படர இடம் தேடியலைந்து
காணாப் பேணா வீட்டுப் பந்தல்கால் வழி நுழைந்து பூத்திருக்க ….
இதுல சூனாப் பானாவுக்கும்
காணாப் பேணாவுக்கும் வராத பொறாமை
வீணாப் போனவங்களுக்குதான் வருது .
நூலின் தலைப்பு - ” அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும் “
ஆசிரியர் – கவி . வளநாடன் .
வெளியீடு
– இருவாட்சி [ இலக்கியத் துறைமுகம் ] , சென்னை .
விலை
– ரூ . 90 /
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக